தேடுதல்

கிறிஸ்து மீட்பர் நினைவுச்சின்னம் பிரேசில் கிறிஸ்து மீட்பர் நினைவுச்சின்னம் பிரேசில் 

துன்புறும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் சிவப்பு புதன்கிழமை

துன்புறும் அனைத்து கிறிஸ்தவர்களையும் நவம்பர் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட புதன்கிழமை அன்று நினைவுகூரும் வகையில் RedWednesday, 23ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல்கள் இன்னும் அதிகரித்து வருகின்றது என்றும், உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புறும் கிறிஸ்தவ மக்களை நினைவுகூரும் விதமாக நவம்பர் 23ஆம் தேதி சிவப்பு புதன் கிழமை கொண்டாடப்பட இருக்கின்றது என்றும் ACN எனப்படும் தேவையில் இருக்கும் தலத்திருஅவைகளுக்கு உதவும் அமைப்பு அறிவித்துள்ளது.

நவம்பர் 21ஆம் தேதி திங்கள் கிழமை பாப்பிறை அறக்கட்டளையின் உதவியுடன் இயங்கும் ACN எனப்படும் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 24 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 18 நாடுகளில் கிறிஸ்தவர்கள் மீதான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்களின் மத சுதந்திரம் மற்றும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகளவில் நவம்பர் மாதத்தின் ஒரு வாரம் சிவப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டு அவ்வாரத்தின் புதன்கிழமை உலகின் முக்கியமான பகுதிகளில் துன்பத்தின் அடையாளமாக சிவப்பு விளக்குகள் ஒளிர்விக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இத்தாலி நாட்டின் திரேவி நீரூற்று
இத்தாலி நாட்டின் திரேவி நீரூற்று

2015ஆம் ஆண்டு பிரேசில் நாட்டு ACN அலுவலகத்தில் ஈராக்கில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் கிறிஸ்து மீட்பர் நினைவுச்சின்னம் சிவப்பு நிறத்தில் எரிந்தது தான் இந்நிகழ்விற்கு அடிப்படைக் காரணம் என்றும், இதன் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்தாலியில் உள்ள ACN அமைப்பு இத்தாலியில் உள்ள திரேவி நீரூற்றை சிவப்பு விளக்குகளால் ஒளிர்வித்தது என்றும் கூறியுள்ளது ACN அமைப்பு.

பிரிட்டனின் ACN அமைப்பு இந்த முயற்சியை மேலும் பரவலாக்கும் வண்ணம், துன்புறுத்தப்பட்ட அனைத்து கிறிஸ்தவர்களையும் நவம்பர் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட புதன் அன்று நினைவுகூரும் வகையில் #RedWednesday என்பதை உருவாக்கியது. இதன் பயனாக உலக மக்கள்  இன்று பல நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களை ஒரு வாரம் முழுவதுமாக நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கின்றனர். 

2022 நவம்பர் மாதம் 23ஆம் தேதி கடைபிடிக்கப்படும் இந்நாள், உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதங்களில் சிறப்பிக்கப்படுகின்றது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் பத்து பேராலயங்கள் சிவப்பு நிற விளக்கொளி வீசுவதுடன், முழு இரவு செபமும் சில ஆலயங்களில் நிகழ்த்தப்பட உள்ளன.

மேலும் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடி, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் நாடுகளின் பாரம்பரிய உணவைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. துன்பப்படும் தலத்திருஅவைகள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து செபம் மற்றும் நிதி திரட்டும் செயல்களும் இந்நாளில் நடைபெறுகின்றன.

தொடரும் கிறிஸ்தவர்களின் இத்தகைய துன்ப நிலையால் மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், ஈராக், சிரியா, லெபனான், ஆசியா, மற்றும் ஆப்ரிக்கா, என பல நாடுகளில் உள்ள  துன்புறும் கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் சொந்த நாடுகளை விட்டு குடிபெயர்ந்து வேறு நாடுகளுக்குச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2022, 12:28