திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 2ம் ஜூலியஸ். – பகுதி 2
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நேயர்களே! திருத்தந்தையாக பலமுறை முயன்றும் வெற்றிகாண முடியாமல், ஒரு திருத்தந்தையை தன் கைப்பொம்மையாக வைத்து நிர்வாகத்தில் தலையிட்டவர், மற்றும் இரண்டு திருத்தந்தையர்களின்கீழ் இருக்கமுடியாமல் பிரான்சிற்கு ஓடிப்போய், அந்நாட்டு மன்னரோடு இணைந்து திருத்தந்தைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் என பல்வேறு குறைபாடுகள் கொண்டிருந்தும், பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கி 1503ஆம் ஆண்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் வரலாற்றில் மிகக்குறுகிய காலத்தில் இடம்பெற்ற திருத்தந்தையர் தேர்தல் என வரலாற்று ஆசிரியர்கள் உரைக்கின்றனர். இன்று அவரின் நிர்வாகம் குறித்து காண்போம்.
ஏற்கனவே கர்தினாலாக இருந்தபோது இராணுவத்திற்கு தலைமை தாங்கி ஒரு போர் வீரனாய் வெற்றிகளைக் கண்ட திருத்தந்தை 2ம் ஜூலியஸ், அதே போக்கினைத் தொடர்ந்தார் என்றுதான் கூறவேண்டும். திருப்பீடத்திற்குச் சொந்தமான Romagna பகுதியின் சில பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருந்த வெனிசுக்கு எதிராகப் போர் தொடுத்து வெற்றியும் கண்டார். திருப்பீடத்திற்கு எதிராக புரட்சிசெய்த பெருஜியா, மற்றும் பொலோஞ்ஞா நகர்களுக்கு எதிராக, தானே தலைமை தாங்கி படைகளை வழிநடத்தி வெற்றியும் கண்டார் திருத்தந்தை 2ம் ஜூலியஸ். இப்போது திருப்பீடத்தின் சொத்துக்கள் பிற அரசின் கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இவரின் கீழ்வந்தன. ஆனால் இவரின் ஆசை அதையும் தாண்டிச்சென்றது. அதாவது இத்தாலி முழவதையும் வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பதே இவரின் ஆவல். முதலில் பிரான்சின் ஆதிக்கத்தை எதிர்த்து இவர் போராட வேண்டியிருந்ததால் பேரரசர் Maximilian இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி, இஸ்பெயினின் Ferdinand ஆகியோரின் உதவியை நாடினார். ஆனால் இவருக்குச் சாதகமான பதில் கிட்டவில்லை. இவ்வேளையில் சுவிஸ் நாடும் வெனிசும் இவருக்கு உதவ முன்வந்தன. பிரெஞ்சு மன்னர் 12ஆம் லூயி, பிரான்சின் Tours நகரில் 1510ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயர் பேரவையைக் கூட்டி, திருத்தந்தைக்கு தலத்திருஅவை பணியாது என மிரட்டினார். எதைக் குறித்தும் கவலைப்படாத திருத்தந்தை 2ஆம் ஜூலியஸ், தன் படைக்குத் தலைமை தாங்கி வட இத்தாலி நோக்கிப் பயணமானார்.
1510ஆம் ஆண்டு இவர் பொலோஞ்ஞா நகரை அடைந்தபோது கடும் நோயால் தாக்கப்பட்டார். பிரெஞ்ச் படைகள் இவரைக் கைது செய்ய வந்துகொண்டிருந்த வேளையில், உடனடியாக வெனிஸ் படை புகுந்து இவரைக் காப்பாற்றியது. 1511ஆம் ஆண்டு சனவரி 20ஆம் தேதி Mirandola நகருக்கு எதிராக இவர் படையெடுத்து அதைக் கைப்பற்றினார். அதற்கு 4 மாதங்களுக்குப்பின் பொலோஞ்ஞா நகர்வந்து பாப்பிறைப் படைகளை விரட்டியடித்து நகரைக் கைப்பற்றியது பிரெஞ்ச் படை. இதனைக் கேள்விப்பட்ட திருத்தந்தை, பல அரசர்களின் உதவியை நாடினார். ஆனால், அரசர்களின் உதவி கிட்டாதது மட்டுமல்ல, பிரெஞ்ச் ஆதரவாளர்களான சில கர்தினால்களும் திருத்தந்தையிடமிருந்து விலகிச் சென்றனர். 1511ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் நோயுற்றார் திருத்தந்தை 2ஆம் ஜூலியஸ். இவ்வேளையில் பேரரசர் Maximilianனின் மனதில் ஒரு குரூர எண்ணம் தோன்றியது. தானே திருத்தந்தை பதவியை எடுத்துக்கொண்டால் என்ன என்பதே அது. ஆனால், அது நிறைவேறவில்லை. ஏனெனில், இறந்துவிடுவார் என எண்ணிய திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் பிழைத்துக்கொண்டார். பிரான்சின் பிடியிலிருந்து இத்தாலியை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வெனிஸ், இஸ்பெயின், பேரரசர் Maximilian, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவர்களுடன் இணைந்து 1512ஆம் ஆண்டு எப்ரல் 11ல் ரவென்னா நகரில் பிரெஞ்ச் படைகளை தோற்கடித்து நாட்டைவிட்டே வெளியேற்றினார்.
திருடப்பட்ட உடைமைகளை அரசுகளின் பிடியிலிருந்து விடுவித்து ஒரே தலைமையின்கீழ் கொணர்ந்தவர், மற்றும் இத்தாலியை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவித்தவர் என வரலாற்றில் அறியப்படுகின்றார் திருத்தந்தை 2ம் ஜூலியஸ். அதேவேளை, திருஅவையின் ஆன்மீகத் தலைவருக்குரிய தன் கடமைகளையும் இவர் மறந்துவிடவில்லை. தன் உறவினர்களுக்கு எவ்விதச் சலுகைகளையும் இவர் வழங்கவில்லை. தினசரி திருப்பலியில் இவர் பங்கேற்கத் தவறியதே இல்லை. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க கண்டத்தின் ஹெயிட்டி, சான் தொமிங்கோ, போர்த்தோ ரிக்கோ ஆகியவைகளில் மறைமாவட்டங்களை உருவாக்கியவர் இவரே. அடிப்படையில் ஒரு பிரான்சிஸ்கன் துறவியான இவர், தன் பாப்பிறை பதவி காலத்தில் பல துறவுமட சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். இவர்தான், திருஅவையின் பல தவறான நடவடிக்கைகளைக் களையும் நோக்கத்தில் 1512ஆம் ஆண்டு, 5ம் இலாத்ரன் பொதுச்சங்கத்தைக் கூட்டியவர்.
திருத்தந்தை 2ம் ஜூலியஸ் போரில் மட்டுமல்ல, கலைகளிலும் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. சிறிய கட்டடமாக இருந்த புனித பேதுரு பெருங்கோவிலை, இன்றிருக்கும் மிகப் பிரமாண்ட பெருங்கோவிலாக மாற்றுவதற்கு 1506ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அடிக்கல் நாட்டியவர் திருத்தந்தை 2ம் ஜூலியஸே. இவருடைய ஆதரவில்தான் பிரபல கலைஞர்கள் பிரமாந்தே (Bramante), மைக்கலாஞ்சலோ, இரபேல் போன்றோர் தங்கள் உன்னத கலை வடிவங்களை உருவாக்கினர். சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகழ்வாய்ந்த ஓவியங்கள் இத்திருத்தந்தையின் காலத்தில்தான் மைக்கலாஞ்சலோவால் வரையப்பட்டன. உலகப் புகழ் வாய்ந்த மோசே பளிங்குச் சிலையை இவர் காலத்தில்தான் மைக்கலாஞ்சலோ செதுக்கினார். பலமுறை திருத்தந்தையாக முயற்சிசெய்து, இறுதியில் திருத்தந்தையாகி ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் மூன்று மாதம் திருஅவையை வழி நடத்திய திருத்தந்தை 2ம் ஜூலியஸ், அனைத்துத் துறைகளிலும் தன் சிறிய முத்திரையைப் பதித்தவராய் 1513ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதிக்கும் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் இறைபதம் சேர்ந்தார்.
நேயர்களே! திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸுக்குப்பின் 1513ஆம் ஆண்டு திருத்தந்தையாகப் பொறுப்பேற்று 1521ஆம் ஆண்டுவரை திருஅவையை வழி நடத்திய திருத்தந்தை 10ஆம் லியோ குறித்து வரும் வாரம் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்