திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 7ஆம் கிளமென்ட்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஜூலியோ தெ மெதிச்சி (GIULIO DE’ MEDICI) என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை 7ஆம் கிளமென்ட் 1478ஆம் ஆண்டு பிறந்தார். ஜொவான்னி தெ மெதிச்சி (Giovanni de' Medici) என்ற இவரின் நெருங்கிய உறவினர் திருத்தந்தை 10ஆம் லியோ என்ற பெயரில் பொறுப்பேற்றபோது இவருக்குப் பலவிதமான சலுகைகள் வழங்கப்பட்டன. 1513ஆம் ஆண்டு 35ஆம் வயதில் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, திருஅவையின் கொள்கைகளை அகில உலகத் தலத்திருஅவைகளுக்கும் எடுத்துச் சொல்வதில் சிறப்புப் பணியாற்றினார். திருத்தந்தை 6ஆம் ஏட்ரியனைத் தேர்ந்தெடுத்த குழுவில் இவர் இடம்பெற்றபோது இவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என பலரும் எதிர்பார்க்கும் அளவுக்கு இவர் பிரபலமாக இருந்தார். திருத்தந்தை 6ஆம் ஏட்ரியன் இறந்தபோது (1523 செப்டம்பர் 14) இவர் பெயர்தான் முன்னிலையில் இருந்து, திருத்தந்தையாக 1523ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருத்தந்தையானதில் மக்களுக்கும் பெரு மகிழ்ச்சி. ஆனால், ஒரு சிக்கலான காலகட்டத்தில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்.
இவர் பதவியேற்ற காலத்தில் மன்னர் முதலாம் பிரான்சிஸுக்கும் பேரரசர் 5ஆம் சார்லஸ்க்கும் இடையே போர் நடந்துகொண்டிருந்தது. அரசியல் விவகாரங்களில் தலையிட்டு இருதரப்பினரிடையேயும் மாறி மாறி பேசிவந்ததால் சில வேளைகளில் இருவரின் பகையையும் சம்பாதித்துக் கொண்டார் திருத்தந்தை. ஒரு தரப்பினர் வத்திக்கானை சூறையாடிய சம்பவமும், Castle San Angelo கோட்டையில் திருத்தந்தையை சிறைவைத்த சம்பவமும் இடம்பெற்றது. அக்குழுவினருக்கு பேரரசர் சார்ல்ஸின் படைகள் உதவியபோதிலும், தனக்கு அதில் உடன்பாடில்லை என பேரரசர் அறிவித்தார். இதனால் பேரரசருடன் வருத்தமும், பின்னர் அமைதி, மீண்டும் மோதல் என திருத்தந்தைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான உறவு தொடர்ந்தது. இதற்கிடையில், ஜெர்மன் லூத்ரன்களின்(protestant) தாக்குதலும் உரோம் நகரில் இடம்பெற்றது. இதெல்லாம் போதாதென்று, இங்கிலாந்து மன்னருக்கும் திருஅவைக்கும் இடையேயான மோதல் துவங்கியது. ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை, இங்கிலாந்தில் தோன்றிய வரலாறுதான் அது. இவரின் நெருங்கிய உறவினர் திருத்தந்தை பத்தாம் லியோவின் காலத்தில் லூத்ரன்-கத்தோலிக்க முரண்பாடு தலைதூக்கியிருக்க, இவர் காலத்திலோ, இங்கிலாந்து திருஅவைக்கும்–கத்தோலிக்கத்திற்கும் இடையே முரண்பாடு வெளிப்படையாக உருவாகியது.
இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி, தன் சகோதரரின் விதவை காத்ரீனை திருமணம் செய்திருந்தார். ஆனால், அவருக்கு ஆண் குழந்தை வாரிசு இல்லாததால் Anne Boleyn என்பவரை திருமணம் செய்ய விரும்பினார். முதலில் காத்ரீனை மணமுறிவு செய்தால்தான் மறுமணம் செய்ய முடியும். அதற்கு திருஅவையிடமிருந்து மணமுறிவு பெறவேண்டும். ஆனால், பேரரசர் 5ம் சார்லஸின் நெருங்கிய உறவினராக காத்ரீன் இருந்ததால், சார்லஸையும் பகைத்துக் கொள்ள முடியாது, மன்னர் எட்டாம் ஹென்றியின் விண்ணப்பத்தையும் ஒதுக்கமுடியாது. இத்தகைய ஒரு நிலையில், திருச்சட்டப் படிப்பினைகளின் வழி சென்று, மணமுறிவளிக்க தயக்கம் காட்டினார் திருத்தந்தை. இதற்கிடையே, திருத்தந்தை நிறுவிய குழுவின் தீர்ப்பு வரும் முன்னரே Anne Boleynஐ இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார் மன்னர் எட்டாம் ஹென்றி. அது மட்டுமல்ல, திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு எதிராக அபராதங்களையும் விதித்தார். இவ்வேளையில் புதிதாக நியமிக்கப்பட்ட கான்டர்பரி பேராயர் Thomas Cranmer, 1533ஆம் ஆண்டு மே மாதம் மன்னர் ஹென்றிக்கும் அன்னி போலினுக்கும் இடையேயான இரகசிய திருமணத்தை அங்கீகரித்தார். இதற்கு திருத்தந்தையின் அனுமதி பெறவில்லை.
மன்னரின் பரிந்துரையின்பேரில் பதவியேற்ற பேராயர், வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையிலேயே, திருத்தந்தைக்குத் தெரியாமலேயே இதனைச் செய்தார். இதனால் Anne Boleyn, ஜூன் மாதம் முதல் தேதியே மன்னரின் மனைவி என்ற நிலையில் அரசியாக முடிசூட்டப்பட்டார். இதற்குப் பிறகுதான் திருத்தந்தை கிளமென்ட், மன்னர் ஹென்றியை திருஅவையிலிருந்து விலக்கி வைக்கிறார். அது மட்டுமட்டுமல்ல, காத்ரினுக்கும் ஹென்றிக்கும் இடையே பேராயர் கிரான்மரால் வழங்கப்பட்ட திருமண விலக்கு செல்லாது என்றும், அன்னி பொலினுடன் ஆன மன்னரின் திருமணமும் செல்லுபடியாகாது எனவும் அறிவிக்கிறார் திருத்தந்தை. இங்கிலாந்திற்கான திருப்பீடத் தூதர் திருப்பி அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பீடத்திற்கும் இங்கிலாந்திற்கும் இடையான அரசியல் உறவுகள் முறிவடைந்தன. இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருந்த ஹென்றியின் முதல் திருமணம் குறித்த விசாரணைகள் 1534ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் வெளியிடப்பட்டன. அதன்படி, மன்னர் ஹென்றிக்கும் கத்ரீனுக்கும் இடையே நடந்த திருமணம் முறையானது, அதாவது, மன்னரின் முதல் திருமணம் மீறமுடியாததென அறிவிக்கப்பட்டது. இதெல்லாம் நடந்தது திருத்தந்தை 7ஆம் கிளமென்டின் காலத்தில். சிறந்த நிர்வாகியான இத்திருத்தந்தை பல்வேறு எதிர்ப்புக்களையும், சிறைவாசங்களையும் அனுபவித்தாலும், தனிப்பட்ட முறையில் சிறந்த ஒழுக்க சீலராக, நிர்வாகியாக இருந்தார். இவர் 1534ம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்