திருவருவகைக் காலம் முதல் ஞாயிறு:'விழிப்புணர்வே விடியலைத் தரும்'!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 2: 1-5 II. உரோ 13: 11-14 III. மத் 24: 37-44)
பூமியில் இறந்த மக்கள் வரிசையாக மேல் உலகம் சென்று கொண்டிருந்தார்கள். அங்கே கடவுள் மனிதர்களை சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார். "நாம சொர்க்கத்துக்குப் போகப் போறோமா இல்ல நரகத்துக்குப் போறோமா" என்று எல்லோரும் பயந்து பயந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு செல்வந்தன் மட்டும் பயமில்லாமல் மகிழ்ச்சியோடு இருந்தான். அவனிடம் ஒருவர், "நாங்களெல்லாம் சொர்க்கமா நரகமானு தெரியாம பயந்துகிட்டு இருக்கோம். நீ மட்டும் பயமில்லாம இருக்கியே எப்படி?" என்று கேட்க, "நான் பூமில வாழ்ந்த காலத்துல கடவுளுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்ந்திருக்கேன். அதனால கண்டிப்பா நான் சொர்கத்துக்குத் தான் போவேன், எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றான். செல்வந்தன் கடவுளை பார்க்க வேண்டிய நேரம் வந்தது. கடவுள் அவனை பார்த்ததும், "இவனை நரகத்துக்கு அனுப்புங்கள்" என்று சொல்ல அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது." “கடவுளே என்ன ஏன் நரகத்துக்கு அனுப்புறீங்க. உங்களுக்காக நிறைய கோவில் கட்டியிருக்கேன். பல கோவில்ல திருவிழாக்கள் நடத்த பணத்தை வாரி வாரி கொடுத்திருக்கேன். அது மட்டுமல்லாம உங்க சிலையை தங்கத்தால் செய்து கோவிலுக்குக் குடுத்திருக்கேன்” என்று அச்செல்வந்தன் தான் செய்தவற்றை அடுக்கிக்கொண்டே போக, "போதும் நீ பேசுறத நிறுத்து” என்றார் கடவுள். எனக்காக இவ்வளவு செய்த நீ, ஏழை எளிய மக்கள் பஞ்சம், பசி பட்டினி, நோய்நொடிகளால் வாடியபோதும், போர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் இலட்சக்கணக்கில் அவர்கள் இடம்பெயர்ந்து சென்றபோதும் நீ அவர்களுக்காக ஒன்றுமே செய்யவில்லையே. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு எனக்குக் கோவில் கட்டுவதாலோ அல்லது திருவிழாக்கள் நடத்துவதாலோ என்ன பயன்? என்னைப் பொறுத்தளவில் நீ செய்த அனைத்து செயல்களுமே இருளுக்குரிய செயல்கள்தான்” என்று கடிந்துகொண்டார். அப்போது அப்பணக்காரன், “கடவுளே, என்னை மன்னித்து விடுங்கள், நான் செய்த செயல்கள் குறித்து விழிப்பாக இல்லாமல் இருந்துவிட்டேன்” என்று கடவுளை நோக்கிக் கதறி அழுதான். அதற்குக் கடவுள், “இறுதி நேரத்தில் உணர்ந்து ஒருபயனும் இல்லை. ஆகவே, அதற்கான தண்டனையை நீ ஏற்கத்தான் வேண்டும்” என்று கூறி அவனை நரகத்திற்கு அனுப்பி வைத்தாராம்.
பொதுக் காலத்தை நிறைவு செய்துவிட்டு ஒரு புதிய ஆண்டிற்குள் அதாவது, திருவருகைக் காலத்திற்குள் நுழைகின்றோம். இன்றைய வாசகங்கள் இறுதிக்காலத்தை பற்றி எடுத்துரைத்து நாம் மிகவும் விழப்பாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. இப்போது நற்செய்தி வாசகத்தை வாசித்து நமது சிந்தனைகளை விரிவுபடுத்துவோம்.
அக்காலத்தில் மானிடமகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே, நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”
இன்றைய நற்செய்தியில் இயேசு மூன்று கருத்துக்களை முன்வைக்கின்றார். முதலாவதாக, நோவாவின் காலத்தில் நடந்தவைக் குறித்து நினைவு படுத்துகின்றார். தாம் படைத்த மக்களைக் கடவுள் வெறுக்கும் அளவிற்கு அம்மக்களின் தீச்செயல்கள் அமைந்திருந்தன. மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. அப்பொழுது ஆண்டவர், “நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில், இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்” என்றார். ஆனால், நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது (தொநூ 6:5-8) என்று வாசிக்கின்றோம். நோவா காலத்து மக்கள் தாங்கள் செய்யும் தீச்செயல்களை அறிந்திருந்தும் கூட அவற்றைத் தொடர்ந்து செய்தனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், நேர்மையாளராக வாழ்ந்த நோவாவும் அவரது குடும்பத்தாரும் கடவுளின் அருளால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பெட்டகம் செய்வதைக் கண்டும் கூட, அவர்கள் விழிப்பாய் இல்லாததாலும் மனமாற்றம் பெறாததாலும் முற்றிலுமாக வெள்ளத்தில் அழிந்து போனார்கள். இச்சம்வத்தைக் குறிப்பிடும் இயேசுவும், ‘மானிடமகனின் வருகையின்போதும் இவ்வாறே இருக்கும்’ என்று கூறி நம்மையும் எச்சரிக்கின்றார்.
இரண்டாவதாக, ‘இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்’ என்று கூறுகின்றார். அதாவது, தீயவர்கள் நடுவில் வாழ்ந்த நோவா எப்படி கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு பெட்டகத்திற்குள் அனுப்பப்பட்டு காப்பாற்றப்பட்டாரோ, அவ்வாறே வயலில் இருக்கும் இருவரிலும், திரிகையில் மாவரைத்துக்கொண்டிருக்கும் இருவரிலும் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார் என்று இயேசு கூறுவதன் வழியாக தீயவர்கள் கைவிடப்பட்டு நல்லவர்கள் கடவுளால் என்றுமுள்ள வாழ்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று பொருள்பொதிந்த விதத்தில் எடுத்துரைக்கின்றார்.
மூன்றாவதாக, திருடர் குறித்த ஒரு கருத்தைக் கூறி விழிப்பாய் இருங்கள் ஆயத்தமாய் இருங்கள் என்று நம்மை எச்சரிக்கின்றார் இயேசு. நமது வீட்டிற்குள் திருடர் எப்போது வருவார் என்பதை நாம் அறிந்திருந்தால் நமது உடமைகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம். அவ்வாறே, உள்ளம் என்னும் வீட்டிற்குள் இயேசு எப்போது வருவார் என்பதை நாம் அறிந்திருந்தால் நமது ஆன்மாவை நிலைவாழ்வுக்குக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதையும் இதன் வழியாக நாம் உணர்ந்துகொள்ளலாம். நான் சிறுவனாக இருந்தபோது எனது பாட்டி அடிக்கடி, 'நான் ஆயத்தமா இருக்கணும்' என்று கூறுவார். ‘ஆயத்தமா இருக்கவேண்டும்’ என்றால் பாவ அறிக்கை செய்யவேண்டும் (பாவ சங்கீர்த்தனம்) என்ற அர்த்தத்தில் 'ஆயத்தமா இருக்கணும்' என்ற வார்த்தையை எனது பாட்டி மட்டுமல்ல எனது ஊரிலிருந்த வயதுமுதிர்ந்தவர்கள் அனைவருமே கூறக்கேட்டிருக்கின்றேன். அதாவது, திருப்பலியில் பங்கெடுப்பதற்கு முன்பு பாவ அறிக்கை செய்து நம் பாவங்களைப் போக்கிக்கொள்வதில் நாம் விழிப்பாய் இருக்கவேண்டும் என்பதைக் குறிக்கும் விதமாகத்தான் ‘ஆயத்தமா இருக்கணும்’ என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை இதன் வழியாக நாம் தெளிவாக அறிய முடிகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், இதுதான் இறுதிக்காலம் என்பதை அறிந்துகொண்டு தூக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும் என்று நம்மை எச்சரிக்கின்றார் புனித பவுலடியார். மேலும், 'இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!’ என்கின்றார். அதாவது, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்புக்குரிய செயல்களை விட்டுவிட்டு ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொள்ள அழைப்புவிடுகின்றார். ஊனியல்புக்குரிய செயல்கள் சிலவற்றை இங்கே அவர் சுட்டிக்காட்டினாலும், கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் ‘தூய ஆவியின் கனியும் ஊனியல்பின் செயல்களும்’ என்ற தலைப்பில் இவற்றைக்குறித்து விரிவாகப் பேசுகின்றார். அப்பகுதியை இப்போது வாசிப்போம்.
ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். ஆனால், தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். (கலா 5:19-22). ஆக, தீய ஆவிக்குரியவற்றை இருளின் ஆட்சிக்குரிய செயல்களாகவும், தூய ஆவிக்குரியவற்றை (கனிகள்) ஒளியின் ஆட்சிக்குரிய செயல்களாகவும் பவுலடியார் சுட்டிக்காட்டுகின்றார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மேரி என்ற பெண் பொறுப்புணர்வோடும் விழிப்புணர்வோடும் படித்து உயர்ந்த நிலையை அடைந்தார். தனது மேல்படிப்பை முடித்த பிறகு, வேலைக்காக விண்ணப்பித்து பல நிறுவனங்களுக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். தொடக்கத்தில் அவளின் முயற்சிக்குப் பலனளிக்கவில்லை என்றாலும், விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் தனது வேலைதேடும் காரியத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். இறுதியாக அவர் விண்ணப்பித்த ஒரு நிறுவனத்தில் அவருக்கு வேலைகிடைத்தது. வேலைக்குச் சென்ற நாள்முதல் மேரி கவனமாகவும், விழிப்பாகவும், பொறுப்பாகவும் வேலை செய்து வந்தாள். அந்நிறுவனத்தின் முதலாளி மாதத்தின் பல நாள்களில் பணிக்காக வெளியூர் சென்று விடுவார். அந்நேரங்களில் மற்ற எல்லா ஊழியர்களும் விழிப்பின்றி கவனக்குறைவாகச் செயல்பட்டதுடன் அரட்டையடித்துக்கொண்டு நேரத்தை விரயமாக்கி வந்தனர். அதேவேளையில், முதலாளி அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் பொறுப்புடன் பணியாற்றுவது போன்று பாவனை செய்வர். அலுவலகத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த ஊழியர்களின் இந்த இரட்டைவேடச் இச்செயல்பாடுகளை முதலாளி பலமுறை நேரில் கண்டிருக்கின்றார். அவற்றைக் கண்டித்தும் இருக்கின்றார். ஆனால், மேரி மட்டும் மிகுந்த விழிப்புணர்வுடன் எப்போதும் தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார். தன்னை நல்லவளாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியைச் செவ்வனே செய்யவேண்டும் என்ற பேரார்வத்தில் நேரிய மனதுடன் பணியாற்றி வந்தாள். சில காலங்கள் கழித்து அந்நிறுவனத்தின் முதலாளி தனது பணியில் ஓய்வுபெற விரும்பினார். அப்போது, தனது இடத்தில் ஒரு முதலாளியாக இருந்து அந்நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பை மேரிக்குக் கொடுத்தார். அதுமட்டுமன்றி, அவளைத் தனது குடும்ப வாரிசாகவும் ஏற்றுக்கொண்டார். காரணம், அவருக்கு பிள்ளைகள் கிடையாது. இது நமது தேசத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவம். நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விண்ணைத் தொடும் அளவிற்கு வெற்றி பெறலாம் என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்" (குறள் : 435) என்ற திருக்குறளில், முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது, நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும் என்று எச்சரிக்கின்றார் திருவள்ளுவர். விழிப்பாய் இல்லாதவர் வீழ்ந்தேபோவர் என்பதும், விழிப்பாய் இருப்பவர் விரைவாய் முன்னேறுவர் என்பதும் உலகியல் நடைமுறையில் நாம் காணும் உண்மை. நமது செயல்களில் நாம் பெரும் விழிப்புணர்வே நமக்கு விடியலைத் தரும். ஆகவே, நாம், விழிப்புடன் செயல்பட்டு, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய செயல்களை அணிந்துகொள்ளும்போது, நிலைவாழ்வுக்குரிய பரிசை ஆண்டவராம் இயேசு நமக்கு அளிப்பார் என்பதை உணர்வோம். இவ்வருளுக்காக, இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்