தேடுதல்

போலந்தில் அனைத்துப் புனிதர்கள் நாள் போலந்தில் அனைத்துப் புனிதர்கள் நாள் 

வழிசொல்லும் ஒளிச்சுடர்: அமைதியின் வானதூதர், இளம் மறைச்சாட்சிகள்

மறைச்சாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவர்களின் வித்து

மேரி தெரேசா: வத்திக்கான்

இக்காலக்கட்டத்தில், அதுவும் அமைதியின் இளவரசராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு அண்மைத் தயாரிப்புக்கள் நடைபெற்றுவரும் இந்நாள்களில், அமைதி வேண்டும், சமாதானம் வேண்டும், ஒப்புரவும் மன்னிப்பும் இடம்பெறவேண்டும், மனங்களில் அன்பு ஆட்சிசெய்ய செய்யவேண்டும் என்றே உலகின் நன்மனத்தோர் அனைவரும் விண்ணப்பிக்கின்றனர். உலகின் பல இடங்களில், குறிப்பாக உக்ரைனில், இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் இடம்பெற்று வரும் போர் ஒட்டுமொத்த உலகின் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலை முன்னிறுத்தியுள்ளது. இந்தக் குளிர் காலத்தில் எரிவாயு விநியோகம் குறைவாக இருப்பதால் ஐரோப்பாவில் மக்கள் குளிரால் துன்புறுகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானில் ஓராண்டுக்குமுன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், இஸ்லாமிய ஷாரியா சட்டத்தை அமல்படுத்தியிருப்பதால், அந்நாட்டில் கசையடித் தண்டனைகள் உட்பட குற்றவாளிகளுக்கு கடும்தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் சில குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடத்தில் 21 முதல் 39 கசையடிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் பத்து நாள்களில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்று இவ்வாண்டு நவம்பர் 23ம் தேதி வெளியான செய்திகள் கூறுகின்றன. அதேநேரம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை கடவுளை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளார்.

உலகின் இத்தகைய சூழலில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அமைதிக்காக தங்களை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்ற நல்லுள்ளங்கள் பற்றி அறிந்துள்ளோம். 1964ஆம் ஆண்டில் நொபெல் அமைதி விருதைப் பெற்ற சமூகப் போராளி மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள்,  “இருள், இருளை விரட்டமுடியாது, ஆனால் அது ஒளியால் மட்டுமே முடியும். வெறுப்பு, வெறுப்பை விரட்ட முடியாது, ஆனால் அன்பால் மட்டுமே அதனை ஆற்ற முடியும்” என்று கூறியுள்ளார். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் (மத்.5,9) என்று இயேசு அன்று மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர்ந்து திருவாய் மலர்ந்து கற்பித்தார். அன்பு நெஞ்சங்களே, இயேசுவின் வழியில் தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த, இத்தாலியரும், கப்புச்சின் சபை துறவியுமான புனித லூக்கா அந்தோனியோ ஃபல்கோனே (Luca Antonio Falcone) அவர்கள், அமைதிக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தவர். இவர், "அமைதியின் வானதூதர்", "தெற்கின் திருத்தூதர்" என்ற புனைப்பெயர்களால் இத்தாலியர்களால் அழைக்கப்பட்டவர்.

புனித லூக்கா அந்தோனியோ ஃபல்கோனே (19 அக்.1669 – 30 அக். 1739)

புனித லூக்கா அந்தோனியோ ஃபல்கோனே அவர்கள்,  1669ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி இத்தாலியின் கொசென்சாவில், ஏழைகள், அதேநேரம் பக்தியுள்ள பெற்றோருக்குப் பிறந்தார். 1684ஆம் ஆண்டில் Antonio da Olivadi என்ற பிரான்சிஸ்கன் அருள்பணியாரைச் சந்தித்ததன் பயனாக, தனக்கு இறையழைத்தல் இருப்பதை உணர்ந்தார், இவர். 1687ஆம் ஆண்டில் கப்புச்சின் துறவு சபையில் சேர்ந்து, அச்சபைக்குரிய ஆடைகளைப் பெற்ற சில மாதங்களிலேயே அவ்வாழ்விற்குப் பயந்து வீட்டிற்குத் திரும்பினார். தனக்கு துறவு வாழ்வு அல்ல, மாறாக, திருமணமே உகந்தது என்று எண்ணினார். இவரது அருள்பணியாளர் மாமாவும் இவரது தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். ஆயினும் 1689ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மீண்டும் அத்துறவு சபையில் சேர்ந்தார். மீண்டும் அவ்வாழ்வு குறித்து அஞ்சி வீட்டுக்குத் திரும்பினார். அச்சமயத்தில் திருச்சிலுவையின் முன்பாக முழந்தாளிட்டு, ஆண்டவரே, எனக்கு ஒரு வழியைக் காட்டும் என்று கெஞ்சி அழுது மன்றாடினார். பின்னர் துறவு இல்லத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு மூன்றாம் முறையாக விண்ணப்பித்தார். அச்சபையும் அவரைச் சேர்த்துக்கொண்டது. 1690ஆம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி கப்புச்சின் சபையில் சேர்ந்து 1700ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.

அருள்பணி லூக்கா ஃபல்கோனே அவர்கள், தனது அருள்பணித்துவ வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் இயேசு கிறிஸ்துவின் பாடுகளில் ஏதாவது ஒன்றிற்குத் தன்னை அர்ப்பணித்தார். 1702ஆம் ஆண்டில், இவர் தனது மாநில அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்கி,தென் இத்தாலியிலுள்ள San Giorgio Morgeto நகரில் தவக்கால மறையுரை ஒன்றைத் தொடங்கினார். அவ்வாறு அவர் மக்களின் முன்பாக மறையுரையாற்றிக் கொண்டிருந்தபோது, தொடர்ந்து என்ன சொல்வதென்பது அவருக்கு நினைவில் இல்லை. எனவே மறையுரை ஆற்றுவதை அப்படியே நிறுத்திவிட்டு மறையுரை மேடையிலிருந்து இறங்கிவந்துவிட்டார். 1711ஆம் ஆண்டில் இச்செய்தியைக் கேள்விப்பட்ட நேப்பிள்ஸ் பேராயரான கர்தினால் Francesco Pignatelli அவர்கள், அருள்பணி Falconeஐ, நேப்பிள்ஸ் மற்றும், அவ்வுயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த அனைத்து இடங்களிலும் மறையுரை ஆற்றுமாறு அழைப்புவிடுத்தார். அதற்குக் கீழ்ப்படிந்து அந்நகரில் மறையுரையாற்றிய அருள்பணி Falcone, முதல் மூன்று மறையுரைகளில் திணறினார். முதல் மறையுரையின்போது மக்கள் அவரைக் கேலிசெய்து சிரித்தனர். அதைத் தொடர்ந்த அடுத்த இரு மறையுரைகளையும் யாரும் கவனத்தோடு கேட்கவில்லை.   

இதனால் அந்நகர் பங்குத்தந்தை கவலையடைந்து கர்தினால் Pignatelli அவர்களிடம் வேறு ஒருவரைத் தெரிவுசெய்யுமாறு கெஞ்சிக்கேட்டார். ஆனால் கர்தினால் மறுத்துவிட்டார். மாறாக அவர் அருள்பணி Falcone மீது நம்பிக்கை வைத்திருந்தார். அருள்பணி Falcone அவர்கள், நான்காவது முறையாக ஆற்றிய மறையுரையின்போது மக்கள் கூடுதலாக வந்திருந்தனர். அம்மறையுரையின் இறுதியில் அவர் மக்களிடம், உங்களில் ஒருவர் விரைவில் இறப்பார், அவர் பக்கம் உங்கள் மனங்களையும் இதயங்களையும் திருப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார். மக்கள் அவ்விடத்தைவிட்டு அகலுகையில், அவரது மறையுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டத்தை வழிநடத்திய பிரபலமான மனிதர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இதற்குப்பின், அருள்பணி Falconeவின் மறையுரையைக் கேட்பதற்கு மக்கள் பெருமெண்ணிக்கையில் வந்தனர். இவர் தனக்கு மறையுரையாற்றுவதில் எதிர்கொண்ட பிரச்சனையை சவாலாக ஏற்று அதனை முறியடித்ததால் அவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அவரைத் தேடிவந்த மக்கள் கூட்டமும் அதிகரித்தது. தென் இத்தாலிய நகரங்களில், குறிப்பாக Taranto, Montecassino போன்ற நகரங்களில் அவர் போதிக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் மனம் மாறுவதற்கு இவர் உதவினார். இந்த இவரது போதனைகளே, இவர், "அமைதியின் வானதூதர்", "தெற்கின் திருத்தூதர்" என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்பட காரணமாயின.

அருள்பணி ஃபல்கோனே அவர்கள், 1717 முதல் 1720ஆம் ஆண்டுவரை கப்புச்சின் சபையின் மாநில அதிபராகவும், 1735ஆம் ஆண்டில் அச்சபையின் பொதுக் கண்காணிப்பாளராகவும், புகுமுகத் துறவியரின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இறைவாக்குக் கொடைகளையும், ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்கின்ற வரத்தையும் பெற்றிருந்தார். அச்சமயத்தில் திருக்காட்சிகளைக் கண்டுள்ளார். இவரிடம் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவோரின் ஆன்மாக்களில் இழையோடும் எண்ணங்களை இவரால் பார்க்க முடிந்தது. இவர் Cosenzaவில் 1739ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி இறைபதம் சேர்ந்தார். அதற்கு ஆறு மாதங்களுக்குமுன்பு கண் பார்வையையும் இழந்திருந்தார். அதேநேரம், திருப்புகழ்மாலை செபிக்கவும், திருப்பலி நிறைவேற்றும் அளவுக்குப் பார்வை பெர்றிருந்தார். 1890களில் இவரது பெயரால் கட்டப்பட்ட Angelo d'Acri பசிலிக்காவில் இவரது உடல் அடக்கம் பண்ணப்பட்டுள்ளது. 1825ஆம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி திருத்தந்தை 12ம் லியோவால் அருளாளராகவும், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராகவும் இவர் அறிவிக்கப்பட்டார். அருள்பணி Falconeயின் பரிந்துரையால் நான்கு புதுமைகள் இடம்பெற்றுள்ளன. .   

புனித André de Soveral (1572 - ஜூலை 16, 1645)

புனித André de Soveral அவர்கள், பிரேசில் நாட்டில் போர்த்துக்கீசிய பேரரசுக்கு எதிராகச் செயல்பட்ட, டச்சு படைகள், மற்றும், டச்சு கால்வனிஸ்ட் கிறிஸ்தவ சபையின் மூத்தவர்களால் தூண்டப்பட்ட படுகொலையில் கொலைசெய்யப்பட்டார். இவரும், இவரோடு சேர்ந்த 69 மறைச்சாட்சியரும், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். புனித André de Soveralஅவர்கள், 1572ஆம் ஆண்டு, பிரேசில் நாட்டின் தற்போதைய São Vicente நகரில் பிறந்தார். Bahiaவிலுள்ள இயேசு சபையினரின் குழந்தை இயேசு கல்லூரியில் படிப்பை முடித்த இவர், 1593ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தனது 21வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். 1606ஆம் ஆண்டில் Soveral அவர்கள், Rio Grande do Norte பகுதியில் பூர்வீக இனத்தவர் மத்தியில் மறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார். அதற்கு ஓராண்டுக்குப்பின் இயேசு சபையிலிருந்து விலகி Cunha மறைமாவட்ட அருள்பணியாளராக தன்னை இணைத்துக்கொணடார்.

அருள்பணி Soveral அவர்கள் 1614ஆம் ஆண்டு Cunhaúவில் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். Cunhaú என்பது, Rio Grande do Norte மாநிலத்திலுள்ள ஒரு கிராமம். பிரேசிலில் வளமையான மாநிலங்களில் ஒன்றான இங்கு கரும்பு ஆலைகள் அதிகம். தாதுவளமும் அதிகம். மேலும் இம்மாநிலத்தின் ஒரு பக்கம் பெருங்கடல் உள்ளது. இத்தகைய சூழலில் இங்கு விலைவாசி அதிகம். இம்மாநிலப் பகுதியில் 1645ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி, மெழுகுதிரிகளின் அன்னை மரியா பங்குத்தள ஆலயத்தில் இவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, எழுந்தேற்றத்திற்குப்பின்னர் டச்சுப் படைவீரர்கள், பூர்வீக இனத் தலைவர்களோடு ஆலயத்திற்குள் நுழைந்து திருப்பலியில் பங்குபெற்ற நம்பிக்கையாளர்கள் அத்தனை பேரையும் படுகொலை செய்தனர். அருள்பணி Soveral அவர்கள் இறந்தவர்களுக்காக உள்ள செபத்தைச் செபித்துக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார். பின்னர் அப்படைவீரர்கள் ஆலயத்தையும் சூறையாடினர். அச்சமயத்தில் ஐந்து போர்த்துகீசிய கத்தோலிக்கர்கள் மட்டும் பிணையலாக, Magi டச்சு துறைமுகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அச்சமயத்தில் மறைச்சாட்சிகளாக கொல்லப்பட்ட 69 பேரில் Domingos Carvalho என்ற பொதுநிலையினரின் பெயர் மட்டுமே தெரிந்தது. அருள்பணி André de Soveral அவர்களும் அவரோடு மறைச்சாட்சிய மரணத்தைத் தழுவிய 69 பேரும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களின் திருநாள், இவர்கள் கொல்லப்பட்ட ஜூலை 16ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. 

Tlaxcalaவின் மறைசாட்சிகள்

பிரேசிலில் மறைச்சாட்சிய மரணத்தை ஏற்ற அருள்பணி André de Soveral அவர்களும் மற்ற 69 பேரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியன்றே மெக்சிகோவின் Tlaxcala மறைச்சாட்சிகளும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். Tlaxcala மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபல் (1514/15–1527), மற்றும் அவரது தோழர்களான அந்தோனியோ (1516/17–1529), ஹூவான் (1516/17–1529) ஆகிய மூன்று வளர்இளம் மறைச்சாட்சிகளும் பூர்வீக மத மரபுகளிலிருந்து கத்தோலிக்கத்திற்கு மனம் மாறியவர்கள். இம்மூவருக்கும் திருமுழுக்கு அளித்த பிரான்சிஸ்கன் சபைக் குருக்களிடமிருந்து இவர்கள் கல்வியையும் கற்றனர். இம்மூவரின் உயிர்த்துடிப்பான வாழ்வும், நற்செய்தி மீது இவர்களுக்கு இருந்த பேரார்வமும், இவர்கள் தழுவிய புதிய நெறிக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களால் கொலைசெய்யப்படக் காரணமாயின. 13 வயதான இந்த வளர்இளம் பருவத்தினர் புதிதாகப் பின்பற்றிய மத நம்பிக்கையும், அவர்களின் செயல்பாடுகளும் தங்களின் பூர்வீக இனத்தின் விழுமியங்கள் மற்றும், சடங்குகளுக்கு அச்சுறுத்தல் என கொலையாளிகள் கருதினர். 1990ஆம் ஆண்டில் மெக்சிகோவில் இம்மூவரும் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இம்மூவரும் புனிதர்களாக அறிவிக்கப்படத் தேவையான ஒரு புதுமையின்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு அவர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட 2017ஆம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அனுமதியளித்தார். அதே ஆண்டு அக்டோபர் 15ம் தேதி இவர்கள் புனிதர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.      

புனித கிறிஸ்டோபல்

கிறிஸ்டோபல், 1514 அல்லது 1515ஆம் ஆண்டில் மெக்சிகோவில் பிறந்தார். இவர், பூர்வீக இனத் தலைவர் ஒருவரின் மகன். கிறிஸ்டோபல்லின் தந்தை Acxotécatl, தனது வாரிசு எனக் கருதிவந்த அவரை பிரான்சிஸ்கன் பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆயினும் பிரான்சிஸ்கன் துறவியரும், கிறிஸ்டோபலின் சகோதரர்களும் தந்தையை சமாதானப்படுத்தி அவரை அப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிறிஸ்டோபல், நற்செய்தி அறிவிப்பில் ஆர்வமாய் இருந்தது அவரது தந்தைக்கு விருப்பமில்லை. ஆயினும் கிறிஸ்டோபல் அதில் உறுதியாய் இருந்ததால், அவரது தந்தை ஒரு நிபந்தனையோடு அதற்கு அனுமதித்தார். அதாவது, வீட்டில் பூர்வீக இனத்தவரின் மத சடங்குகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே அந்நிபந்தனை. ஆனால் கிறிஸ்டோபல் அதை மீறியதால் முதலில் அவரது தந்தை அவரை மன்னித்தார். ஆயினும் கிறிஸ்டோபர் தொடர்ந்து அச்சடங்குகளை மீறியதால் அவரது தந்தை கடுங்கோபம் கொண்டு அவரைக் கொல்லத் திட்டமிட்டார். இதைச் செய்யுமாறு அவரது தந்தையின் இரண்டாவது மனைவியும் தன் கணவரை வற்புறுத்தி வந்தார்.

ஒரு நாள் கிறிஸ்டோபலின் தந்தை Acxotécatl, வீட்டில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதில் எல்லா மகன்களும் கலந்துகொள்ளுமாறு கட்டளையிட்டார். விழா முடிந்து எல்லாரையும் வெளியே அனுப்புகையில் கிறிஸ்டோபலை மட்டும் தடுத்து நிறுத்திய அவரது தந்தை, அவரது தலைமுடியை இழுத்து தரையில் விழத்தாட்டி தரதரவென இழுத்து மிதித்தார். கிறிஸ்டோபலின் கைகளும் கால்களும் முறிந்துபோகும் அளவுக்கு குதிரையை அடிக்கும் தார்க்குச்சியால் கொடூரமாய் அடித்தார். அவற்றிலிருந்து இரத்தம் கொட்டியது. அந்நிலையிலும் கிறிஸ்டோபல் தன் கத்தோலிக்க நம்பிக்கையைக் கைவிட மறுத்தார். அதனால் அவரது தந்தை அவரைக் கொண்டுபோய் கொண்டாட்டத்தில் வைக்கப்படும் தீயில் உயிரோடு எரித்தார். மறுநாள் காலையில் அதாவது 1527ஆம் ஆண்டில் தன் தந்தையை அழைத்து அவரை மன்னிப்பதாகத் தெரிவித்து உயிர்நீத்தார். கிறிஸ்டோபலின் தாய் தன் மகனுக்காகப் பரிந்துபேசியதால் அவரையும் கொலைசெய்தார், அவரின் தந்தை Acxotécatl. இந்தக் கொலை வெளியே தெரியக் கூடாது என்பதற்காக அவ்விருவரின உடல்களையும் தன் வீட்டிலே புதைத்தார். ஆயினும் இஸ்பானியர்கள் இதை அறியவந்து, இக்கொலைக் குற்றத்திற்காக கிறிஸ்டோபலின் தந்தைக்கு மரண தண்டனை நிறைவேற்றினர். 1528ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் துறவி அந்திரேயா, கிறிஸ்டோபலின் உடலைத் தோண்டி எடுத்து முறைப்படி அடக்கம் செய்தார்.

புனிதர்கள் அந்தோனியோ, ஹூவான்

புனிதர்கள் அந்தோனியோவும், ஹூவானும், 1516 அல்லது 1517ஆம் ஆண்டில் பிறந்தவர்கள். அந்தோனியோ, Xiochténacti என்ற பூர்வீக இனத்தைச் சார்ந்த ஒரு பிரபுவின் பேரன். தனக்குப்பின் பேரன்தான் வாரிசு என அவர் நினைத்திருந்தார். ஆனால் அந்தோனியோ கத்தோலிக்கத்திற்கு மதம் மாறி பூர்வீக இனச் சடங்குகளை மீறிவந்தார். அந்தோனியோ, தன் பகுதியில் வாழ்ந்த பிரான்சிஸ்கன் துறவியருக்கு மொழிப்பெயர்ப்பாளராக உதவி வந்தார். அந்தோனியோவும், அவரது பணியாளரான ஹூவானும் பூர்வீக இனத்தவரின் சடங்குமுறைகளை அவமதித்தபோது பிடிபட்டனர். 1529ஆம் ஆண்டில் அவ்வூர் ஆள்கள் ஹூவானைக் கொலைசெய்தனர். அந்தோனியோ தன் அறையைவிட்டு வெளியே வந்தபோது ஹூவான் கொலையுண்டு கிடந்ததை அறிந்து அதனைச் செய்தவர்களிடம், எதற்கு ஹூவானை மட்டும் குறிவைத்தீர்கள் எனக் கேட்டார்.  அப்போது அந்தோனியோ, நானும்தான் அதனைச் செய்தேன் என்று கூறியவுடன் அவரும் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பின்னர் இவ்விருவரின் உடல்களையும் தொமினிக்கன் சபைத் துறவி பெர்னார்தினோ கண்டுபிடித்து Tepeacaவிற்கு எடுத்துவந்து நல்லடக்கம் செய்தார்.

மறைச்சாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவர்களின் வித்து. இம்மாதம் 26ம் தேதியன்று ஏரோது அரசனால் கொல்லப்பட்ட களங்கமற்ற குழந்தைகளின் விழா இந்த மறைச்சாட்சிகள் நம் கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்துவார்களாக. உலகிற்கு அமைதியைக் கொண்டுவரப் பிறந்த கிறிஸ்து அனைவருக்கும் மன அமைதியைத் தருவாராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2022, 16:31