Ethiopian Jews celebrate Sigd in Jerusalem Ethiopian Jews celebrate Sigd in Jerusalem 

விவிலியத் தேடல்:திருப்பாடல் 35-6 ‘துன்பமேற்கும் தூய உள்ளம்'

நமது எதிரிகளின் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சிகளிலிருந்து நாம் காப்பாற்றப்படும் போது இறைவனுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நலம் தரும் நற்குணங்கள்!’ என்ற தலைப்பில் 35-வது திருப்பாடலில் 10 முதல் 16 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 17,18 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை பக்தி உணர்வுடன் வாசிப்போம். “என் தலைவரே, இன்னும் எத்தனை நாள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?; என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும் என் ஆருயிரைச் சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும். மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்.” (வசனம் 17, 18)

ஆஸ்திரேலியன் ஓப்பன், விம்பிள்டன், யு.எஸ்.ஓப்பன் என மூன்று `கிராண்ட் ஸ்லாம்’ பட்டம் வென்றவர்தான் ஆர்lத்தர் ஆஷ் (Arthur Ashe) என்ற டென்னிஸ் வீரர். அமெரிக்காவிலுள்ள வெர்ஜீனியாவிலிருக்கும் Richmond என்னும் நகரில்  பிறந்தவர். அமெரிக்காவின் டேவிஸ் கோப்பை குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் கறுப்பின வீரர் இவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏழாவது வயதை அடைந்தபோது இவருடைய அம்மா இறந்து விட்டார். அதனால், ஆர்த்தரும் அவருடைய தம்பியும் அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். அப்பாவும் சிறப்பான வேலையெல்லாம் பார்க்கவில்லை. குழாய் பழுதுபார்ப்பதிலிருந்து, மின்சார வேலை வரை கிடைக்கும் வேலைகளைச் செய்யும் ஒரு கூலித்தொழிலாளி அவ்வளவுதான். ஆனாலும், அதிக அக்கறையோடு பிள்ளைகளை வளர்த்தார். பல கறுப்பினக் குழந்தைகளின் பிடித்த விளையாட்டாக இருந்த கால்பந்து பக்கம் ஆர்த்தரின் கவனத்தைச் செல்லவிடாமல் தடுத்து, டென்னிஸில் ஆர்வம் கொள்ளச் செய்தார்.

அந்நேரத்தில் ஆர்தருக்கு, ஜான்சன் என்கிற நல்ல பயிற்சியாளரும் கிடைத்தார். 1963-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் குழுவில் சேர்ந்ததிலிருந்து ஆர்த்தருக்குத் தொடர்ந்து வெற்றிகள் குவிந்துகொண்டே இருந்ததன. பரிசுகள், பதக்கங்கள், கிராண்ட் ஸ்லாம் பட்டம் என வெற்றியின் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தவருக்கு இடிபோல ஒரு துயரம் வந்து சேர்ந்தது. அதாவது, 1979-ஆம் ஆண்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டார். இது நடந்து சில மாதங்கள் கழிந்த பிறகும்கூட அவரால் முன்பு போல ஓட முடியவில்லை. ஓடினால், மார்பில் வலி வந்தது. இதைச் சரிசெய்வதற்காக மற்றொரு இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதன் பிறகு 1988-ஆம் ஆண்டு அவருக்கு இன்னுமொரு இடி விழுந்தது. அதாவது, அவருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இதய அறுவைசிகிச்சை நடந்தபோது ஏற்றப்பட்ட இரத்தத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் இருந்திருக்கலாம் எனக் காரணம் சொல்லப்பட்டது. எனவே, 1992-ஆம் ஆண்டு தனக்கு ஹெச்.ஐ.வி இருப்பதை பகிரங்கமாக அறிவித்தார் ஆர்த்தர்.

இதனால்தான் இவர் மரணித்தார் என்பது கூடப் பெரிய செய்தியல்ல. ஆனால் அதை அவர் இயல்பாக எடுத்துக்கொண்ட மனநிலைதான் நம்மை இன்றுவரை வியப்பில் ஆழ்த்துகிற செய்தியாக அமைகின்றது. இப்படியொரு கொடிய நோய் இருப்பதை அறிந்ததும் அவருடைய இரசிகர்கள் பலர் ஆர்த்தருக்குக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆர்த்தர் பதிலெழுதுவார். அப்போது `இப்படி ஒரு மோசமான நோய்க்குக் கடவுள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?’  என்று ஒரு இரசிகர் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கு ஆர்த்தர் இவ்வாறு பதில் எழுதியிருந்தார். ``ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் ஐம்பது லட்சம் குழந்தைகள்தான் முறையாக டென்னிஸ் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களிலும் ஐந்து இலட்சம் பேர்தான் நன்கு தேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்களாகிறார்கள். அந்த ஐந்து இலட்சம் பேரில் ஐம்பதாயிரம் பேர்தான் இந்த விளையாட்டில் தீவிரமாக இறங்குகிறார்கள். அவர்களிலும் 5,000 பேர்தான் கிராண்ட் ஸ்லாம் போட்டி வரைக்கும் வருகிறார்கள். அவர்களில் 50 பேர் விம்பிள்டன் வரைக்கும் தேறுகிறார்கள். கடைசியாக நான்கு பேர் மட்டும்தான் அரை இறுதிச் சுற்றிலும், இரண்டு பேர் இறுதிச் சுற்றிலும் விளையாடுகிறார்கள். அந்த இருவரில் நான் வெற்றி பெற்று, கோப்பையைக் கையில் வாங்கியபோது, நான் கடவுளிடம் `என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்?’ என்று கேட்கவில்லை. அப்படியிருக்க, இப்போது நான் வலியோடும் வேதனையோடும் இருக்கும்போது மட்டும் `கடவுளே என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாய்?’ என்று கேட்பது எப்படி நியாயம்?’

ஆர்த்தரிடம் வெளிப்பட்ட ஆன்மிக முதிர்ச்சிக்கான எடுத்துக்காட்டு இது என்பதில் நமக்கு எள்ளளவும் ஐயமில்லை. கடவுளிடம் முழுமையான நம்பிக்கை கொள்பவர்களும், அவரிடம் தங்களை முற்றிலுமாகக் கையளிப்பவர்களும் வாழ்க்கையில் தங்களுக்கு வருகின்ற அனைத்துத் துன்ப துயரங்களையும் முதிர்ச்சியடைந்த மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள். இது உடல் நோய்களால் வரும் துன்பங்களாக இருந்தாலும் சரி, அல்லது எதிரிகளால் வரும் துயரங்களாக இருந்தாலும் சரி அவர்களின் மனநிலை சமனடைந்ததாகவே இருக்கும். நமது தாவீது அரசர் இதற்கொரு மாபெரும் எடுத்துக்காட்டாக இருப்பதைப் பார்க்கின்றோம். தன்னை ஒரு எதிரியாகக் கருதி, சவுல் அரசர் தனக்கு இழைத்த கொடுமைகள், அநீதிகள், வன்செயல்கள் ஆகிய அனைத்திலும் ஒரு முதிர்ச்சிபெற்ற ஆன்மிகவாதியாக நடந்துகொள்கின்றார் தாவீது. சவுலைக் கொன்றொழிப்பதற்குத் தாவீதுக்கு இரண்டுமுறை வாய்ப்புகள் கிடைத்தபோதும் கூட அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிடுவதைப் பார்க்கின்றோம். அதுமட்டுமன்றி, எதிரிகளைப் பழிவாங்கும் காரியத்தைக் கடவுளிடம் விட்டுவிடுகிறார் தாவீது அரசர்.

இன்று நாம் காணும் இறைவசனங்களில், "என் தலைவரே, இன்னும் எத்தனை நாள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?" என்று தாவீது கூறும் வார்த்தைகள் அவரது உள்ளத்தின் குமுறல்களையும் வேதனை நிறைத்த புலம்பல்களையும் நமக்கு எடுத்துரைக்கின்றன. “ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்? எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்?  நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது; எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?” (திபா 13:1-2) என்றும், “ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்” (திபா 90:13) என்றும், ஆண்டவரிடம் முறையிட்டுப் புலம்புகின்றார். மேலும், "ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? (அப 1:2) என்று சிறிய இறைவாக்கினரான அபகூக்கும் கடவுளிடம் முறையிடுகின்றார்.

இரண்டாவதாக, “என் ஆருயிரைச் சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்” என்ற தாவீதின் வார்த்தைகள் எதிரிகள் சிங்கக் குட்டிகளைப் போன்று கொடூரமானவர்கள் என்பதைக் குறித்துக்காட்ட இவ்வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கலாம். ஏனென்றால், “வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்; இந்தச் சிங்கங்களின்  வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்” (திபா 22:21) என்றும், “குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்; எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்; தம் வலையில் சிக்கவைத்து இழுத்துச் செல்கின்றனர்” (திபா 10:9) என்று, வேறுசில திருப்பாடல்களிலும் தாவீது கூறுவதன் வழியாக எதிரிகளின் அபாயகரமான செயல்பாடுகளை அவர் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார். நாம் வாழும் இன்றைய உலகிலும் எதிரிகளாகக் கருதப்படும் பலரின் செயல்கள் இவ்வண்ணமே அமைந்துள்ளன.

தானியேல் புத்தகத்தில் ஒரு நிகழ்வு வருகின்றது. அதாவது, அரசரும் பபிலோனியர்களும் அரக்கப் பாம்பொன்றை வழிபட்டு வருகின்றனர். அப்போது தானியேலையும் அதனை வழிபடுமாறு அரசர் கூறுகின்றார். அவரது கோரிக்கையை மறுக்கும் தானியேல், தான், உண்மைக் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே எப்போதும் வழிபடுவேன் என்றும், ஏனென்றால், அவரே வாழும் கடவுள் என்றும் கூறுகின்றார். அதுமட்டுமன்றி அந்த அரக்கப் பாம்பையும் கொன்றொழிக்கின்றார். பாபிலோனியர் இதனைக் கேள்வியுற்றபொழுது சீற்றங்கொண்டனர். மன்னருக்கு எதிராகத் திரண்டனர். “மன்னர் யூதராக மாறிவிட்டார்; பேல் தெய்வத்தை அழித்துவிட்டார்; அரக்கப் பாம்பைக் கொன்று விட்டார்; அர்ச்சகர்களைப் படுகொலை செய்துவிட்டார்” என்று கூச்சலிட்டனர். பின்பு மன்னரிடம் சென்று, “தானியேலை எங்களிடம் ஒப்படையும்; இல்லையேல் நாங்கள் உம்மையும் உம் குடும்பத்தையும் கொன்றொழிப்போம்” என்று மிரட்டினர். அவர்கள் மன்னரை மிகவும் வற்புறுத்தியதால், அவர் தானியேலை வேண்டா வெறுப்புடன் அவர்களிடம் ஒப்படைத்தார் (தானி 3:23-27). அதன் பிறகு பபிலோனியர்கள் தானியேலை சிங்கக்குகையில் தூக்கி எறிந்தனர். ஆனால், அவர் கடவுளின் பேரருளால் சிங்கங்களின்  வாயிலிருந்து அற்புதமாகக் காப்பாற்றப்பட்டார். இதனைக் கண்ட மன்னர், “தானியேலின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் பெரியவர்! உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று உரத்த குரலில் கத்தினார். பின் தானியேலை வெளியே தூக்கிவிட்டார். அவரை அழிக்கத் தேடியவர்களையோ குகைக்குள் எறிந்தார். நொடிப்பொழுதில் மன்னர் கண்முன்னரே அவர்களைச் சிங்கங்கள் விழுங்கின (வசனம் 41-42).

எதிரிகளைக் குறித்து தனது உள்மனக் குமுறல்களைக் கடவுளிடத்தில் எடுத்து கூறும் தாவீது அரசர், இறுதியில், "மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்" எனப் பாடி முடிக்கின்றார். அதாவது, நமது எதிரிகளின் தீய எண்ணங்களினின்றும், வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சிகளிலிருந்தும் நாம் காப்பாற்றப்படும்போது நாம் இறைவனுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றார். ஆகவே, தாவீது அரசரின் உன்னதமான மனநிலையைக் கொண்டருக்க இறைவனிடம் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 டிசம்பர் 2022, 13:27