ஆயர் Fikremariam Hagos Tsalim ஆயர் Fikremariam Hagos Tsalim  

தடுப்புக்காவலில் இருந்த ஆயர் மற்றும் அருள்பணியாளர் விடுதலை

எரித்ரியன் தலத்திருஅவை, திருஅவை தலைமைப்பீடத்துடன் முழு ஒன்றிப்புடன் செயல்படும், 23 கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபைகளுள் ஒன்றாகும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

எரித்திரியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் இருந்த ஆயர் Fikremariam Hagos Tsalim மற்றும் அருள்பணியாளர்  Mehereteab Stefanos விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை Asmara உயர்மறைமாவட்ட ஆயர் Menghesteab Tesfamariam மற்றும் எரித்திரியா கத்தோலிக்க தலைவர்கள் வரவேற்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 29 வியாழனன்று பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி அஸ்மாரா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆயர் மற்றும் அருள்பணியாளர் இரண்டு மாதங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்தல், போருக்குச் செல்ல மறுத்தவர்களை வெளியேற்றுதல், சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் ஆகியவை பற்றிய மனித உரிமை மீறல்களை விமர்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட, ஆயரும் அருள்பணியாளரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கைகள் நடைபெற்று வரும் வேளையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரித்திரியா நாட்டின் சூழல்   

1991ஆம் ஆண்டு எத்தியோப்பியாவிலிருந்து விடுதலை பெற்று தனித்து இயங்கி வரும் எரித்திரியா, 2004ஆம் ஆண்டு முதல் அமெரிக்க வெளியுறவுத்துறையால், கத்தோலிக்கர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் நாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் தொடங்கியதிலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிப்பு, உணவின்றி மடிதல், தங்களது சொந்த வீடுகளை விட்டு இடம்பெயர்தல் போன்றவற்றால் மக்கள் பெரிதும் துன்புற்று வருகின்றனர்.

திருஅவையுடன் முழு ஒன்றிப்புடன் செயல்படும் 23 கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபைகளுள் ஒன்றாகத் திகழும் எரித்ரியன் தலத்திருஅவை, எரித்திரியாவின் 60 இலட்சம் மக்களில் 4 விழுக்காடு மக்களை அங்கத்தினர்களாகக் கொண்டுள்ளது. மேலும், வடமேற்கு ஆப்ரிக்க நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் சமூகங்களில் 1,68,000 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

எரிட்ரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை, சுன்னி இஸ்லாம் பிரிவு, கத்தோலிக்கத் திருஅவை, லூத்ரன் கிறிஸ்தவ சபையுடன் இணைக்கப்பட்ட எரித்திரியாவின் நற்செய்தி அறிவிப்பு சபை என்னும் நான்கு மதப்பிரிவினரே எரித்திரியாவில் சட்ட அங்கீகாரம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2022, 12:39