ஈராக்கில் உலகின் அமைதிக்காக 3 நாள் நோன்பு, செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகில் அமைதி நிலவவேண்டும் என்பதற்காக, இம்மாதம் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை இறைவேண்டல், மற்றும் உண்ணாநோன்பு நாள்களாக கடைப்பிடிக்குமாறு ஈராக்கின் கல்தேய கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் இரஃபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள், அந்நாட்டுக் கத்தோலிக்கருக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
உலகெங்கும் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும், போர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ்க்குத் தயாரித்துவரும் இவ்வேளையில், உலகெங்கும் வாழ்கின்ற கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கர் அனைவரும் இம்மூன்று நாள்களில் உலகின் அமைதிக்காக நோன்பு மற்றும் செபம் ஆகிய பக்திமுயற்சிகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கிறிஸ்மஸ் என்பது ஏதோ ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு நிகழ்வாக மட்டும் நினைத்து அதைக் கொண்டாடுவது அல்ல, மாறாக, அன்பும் இரக்கமும் கொண்ட கடவுள், நம் மத்தியில் இருத்தலில் நம்பிக்கை வைப்பதாகும் என்று கூறியுள்ளார் கர்தினால் சாக்கோ.
எனவே, அன்று கிறிஸ்து பிறந்த அறிவிப்பை இன்று மகிழ்வோடு கொண்டாடுவதற்கு உண்ணாநோன்பால் நம்மைத் தயாரிக்கவேண்டும் எனவும், இது, நம் மனித மற்றும், ஆன்மிக விழுமியங்களை மீண்டும் வலியுறுத்துவதற்கு உதவுவதாக இருக்கும் என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள், தனது கிறிஸ்மஸ் பெருவிழாச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் தேவையிலுள்ள குடும்பங்களுக்கு ஆதரவு
கல்தேய முதுபெரும்தந்தையின் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள கர்தினாலின் இச்செய்தியில், மூன்று நாள் நோன்பு இருப்பதன் வழியாக, தேவையில் இருக்கின்ற குடும்பங்களுக்கு உதவுமாறும் கத்தோலிக்கருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த 120 கிறிஸ்தவக் குடும்பங்கள் உள்ளூர் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு தற்போது மொசூல் மற்றும் நினிவேயில் வாழ்கின்ற குடும்பங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால், இக்குடும்பங்கள், 2014ஆம் ஆண்டில் ஈராக்கின் ஐஎஸ் இஸ்லாமிய அரசின் ஆக்ரமிப்பால் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியவர்கள் என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்.
தேவையில் இருப்போருக்கு அறச்செயல்கள்
அமைதிக்காகச் சிறப்பாக நோன்பிருக்கும் இம்மூன்று நாள்களை, நம் பாவநடத்தையை மாற்றவும், தேவையில் இருப்போருக்கு உதவவுமான, செபம் மற்றும், தவத்தின் நாள்களாக அமைக்குமாறும் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் குறித்த கவலையையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்