தேடுதல்

ஹெய்ட்டியில் வன்முறை ஹெய்ட்டியில் வன்முறை 

அமைதிக்கு முன்வர ஹெய்ட்டி ஆயர்கள் அழைப்பு

உலகின் ஏழை நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் ஏழ்மை காரணமாக குற்றக் கும்பல்களின் எண்ணிக்கை பெருகிவருவது குறித்து ஆயர்கள் கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அரசியல், பொருளாதார, சமூக, மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்துவரும் ஹெய்ட்டியில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் உடனடியாக அமைதிக்கு முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

நாட்டின் இன்றைய துயர நிலைகள் குறித்து தங்கள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா செய்தியில் கவலையை வெளியிட்டுள்ள ஹெய்ட்டி ஆயர்கள், ஆயுதங்களைக் கைவிட வன்முறைக் கும்பல்களை விண்ணப்பித்துள்ளதோடு, சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் எனவும் வேண்டியுள்ளனர்.

உலகின் ஏழை நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் ஏழ்மை காரணமாக குற்றக் கும்பல்களின் எண்ணிக்கை பெருகிவருவது குறித்து கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், அரசியல் நிலையற்றதன்மையையும், பாதுகாப்பற்ற சூழல் பெருக்கத்தையும் அகற்றிட, அரசியல் தலைவர்கள் நாட்டிற்கு தங்களை அர்ப்பணித்து உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி ஹெய்ட்டி நாட்டு அரசுத்தலைவர் Jovenel Moise படுகொலைச் செய்யப்பட்டது, மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நிலநடுக்கத்தால் அந்நாடு பேரழிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, வன்முறைக் கும்பல்களின் கொலை நடவடிக்கைகள், மோதல்கள், பணம் பறித்தல், ஆள் கடத்தல்கள் அதிகரித்துள்ளதுடன் கத்தோலிக்க ஆலயங்களும் தாக்கப்பட்டுவருகின்றன.

பிணையல்தொகை பெறும் நோக்கத்தோடு கத்தோலிக்கத் துறவியரைக் கடத்திவைத்துப் பேரம்பேசுதலும் ஹெய்ட்டியில் அதிகரித்துள்ளது.

சமூக அமைப்புமுறையை, குறிப்பாக நீதித்துறையை மீண்டும் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஆயர்கள், ஹெய்ட்டி மக்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறவேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் சூழல்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தங்கள் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாச் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2022, 14:35