வன்முறையின்றி உரையாடலை மேற்கொள்வோம்:பெரு ஆயர்பேரவை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வன்முறை எப்போதும் தீர்வாகாது என்றும், வன்முறையின் பாதையை விடுத்து அமைதியான வழியில் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும் அழைப்பு விடுத்துள்ளது பெரு நாட்டு ஆயர் பேரவை.
டிசம்பர் 12, இத்திங்களன்று, பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ஏறத்தாழ 7 பேர் கொல்லப்பட்டதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.
அனைத்து அமெரிக்க நாடுகளின் பாதுகாவலியான குவாதலூப்பே அன்னை மரியாவின் பெருவிழாவன்று நிகழ்ந்துள்ள இந்த வன்முறைச் சம்பவங்களால் பெரிதும் கவலையடைந்துள்ள பெருவின் ஆயர்கள், உரையாடல் வழியாக உறவு பாலங்களை உருவாக்க வேண்டுமென்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபடாமல் நிலைமையை சரியான வழியில் கையாள்வதற்கு பொறுப்பில் உள்ளவர்கள் முயலவேண்டுமென விண்ணப்பித்துள்ள அந்நாட்டு ஆயர்கள், இவ்வன்முறையில் இறந்தவர்களுக்காகவும் அவர்தம் குடும்பங்களுக்காகவும் இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளனர்.
அரசியல் அமைப்பு முறை, மக்களாட்சி ஒழுங்கு, அனைத்து மக்களின் பொதுநலன், அதிலும் குறிப்பாக, மிகவும் பாதுகாப்பற்ற முறையில் வாழும் மக்கள்மீது அக்கறை ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், நாட்டில் நிகழ்ந்து வரும் ஆடம்பரமான அரசியல் செயல்பாடுகளைத் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கவலை, பயம் மற்றும் நிச்சயமற்ற நிலை தொடரக்கூடாது என்றும், நாட்டின் மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கும், மக்களின் உடன்பிறந்த உறவு நிலையைப் பேணுவதற்கும் அமைதியான மனநிலையுடன் கூடிய உண்மையான உரையாடல் அவசியம் என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்