திருவருகைக் காலம் 3ம் ஞாயிறு :சான்று பகரும் தூய வாழ்வு வாழ்வோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 35: 1-6a,10 II. யாக் 5: 7-10 III. மத் 11: 2-11)
இன்று நாம் திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரத்தைத் தொடங்குகின்றோம். இன்றைய மூன்று வாசகங்களும் பிறர் நம்மைக் குறித்துச் சான்று பகரும் அளவிற்குத் தூயவாழ்வு வாழ்வதற்கு நம்மை அழைக்கின்றன. 1918-ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள வடமலபுரம் என்னும் ஊரில் பிறந்தவர் மருத்துவர் ஜி.வெங்கட்டசுவாமி. அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியல் படித்தவர். பிறகு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 1944-ஆம் ஆண்டில் தன் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவரானார். அதன் பின்னர் இந்திய இராணுவ மருத்துவப் படையில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். ஆனால், கடுமையான மூட்டுவலி காரணமாக 1948-ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார். ஓர் ஆண்டு முழுவதும் படுத்தப் படுக்கையாகி தசைப்பிடிப்போடு கூடிய மூட்டுவலி காரணமாக அவதிப்பட்டார். கையில் பேனாவைப் பிடித்து எழுத முடியாத அளவிற்கு மிகுந்த வேதனைகளை அவர் அனுபவித்தார். இந்த நிலையிலிருந்து சற்று மீண்டு வந்ததும் மறுபடியும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கண் சிகிச்சையில் டிப்ளோமா மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். தனது அயராத உழைப்பாலும், தீர்க்கமான சிந்தனையாலும் கண் புரை அறுவை சிகிச்சையில் மிகச் சிறந்தவராகிப் புகழ் பெற்றார். இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் கண்சிகிச்சை நிபுணராகவும், பேராசிரியராகவும் பணி செய்தார். கண் பார்வை இழப்பை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல், இலவச கண்சிகிச்சை முகாம்கள் நடத்துதல், மருத்துவர்கள் எளிதில் செல்ல முடியாத கிராமப்புறங்களுக்கெல்லாம் சென்று கண்சிகிச்சை அளித்தல் என அளப்பரிய பணிகளை ஆற்றிவந்தார்.
‘Right to Sight’ அதாவது, ‘பார்வை என்பது மனித உரிமை’ என்பதே மருத்துவர் வெங்கட்ட சுவாமி அவர்களின் விருதுவாக்காக அமைந்தது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் அனைவருக்கும் பார்வை அளிக்க வேண்டும் என்பதும், பார்வை குறைபாடு ஏற்பாடா வண்ணம் அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பதும், அவருடைய முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது. 1976-ஆம் ஆண்டு தனது 58-ஆவது வயதில் அரசுப்பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். அந்த ஆண்டே ஒரு கண் மருத்துவமனையைத் தொடங்கிட விரும்பி வங்கிகளிடம் சென்று கடன் கேட்டார், ஆனால், அவர் பணிஓய்வு பெற்றுவிட்டார் என்பதாலும், நோயாளர்களிடம் மிகக் குறைந்தக் கட்டணம் வசூலிக்கும் மருத்துவர் என்று பெயர்பெற்றிருந்ததாலும் வங்கிகள் அவருக்குக் கடன்கொடுக்க முன்வரவில்லை. ஆனாலும் மனம் தளராதவராக, தனது குடும்பத்தவர்களிடம் இருந்த நகைகளை எல்லாம் வாங்கி அடகுவைத்து ஒரு சிறிய அளவில் கண் மருத்துவமனையைத் தொடங்கினார். இம்மருத்துவமனைக்கு வரும் அனைவரும் பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதைத் தனது முதல் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டிருந்தார். அவரின் இந்த உயர்ந்தப் பார்வைதான் இன்று ஆயிரமாயிரம் மக்கள் கண் பார்வை பெற உதவியிருக்கிறது. அவர் எழுப்பியதுதான் மதுரையில் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நிற்கும் அரவிந்த் கண் மருத்துவமனை. இன்று உலகமெங்கும் 50 மையங்களையும், 30 நாடுகளில் கிளைகளையும் கொண்டுள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 1200 பேர் கண் சிகிச்சைக்காக வருகின்றனர். 200-க்கும் மேற்பட்டோருக்குத் தரமான முறையில் கண் அறுவைசிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை 3 கோடியே, 20 இலட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். நாற்பது இலட்சம் பேர் கண் அறுவை சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலவசமாக சிகிச்சை பெற்றவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2006-ஆம் ஆண்டு மருத்துவர் வெங்கட்ட சுவாமி இறந்துவிட்டாலும், அவர் தொடங்கிய பணிகள் குன்றிலிட்ட தீபமாய் இன்றும் தொடர்ந்து ஒளிவீசிக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி, உலகின் மிகச்சிறந்த சமூகத் தொண்டு நிறுவனம் என்று அரவிந்த் கண் மருத்துவமனைப் பற்றி புகழ்ந்துள்ளார் அலெஸ்ஸியோ பைரோனி என்ற உலகப் பயணி.
மேலும் இம்மருத்துவமனையில் பார்வை பெற்ற ஏழை எளிய மக்களில் பலரும், ‘ரொம்ப அருமையான மருத்துவமனை, பணம் காசு இல்லாத மக்களுக்கு இலவசமா கண் அறுவை சிகிச்சை செய்யுறாங்க, நல்லா கவனிச்சிக்கிறாங்க, மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போறதிலருந்து, திரும்ப வீட்டுக்குக் கொண்டுவந்து விடுற வரைக்கும் அவங்களே முழுப்பொறுப்பும் எடுத்துக்கிறாங்க. அவங்க செய்யுற இந்தச் சேவை மனதுக்கு ரொம்ம பிடிச்சிருக்கு’ என்று சான்று பகர்ந்ததை நானும் நேரடியாகவே கேட்டுள்ளேன். மன உறுதி அற்றவர்களுக்கும், நம்பிக்கை இழந்தவர்களுக்கும், வாழ்க்கையில் நைந்து போனவர்களுக்கும், அனைவராலும் கைவிடப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கும் நற்பணி செய்பவர்களுக்குப் பலர் நற்சான்று வழங்க முன்வருவர் என்பதும், அச்சான்று உண்மையுள்ளதாய் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை. இன்றைய நற்செய்தி இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இரண்டாவது பகுதியில் திருமுழுக்கு யோவானைக் குறித்துத் தான் கொண்டிருக்கும் பார்வையை வெளிப்படுத்துகின்றார் இயேசு. அதாவது, அவரது பணிவாழ்வுக் குறித்து நற்சான்று வழங்குகின்றார். இப்போது அப்பகுதியை வாசித்து நமது சிந்தனைகளை இன்னும் விரிவுபடுத்துவோம்.
அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.‘இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
திருமுழுக்கு யோவானைக் குறித்துச் சான்று பகிர்வதற்கு முன்பாக, மக்கள் அவர்மீது எம்மாதிரியான பார்வையைக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் குறித்துக் கேள்விகள் எழுப்புகின்றார் இயேசு. அதன்பிறகே, ‘மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை’ என்று சான்று பகர்கின்றார் இயேசு. அதேவேளையில் தன்னைக் குறித்துச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார் என்று திருமுழுக்கு யோவானைக் குறித்துக் கூறும் இயேசு, ‘யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு’ என்று மேலும் அவருடைய வாழ்வுக்குச் சான்று பகிர்கிறார். அதுமட்டுமன்றி, தன்னை அனுப்பிய தந்தையும் தனக்குச் சான்று பகர்ந்துள்ளதாகக் கூறுகிறார் இயேசு. “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். “யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். “என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்லை (யோவா 5:31-37).
ஒரு துறவி தனது சீடர் மூவருடன் நடந்துபோய் போய்க்கொண்டிருந்தார். அந்நேரத்தில், "எப்போது இரவு முடிந்து பகல் தொடங்குகிறது" என்று தனது சீடர்களிடம் கேட்டார். "விடிந்ததும் சூரியனை நம்மால் பார்க்க முடிந்தால் இரவு முடிந்து பகல் தொடங்கியுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்" என்றார் ஒரு சீடர். "இல்லை" என்றார் குரு. "அப்படியல்ல குருவே, எதிரே வருவது யானையா அல்லது பூனையா என்று நம்மால் வித்தியாசப்படுத்திக் கூற முடிந்தால், இரவு முடிந்து பகல் தொடங்குகிறது என்று அர்த்தம்" என்றார் இன்னொருவர். "அதுவுமில்லை" என்றார் குரு. "நான் சரியாகக் கூறுகின்றேன் குருவே" என்று கூறிய மூன்றாமவர், மரத்தையும் மனிதரையும் நம்மால் வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது என்றால், இரவு முடிந்து பகல் தொடங்குகிறது என்று அர்த்தம்" என்றார். "நீங்கள் மூவருமே சொல்வது தவறு என்றுரைத்த குரு, "எப்போது ஒரு மனிதர் தனக்கு முன்னால் வரும் இன்னொரு மனிதரை எவ்வித வேறுபாடும் பார்க்காமல், ‘நீ என் சகோதரர்’, ‘நீ என் சகோதரி’ என்று அவரை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றாரோ, அப்போதுதான் இரவு முடிந்து பகல் தொடங்குகிறது என்று அர்த்தம்" என்றார். இன்றைய நம் உலகில், நாம் ஒருவரைப் பார்க்கும்போது நமது பார்வைகளில் ஒருவிதமான தெளிந்து தேர்தல் (discernment) இருக்கவேண்டும். ஒர் இடத்தையோ, ஒரு நிகழ்வையோ, ஒரு நபரையோ நாம் பார்க்கும்போது, நமது பார்வைகள் வித்தியாசப்படவேண்டும். அதாவது, நற்சான்று பகரும் இயேசுவின் பார்வையை நாம் கொண்டிருக்கவேண்டும்.
இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்ற திருமுழுக்கு யோவானின் கேள்விக்குத் தான் செய்யும் செயல்களை மட்டுமே முன்னிறுத்தி தன்னை உண்மையான மெசியாவாக வெளிப்படுத்துகிறார் இயேசு. காரணம், ஆதிக்க சிந்தனைகளைக் கொண்டிருந்த ஆட்சியாளர்களும், அரியணையில் வீற்றிருந்தோரும், பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள், தலைமைக் குருக்கள் ஆகிய அனைவரும் அரசியல் மெசியாவுக்காகக் காத்திருந்தனர். அதாவது, தாவீதைப்போன்று எதிரிகளை இல்லாதொழித்து, அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வார், அவ்வாட்சியில் தங்களுக்கும் பங்கு கிடைக்கும் என்று மெசியா குறித்த தங்களின் தவறான எண்ணங்களைக் குவித்து வைத்திருந்தனர். ஆனால், இயேசு, தன்னை எல்லாருக்குமான மெசியாவாக, அதிலும் குறிப்பாக, பாவிகளுக்காகத் துன்புறும் மெசியாவாக, சிலுவை வழி அமைதியையும், உடன்பிறந்த உறவு நிலையையும், பாகுபாடுகளற்ற சமத்துவ சமுதாயத்தையும் கட்டியெழுப்புவதற்கு வந்த ஒரு உண்மை மெசியாவாக நிலைநிறுத்திக்கொண்டார்.
இறுதியாக, திருமுழுக்கு யோவானைக் குறித்து இயேசு சான்று பகரும் அதேவேளையில், "நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” (மத் 3:11-12) என்று திருமுழுக்கு யோவானும் இயேசுவைக் குறித்துச் சான்று பகர்கின்றார்.
ஆகவே, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நாம் சரியானவற்றைக் கேட்கவும், பார்க்கவும், அதுகுறித்து சான்று பகிரவும் நம்மை அழைக்கின்றன. இன்றைய நம் உலகில், ‘சான்று பகிர்தல்’ என்பது தவறான வழியில் அமைகிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. காரணம், சரியான வழியில் ஒருவரின் செயல்களை நோக்காமலும், அவைகள் குறித்து சீர்தூக்கிப் பார்க்காமலும், தனது சுய இலாபத்திற்காக அவர் செய்யாத நற்செயல்களைக் கூட செய்துகாட்டி சாதித்துவிட்டதாகக் கூறி அவருக்கு நற்சான்று வழங்கப்படுகிறது. அதாவது, நற்சான்றுக்கு உரியவரெல்லாம் புறந்தள்ளப்பட்டு நற்சான்றுக்குத் தகுதியற்றவர்கள் அனைவரும் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இயேசுவும் திருமுழுக்கு யோவானும் ஒருவருக்கொருவர் நற்சான்று வழங்கியது போன்றும், எலிசபெத் அன்னை மரியாவைக் குறித்து நற்சான்று வழங்கியதுபோன்றும், நம்மைக் குறித்துப் பிறர் நற்சான்று பகரும் அளவிற்கு நாமும் தூய வாழ்வு வாழ்வோம். அதற்கான இறையருளை இந்நாளில் இறைஞ்சி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்