தேடுதல்

அழகிய நீரோடை அழகிய நீரோடை  

விவிலியத் தேடல்:திருப்பாடல் 36-2 இறைவன் தரும் பேரின்ப நீரோடை!

நமது அன்றாட வாழ்வில் நாமும் பேரன்பும், நீதியும், நேர்மையும், உண்மையும் கொண்டு துன்புறுவோரின் துயர்துடைக்கும் தூய மக்களாவோம்.
திருப்பாடல் 36-2

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'வேண்டும் நமக்கு இறையச்சம்! என்ற தலைப்பில் 36-வது திருப்பாடலில் 01 முதல் 04 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வார விவிலியத்தேடலில் 05 முதல் 08 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது  உமது வாக்குப் பிறழாமை. ஆண்டவரே, உமது நீதி இறைவனின்  மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை; மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே; கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர் (வசனம் 5-8)

மேற்கண்ட இந்த நான்கு இறைவசனங்களிலும் கடவுளின் பேரன்பு, நீதி, தீர்ப்புகள் ஆகிய மூன்றையும் வானத்துடனும், முகில்களுடனும், மலைகளுடனும் ஒப்பிட்டு ஒரு சிறந்த கவிஞரைப் போன்று அழகுற வர்ணிக்கின்றார் தாவீது அரசர். மேலும் கடவுளின் பேரன்பு புகலிடம் தரும் பறவைகளின் இறக்கைகள் போன்றது என்றும், அவரது செழுமையும் பேரன்பும் அனைத்து உயிர்களையும் காக்கும் வற்றாத நீரோடைபோன்றது என்று புளங்காகிதம் அடைகின்றார். இதன் காரணமாகவே, ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார் (திபா 23:1-3) என்றும், உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது (திபா 104:10) என்றும் பாடுகின்றார் தாவீது. அதுமட்டுமன்றி, அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில், அவர்கள்மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார் (எசா 49:10)  என்று எசாயாவும், அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில், நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை (எரே 31:9) என்று எரேமியாவும் கடவுளின் பேரன்பை நீரூற்றாக ஒப்புமைப்படுத்திக் கூறுவதைக் காண்கின்றோம்.

மதுரையை சேர்ந்த மருத்துவ அவசர ஊர்தியின் ஓட்டுனரான ஹரிகிருஷ்ணன் என்பவர் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பிறரன்பு பணிகள் ஆற்றி வருகின்றார். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் விபத்து, கொலை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு என ஒவ்வொருநாளும் 15-க்கும் மேற்பட்டோர் இறக்கும் நிலையில், அவர்களில் யாருமற்ற அனாதை உடல்களை பிரேத பரிசோதனைக்குப் பின்பு தானே கொண்டு சென்று தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்யும் பணியை அற்புதமாக செய்து வருகின்றார். கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழைகளின் இறந்த உடல்களுக்கு இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து அடக்கம் செய்திருக்கிறார். மேலும் விபத்து மற்றும் கொலை நடக்கும் இடங்களில் இறந்த உடல்களை அப்புறப்படுத்துவதிலும், உயிருக்குப் போராடுபவர்களை சற்றும் தாமதிக்காமல் மீட்டுத் தனது மருத்துவ அவசர ஊர்தியில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதிலும் காவலர்களுக்குப் பெருமளவில் உதவி வருகிறார். இவரின் இந்தப் பிறரன்பு சேவையால் மரணத்தின் வாயிலுக்குச் சென்ற பலர் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர்பிழைத்துள்ளனர். எந்தப் பிரதி பலனும் எதிர்பாராமல் இவர் செய்யும் இந்த நற்பணிகள் மதுரை காவல் துறையினருக்கும், அரசு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பேருதவியாக உள்ளது. இதன் காரணமாக, நகரிலுள்ள 22 காவல் நிலையங்களின் காவலர்களும், புறநகரிலுள்ள 13 காவல் நிலையங்களின் காவலர்களும் எங்கு விபத்து மற்றும் கொலை நடந்தாலும் 108 வாகனத்தை அழைக்கிறார்களோ இல்லையோ இவரைத்தான் முதலில் அழைக்கிறார்கள். மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி தேநீர் கடையை கவனித்துக்கொள்கிறார். இவர் தொடக்கத்தில் அரசு மருத்துவ மனையின் பிணவறைக்கு முன்பு தேநீர் கடை வைத்திருந்தார். அப்போது சிலர் இறந்தவர்களை வீட்டிற்குக் கொண்டு செல்லவும், இறுதிச் சடங்குகள் செய்யவும் பணம் இல்லாமல் தவியாய்த் தவிப்பதைப் பார்த்து இந்த வழியில் நான் உதவலாமே என்று முடிவெடுத்து இந்தப் பிறரன்புப் பணிகளைக் கடந்த 14 ஆண்டுகளாக செய்து வருகிறார். பேரன்பும், வாழ்வு தரும் ஊற்றுமாக இருந்து மனிதம் காத்துவரும் இந்த மாமனிதர் உண்மையில் எப்போதும் நினைவு கூர்ந்து போற்றத்தக்கவர்.

'நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல்' என்ற தலைப்பில் லூக்கா நற்செய்தியாளர் நமதாண்டவர் இயேசு நிகழ்த்திய ஒரு அருளடையாளத்தைப் பதிவு செய்துள்ளார். இறந்த இளைஞர் அக்கைம்பெண்ணுக்கு ஒரே மகன். அவ்விளைஞரை இயேசு உயிர்ப்பித்துக் கொடுக்கின்றார். இந்த அருளடையாளத்தின் சிறப்பு என்னவென்றால், யாரும் அழைக்காமல், தானே இத்தேவையை உணர்ந்தவராய் இவ்வருளடையாளத்தை நிகழ்த்துகிறார் இயேசு. எந்தச் சமுதாயமாக இருப்பினும், ஒரே ஒரு ஆண்மகனைப் பெற்றுள்ள ஒரு பெண் கைம்பெண்ணாகும்போது, அவரது மகன்தான் அவருக்கு வாழ்வின் மையமாகுகின்றார். அதாவது, தந்தையின் பொறுப்பிலிருந்து எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றியாக வேண்டும். அந்த மகனே இறந்துவிட்டால், கைம்பெண்ணான அந்தத் தாய் எப்படித் துடிதுடித்துப் போவாள் என்பதை நாம் அவசியம் எண்ணிப்பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் தாயான அன்னை மரியாவும் ஒரு கைம்பெண் என்பதையும் நாம் அறிவோம். தனது தந்தை யோசேப்பை இழந்திருந்த அன்னை மரியாவின் நிலையை இயேசு அறிந்திருந்தபடியால்தான் இந்த அருளடையாளத்தை அவர் தேடிப்போய் நிகழ்த்துகிறார், 'அழாதீர்' என்று அக்கைம்பெண்ணிடம் ஆறுதல் கூறிவராய் அவ்விளைஞரை உயிர்ப்பித்துக் கொடுத்து அத்தாயின் கண்ணீரைத் துடைக்கின்றார். இதனைச் சற்றும் எதிர்பாராத அத்தாய், “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” (லூக் 7:16) என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார்.

அவ்வாறே, முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவர் பெத்சதா குளத்தில் இறங்கி நலம் பெரும் நிகழ்வை யோவான் தனது நற்செய்தியில் பதிவு செய்துள்ளார். அதாவது, பெத்சதா என்ற ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். சில வேளைகளில் வானதூதர் வந்து இக்குளத்தின் நீரை கலக்குவார் என்றும், அப்போது யார் முதலில் சென்று அக்குளத்தில் இறங்குகின்றாரோ அவர்தான் உடல்நலம் பெறுவார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில்தான் இயேசு அந்நோயாளரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்கிறார். அப்போது அம்மனிதர் “ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று கவலைதோய்ந்த முகத்துடன் தனது இயலாமையை எடுத்துரைக்கின்றார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்று கூறிய உடனேயே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார் என்று அறிகின்றோம் (யோவா 5:1-9). ஆக, இயேசு தனது பணிவாழ்வில் நிகழ்த்திய அத்தனை அருளடையாளங்களிலும் அவரது பேரன்பும், இரக்கச் செயல்களும் நீரோடையாய் பொங்கி வழிந்தோடியதைப்  பார்க்கின்றோம்.

இதன் காரணமாகவே, தாவீது அரசரும் இறைவன் தனக்குச் செய்த நற்செயல்களை மனதில் கொண்டு கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர் என்கின்றார். அதாவது, கடவுள் தனக்குச் செய்த உதவியை அவரது பேரன்பின் வெளிப்பாடாக எடுத்துக்காட்டுகின்றார். ஆகவே, நமது அன்றாட வாழ்வில் நாமும் பேரன்பும், நீதியும், நேர்மையும், உண்மையும் கொண்டு துன்புறுவோரின் துயர்துடைக்கும் தூய மக்களாவோம். அதற்கான அருள்வரங்களை ஆண்டவரிடம் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2023, 13:44