ஒருவழிப்பாதையின் தடம் - ஞானம் கடவுளின் கொடை
மெரினா ராஜ் – வத்திக்கான்
சாலமோன் அரசர் ஞானம் நிறைந்தவர், அவரது ஆட்சியில் இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சி, அமைதி கொண்டவர்களாக, வசதிகள் நிரம்பப் பெற்றவர்களாக வாழ்ந்துவந்தனர். ஒருமுறை அரசவைக்கு ஒரு வித்தியாசமான வழக்கு வந்தது. ஓர் ஆண் குழந்தைக்கு இரண்டு தாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு தாய், அரசனைப் பார்த்து, இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம், எனக்கு ஒரு மகன் பிறந்தான், இரண்டு நாள்களுக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான். ஒருநாள் இரவு அவளுடைய மகன் இறந்துவிட்டான். எனவே தூங்கிக்கொண்டிருந்த என் அருகில் இறந்த குழந்தையைப் போட்டு விட்டு உயிரோடிருந்த என் மகனைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டாள். கண் விழித்துப் பார்த்தபோது இது என் குழந்தை அல்ல என்று கண்டு கொண்டேன் என்றார். இரண்டாம் தாயோ, அவள் சொல்வது உண்மையல்ல, உயிரோடிருக்கும் இந்தக் குழந்தைதான் என்னுடைய மகன். நம்புங்கள் என்றார். இப்படியே இரு தாய்களும் அரசனின் முன்பாக வாக்குவாதம் செய்து வாய்ச்சண்டை செய்து கொண்டார்கள்.
சாலமோனின் தீர்ப்பு
தனது மெய்க்காப்பாளரை அழைத்த அரசர் சாலமோன், வாளினால் இந்தக் குழந்தையை இரண்டாக வெட்டி, ஆளுக்குப் பாதியாக இப்பெண்களிடம் கொடுத்துவிடு” என்றார். அரசரின் ஆணையைக் கேட்டு அலறியக் குழந்தையின் உண்மையான தாய், என் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள். அவளுக்கே அவனைக் கொடுத்துவிடுங்கள், என்று மண்டியிட்டுக் கதறி அழுதார். ஆனால், மற்றவரோ, எங்கள் இருவருக்குமே அந்தக் குழந்தை வேண்டாம். அதை இரண்டாக வெட்டிப் போடுங்கள் என்றார். இதைக் கேட்ட சாலமோன் அரசர் காவலனைத் தடுத்து, குழந்தையைக் கொல்ல வேண்டாம் எனக் கதறித் துடித்தவரே இக்குழந்தையின் உண்மையான தாய். அவரிடமே அதைக்கொடு என்றார். பொய் கூறிய தாய் வெட்கித் தலைகுனிந்து அவமானத்தால் கூனிக்குறுகிப் போனார். ஒரு குழந்தையுடன் வந்த இரு தாய்களின் பிரச்சினையைத் தீர்த்து வைத்த சாலமோன் அரசரைப்பற்றி இஸ்ரயேல் மக்கள், ஒரு ஞானமுள்ள அரசர் கடவுளால் நமக்கு அருளப்பட்டிருக்கிறார் என்று கூறி மகிழ்ந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்