பிலிப்பீன்ஸ் விவசாயிகளுக்கு உதவும் காரித்தாஸ் அமைப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
பொருளாதார விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் விவசாயிகளுக்கு காரித்தாஸ் அமைப்பு, உள்ளூர் விவசாயிகளின் விளைபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, உள்ளூர் சந்தைகளில் அப்பொருட்களை மலிவான விலையில் விநியோகித்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Joseph Layres.
2022 சனவரி மாதத் தொடக்கத்திலிருந்தே பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரப் பொருட்களின் விலையேற்றத்தால் நாடு முழுக்க அரசை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்று வருகின்ற வேளையில் பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பு மக்களுக்கு உதவி வருவதாக தெரிவித்துள்ளார் அவ்வமைப்பின் பொருளாளரும் இயேசு சபை அருள்பணியாளருமான Joseph Layres.
விவசாயிகளுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விவசாயப் பொருட்களை அவர்களிடமிருந்து வாங்கி அவற்றை உள்ளூர் சந்தையில் குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்வதாகவும், இலாபத்தை எதிர்பார்த்து அல்ல, மாறாக துன்புறும் விவசாயிகளை இச்செயல் வழியாக ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Joseph Layres
இயேசுசபையினரால் நடத்தப்படும் Tanging Yaman அறக்கட்டளையானது பிலிப்பீன்ஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக, வெங்காயம், சர்க்கரை போன்ற பொருட்களை சந்தை விலையை விட பாதி விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளது என்று அவ்வறக்கட்டளையின் தலைவரான இயேசுசபை அருள்பணியாளார் Manoling Francisco கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், பிலிப்பீன்ஸ், பெரும்பாலான கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாய நடவடிக்கைகளை நம்பியுள்ள ஒரு பெரிய விவசாய நாடாகும் என்றும், அரசு புள்ளிவிவரங்களின்படி நாட்டின் 1 கோடியே 14 இலட்சம் மக்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்றும் அதில் 36 விழுக்காட்டினர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிடுள்ளார் அருள்பணியாளர் Francisco.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏறக்குறைய 120 பிலிப்பைன்ஸ் விவசாயிகள் கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று, நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஊர்வலம் ஒன்றை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 1,000 விவசாயிகளைப் கொண்ட விவசாயிகள் குழுவான வடக்கு பிலிப்பீன்ஸின் (APNP) விவசாயிகள் சங்கத்தாரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்