தேடுதல்

பார்வோன் கண்ட கனவு பார்வோன் கண்ட கனவு 

தடம் தந்த தகைமை – கனவு விளக்கமும் ஆளுநர் பதவியும்

எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏழு ஆண்டுகள் வரவிருக்கின்றன. அதன்பின் ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும், என்றார் யோசேப்பு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சிறையிலிருந்து கொணரப்பட்ட யோசேப்பிடம் பார்வோன் சொன்னதாவது: “என் கனவில் நைல் நதிக்கரையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது கொழுத்த, ஏழு அழகிய பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி வந்து, கோரைப் புற்களிடையே மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றிற்குப்பின், வற்றிய, மிகவும் நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் கரையேறி வந்தன. நலிந்து மெலிந்த இந்தப் பசுக்கள் முதலில் வந்த கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன. அதன்பின் நான் துயில் கலைந்தேன். மீண்டும் ஒரு கனவு கண்டேன். அதில் செழுமையான, முற்றிய ஏழு கதிர்கள் ஒரே தாளில் தோன்றக் கண்டேன். அவற்றிற்குப்பின் தீய்ந்த, பதராகிக் கீழைக் காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் வெளிவந்தன. இந்தப் பதரான ஏழு கதிர்கள் அழகிய ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன.”

அதற்கு யோசேப்பு பார்வோனை நோக்கி, “ஏழு நல்ல பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு நல்ல கதிர்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஆக, கனவுகள் குறிப்பன ஒன்றே. அவற்றிற்குப்பின் வந்த மெலிந்த, அருவருப்பான ஏழு பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். பதராகி வெப்பக் காற்றினால் தீய்ந்துபோன ஏழு கதிர்கள் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏழு ஆண்டுகள் வரவிருக்கின்றன. அதன்பின் ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும். இது கடவுளால் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதற்கும், அவரால் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதற்கும் அறிகுறியாகவே பார்வோனுக்குக் கனவு இருமுறை வந்தது. வரவிருக்கும் வளமான இந்த ஆண்டுகளிலேயே, தானியம் முழுவதையும் பார்வோனின் அதிகாரத்தில் அவர்கள் கொள்முதல் செய்து, பின்னர் உண்ணக் கொடுப்பதற்கென நகர்களில் சேமித்து வைக்கட்டும். எகிப்து நாட்டில் பஞ்சம் வரவிருக்கும் ஏழாண்டுகளில் பயன்படுத்துமாறு தானியம் இவ்வாறு சேமித்து வைக்கப்படட்டும். நாடும் பஞ்சத்தினால் அழியாதிருக்கும்” என்றார்.

அவர் சொன்னது பார்வோனுக்கும் அவன் அலுவலர் அனைவருக்கும் நலமெனத் தோன்றியது. பார்வோன் யோசேப்பை நோக்கி, “இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர். எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர். உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும். அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்” என்றார். பார்வோனால் எகிப்து நாடு முழுவதற்கும் யோசேப்பு ஆளுநர் ஆனார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2023, 09:43