தடம் தந்த தகைமை : ‘இரத்தமயமாக மாறிய எகிப்து!’
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பார்வோனின் கல்மனதை அறிந்த ஆண்டவர், மோசேயை நோக்கி, “பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது. மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான். எனவே, காலையில் நீ பார்வோனிடம் போ. அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான். அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்; பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்” என்றார்.
மேலும், ஆண்டவர் மோசேயிடம், “எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். "பாலைநிலத்தில் எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு என்று ஆண்டவர் கூறியும் நீ இதுவரை செவிசாய்க்கவில்லை. ஆகவே, கையிலுள்ள கோலால் நானே நைல்நதி நீரை அடிப்பேன். அது இரத்தமாக மாறும். நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுக்கும். எகிப்தியர் நைல்நதி நீரைக் குடிக்க முடியாமல் திணறுவர். இவற்றால் ‘நானே ஆண்டவர்’ என நீ அறிந்துக்கொள்வாய்." என்று ஆண்டவர் கூறுகிறார் என்று சொல் என்றார்.
மேலும், ஆண்டவர் மோசேயிடம், “நீ ஆரோனை நோக்கி ‘உனது கோலை எடு: எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு! அவை இரத்தமாக மாறும். ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும் கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும்’ என்று சொல்” என்றார். ஆண்டவர் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் செய்தனர். உடனே, எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாக மாறியது. இதை அறிந்த எகிப்திய மந்திரவாதிகளும் தம் வித்தைகளால் இதுபோல செய்து காட்டினர். எனவே, பார்வோனின் மனம் மீண்டும் கடினப்பட்டது. ஆண்டவர் கூறியிருந்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை..
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்