அண்ணன் ஏசாவிடம் திரும்பி வரும் யாக்கோபு  அண்ணன் ஏசாவிடம் திரும்பி வரும் யாக்கோபு  

தடம் தந்த தகைமை – சகோதரர் இணைதல்

தான் ஏமாற்றிய சகோதரருக்குப் பயந்து யாக்கோபு ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்க, ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தந்தையை ஏமாற்றி தலைமகனுக்குரிய ஆசீரைப் பெற்றுவிட்ட யாக்கோபு, தன் அண்ணன் எந்நேரமும் தன்னைக் கொல்லலாம் என அஞ்சிக்கொண்டேயிருந்தார். பின்பு, யாக்கோபு ஏதோம் நாட்டிலுள்ள சேயிர் பகுதியில் வாழ்ந்து வந்த தம் சகோதரன் ஏசாவிடம் சமாதானத்தூது அனுப்பினார். அத்தூதர் யாக்கோபிடம் திரும்பி வந்து, “நாங்கள் உம் சகோதரர் ஏசாவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் உம்மைச் சந்திக்க வருகிறார்” என்றனர். யாக்கோபு மிகவும் அஞ்சிக் கலங்கித் தம்முடன் இருந்த ஆள்களையும், ஆடுமாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரு பகுதிகளாகப் பிரித்தார். ஏனெனில், ஏசா வந்து ஒரு பகுதியைத் தாக்கினாலும் எஞ்சிய பகுதியாவது தப்புமே என்று நினைத்துக் கொண்டார். நானூறு பேருடன் தன்னை நோக்கி வரும் சகோதரர் ஏசாவுக்கு அன்பளிப்பாக இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கிடாய்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களையும், முப்பது பெண் ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்து ஆண் கழுதைகளையும் தேர்ந்தெடுத்தார். யாக்கோபின் அன்பளிப்புகள் அவருக்கு முன் சென்றன. யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க, ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார். அவர் தம் சகோதரரை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார். ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2023, 12:17