தேடுதல்

 கொள்ளைநோய் - தவளைகள் கொள்ளைநோய் - தவளைகள்  

தடம் தந்த தகைமை – தவளைகளால் நிரம்பிய எகிப்து

ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரயேல் மக்களை அனுப்ப மறுத்த பார்வோன் மன்னன் முன்னால் மோசேயும் ஆரோனும் கடவுளின் வாக்கை எடுத்துரைத்தனர். எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு. இல்லையென்றால் உன் நிலம் வீடு ஊர் முழுவதையும் தவளைகளால் நிரப்புவேன் என்று பார்வோனிடன் சொல் என்று கடவுள் மோசேயிடம் கூறினார். அதன்படி மோசேயும் ஆரோனும்  பார்வோன் முன்னின்று கூறினர். பார்வோன் மன்னன் மனம் இரங்காவிடில் தவளைகளை நைல்நதி, பார்வோன் வீடு, படுக்கை அறை, படுக்கை,அலுவலர் குடிமக்கள் வீடு, அடுப்பு, மாவுபிசையும் தொட்டி என் எல்லா இடங்களிலும் நிரப்பிவிடுவார் என்றார். பார்வோன் மனம் இரங்கவில்லை எனவே கடவுள் கூறியபடி மோசே ஆரோனை நோக்கி, “நீ ‘கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய்’ என்றார். ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.

இதனைக் கண்ட பார்வோன் மன்னன் அச்சமுற்று மோசேயையும் ஆரோனையும் அழைத்து, “என்னிடமிருந்தும், என் குடிமக்களிடமிருந்தும் தவளைகளை அகற்றிவிடுமாறு ஆண்டவரை மன்றாடுங்கள். ஆண்டவருக்குப் பலியிடுமாறு நான் மக்களை அனுப்பிவிடுவேன்” என்று கூறினான். மோசே பார்வோனை நோக்கி, தவளைகளை அழித்துவிட வேண்டும் என்று இறைவனிடம் நான் உனக்காக எப்போது செபிக்க வேண்டும் என்றுகேட்க, மன்னனோ நாளைக்கு என்றான் அதன்படியே மோசே கடவுளிடம் வேண்ட கடவுளும் தவளைகளை நாட்டிலிருந்து அழித்து விட்டார். வீடுகள், முற்றங்கள், வயல்கள் ஆகியவற்றில் தவளைகள் மடிந்து போயின. அவற்றைக் குவியலாக திரட்டவே நாடு முழுவதும் நாற்றமெடுத்தது. நாட்டிற்கு வந்த தொல்லை முடிந்து விட்டது என்று எண்ணிய பார்வோன் மன்னன் தன் மனத்தை மேலும் கடினப்படுத்திக் கொண்டான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2023, 11:40