தேடுதல்

பார்வோன் மன்னன் கனவில் கண்ட காட்சிகள் பார்வோன் மன்னன் கனவில் கண்ட காட்சிகள் 

தடம் தந்த தகைமை – பார்வோனின் கனவுகள்

நலிந்து மெலிந்த பசுக்கள் அழகிய, கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கியதாகவும், பதரான கதிர்கள் ஏழு, செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன என கனவு கண்டார் பார்வோன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

யோசேப்பு சிறையிலிருந்த காலத்தில் பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன் நைல் நதிக் கரையில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அழகிய கொழுத்த ஏழு பசுக்கள் நதியிலிருந்து கரைக்கு வந்து கோரைப்புற்களிடையே மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றைத் தொடர்ந்து, நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளி வந்து கரையில் இருந்த மற்ற பசுக்களோடு நின்று கொண்டன. நலிந்து மெலிந்த பசுக்கள் அழகிய, கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன. அதன்பின் பார்வோன் துயில் கலைந்தான். மீண்டும் அவன் கண்ணயர்ந்தபோது இரண்டாவது கனவு கண்டான். அக்கனவில் செழுமையான பொன் நிறமான ஏழு கதிர்கள் ஒரே தாளில் காய்த்திருந்தன. அதன் பின், கீழைக் காற்றினால் தீய்ந்துபோன கதிர்கள் தோன்றின. அந்தப் பதரான கதிர்கள் ஏழும் செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் கண்விழித்து, தான் கண்டது கனவு என்று உணர்ந்தான். காலையில் அவன் மனம் கலக்கமுற, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துத் தன் கனவுகளை எடுத்துரைத்தான். ஆனால், அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறுவார் எவருமில்லை.

அப்போது மதுபரிமாறுவோரின் தலைவன் பார்வோனை நோக்கி, “என் பிழை இன்றுதான் என் நினைவிற்கு வருகிறது. பார்வோனாகிய தாங்கள் முன்னொரு சமயம் உம் ஊழியர்மீது கடுஞ்சினமுற்று அடியேனையும் அப்பம் தயாரிப்போரின் தலைவனையும் காவலர் தலைவனின் வீட்டில் சிறைவைத்தீர். அச்சமயம் ஒரே இரவில் வெவ்வேறு பொருள் கொண்ட கனவுகளை நானும் அவனும் கண்டோம். அங்கே காவலர் தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் எங்கள் கனவுகளுக்கு, அவனவன் கனவுக்கேற்ப விளக்கம் கூறினான். அவன் எங்களுக்கு விளக்கிக் கூறியபடியே யாவும் நடந்தன, என்றான். பார்வோன் ஆளனுப்பி யோசேப்பை அழைத்துவரச் செய்தான். யோசேப்பும் பார்வோனின் கனவுக்கு விளக்கமளித்தான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2023, 12:28