தேடுதல்

மரியின் ஊழியர் சபையை உருவாக்கிய ஏழு புனிதர்கள் மரியின் ஊழியர் சபையை உருவாக்கிய ஏழு புனிதர்கள் 

நேர்காணல் – மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள்

அழிந்துபோகும் இன்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த மக்கள் மத்தியில் இவ்வேழு புனிதர்களின் ஈடுபாடு இறைவன் மீதும் ,குறிப்பாக அன்னை மரியாள் மீதும் மிக அதிகமான பக்தி கொண்டிருந்தனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் என்னும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகின்றது என்பார்கள். ஏனெனில் தாய் என்பவள் அவ்வளவு சக்தி மிக்கவள். பிறந்த பின் நம்மை நேசிப்பவர்கள் மத்தியில் தாய் நாம் கருவில் உருவான நாள் முதலாய் , நம் உருவம் உருவாக தொடங்கும் முன் நம்மை நேசித்தவள். எத்தனை வயதானாலும் தாய் மீது நாம் கொண்ட பாசமும் மாறாது . அவள் நம்மீது கொண்ட நேசமும் மறையாது. இப்படி அன்னையின் அன்பை பற்றி பேசினால் காலமும் நேரமும் போதாது. அதிலும் அன்னை மரியாளின் அன்பை பற்றி எடுத்துசொல்ல ஒரு யுகம் போதாது. கிறிஸ்தவ மக்களுக்கு தாயாக பாதுகாவலியாக பரிந்துரைப்பவளாக அன்றும் இன்றும் என்றும்  இருப்பவர் அன்னை மரியா. இத்தகைய அன்னை மரியாவைத் தங்களின் மாதிரிகையாக கொண்டு இல்லற வாழ்வை விட்டு துறவு வாழ்வை மேற்கொண்ட ஆண்களும் பெண்களும்  ஆயிரமாயிரம் பேர். அவர்களில் மிக சிறப்பானோர் மரியின் ஊழியர் சபையினர். பிப்ரவரி 17 அன்று தங்களின் சபை உருவாக காரணமான 7 புனிதர்களை நினைவு கூர்ந்து திருவிழாவினை சிறப்பித்து மகிழும் வேளையில், அப்புனிதர்கள் பற்றிய தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி அந்தோணி கஸ்பார் மேரி. புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை பொது ஆலோசகரான சகோதரி கஸ்பார் மேரி அவர்கள் சிறந்த சிந்தனையாளர், படைப்பாற்றல் மிக்கவர், அன்னை மரியாவின் மீது அளவற்ற அன்பு கொண்டவர். சகோதரி அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.

மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள் - அருள்சகோதரி அந்தோணி கஸ்பார் மேரி மஊச

புனித பொன்பீலியூஸ், புனித அலேக்சிஸ், புனித அமதெயுஸ், புனித ஹக், புனித சொஸ்தெணுஸ், புனித மனெதுஸ், புனித போனகுந்தா என்ற இந்த ஏழு புனிதர்கள் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்ககாலம். இவர்களது ஊர் இத்தாலி நாட்டில் உள்ள பிளாரன்ஸ் . மிகச்சிறந்த துணி வியாபாரிகள். பெரும் செல்வந்தர்கள். கடவுளை மறந்து உலக வாழ்க்கை இன்பங்களிலும், மனம் போன வாழ்விலும் நாட்டம் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்த பகுதி. அழிந்துபோகும் இன்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த மக்கள் மத்தியில் இவர்கள் எழுவரின் ஈடுபாடு இறைவன் மட்டில் இருந்தது. அதிலும் குறிப்பாக அன்னை மரியாள் மீது மிக அதிகமானபக்தி கொண்டிருந்தனர். இவர்களின் அதீத பக்திக்கு பரிசாக  1233 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ம் நாள் அன்னையின் விண்ணேற்பு ப்பெருவிழா அன்று தூய மரியாள் எழுவருக்கும் காட்சி அளித்து துறவு மேற்கொள்ள அழைப்பு விடுக்கின்றார்.    மிக வசதியான செல்வ குடும்பத்தில் பிறந்த இவர்கள் தங்களது சொத்து சுகம் அத்தனையையும் ஒதுக்கி துறவு மேற்கொண்டனர். தங்களது நேரத்தையும் நாட்களையும் செபத்திலும் தவத்திலும் செலவழிக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கி சென்றனர். இவர்களின் இந்த வித்தியாசமான  வாழ்வு பலருக்கு வியப்பாக இருந்தது. எனவே இவர்களை தேடிச்சென்று பேச ஆரம்பித்தனர். தனிமையில் இறைவனுடன் உரையாடி செப வாழ்வு மேற்கொள்ள  எண்ணிய இவர்களுக்கு பொதுமக்களின் வரவு மிகுந்த இடையூறாக  இருந்தது. எனவே மொன்தே செனாரியோ என்னும் உயரிய மலைப் பகுதிக்கு சென்று தங்களுக்கென்று ஒரு ஆலயம் அமைத்து இறைவனோடு உறவாடி மகிழ்ந்தனர். சில நாட்களுக்கு பின் அன்னை மரியாள்  ஒரு வானதூதரோடு மீண்டுமாக இவர்களுக்கு காட்சி அளித்து கருப்பு நிற ஆடையை கொடுத்து நான் உங்களை என்னுடைய ஊழியர்களாக தேர்ந்து கொண்டேன். இந்த கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய துறவற ஆடை என்று கூறீ மறைந்து விட்டார். அன்றிலிருந்து இவர்கள் மரியின் ஊழியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இறைவன் பணி செய்யும் மரியின்  ஊழியர்கள் இவர்கள். 1888 அம் ஆண்டு திருந்தந்தை 13ம் லியோ இவர்களை புனிதர்களாக அறிவித்தார். 789 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இச்சபை இன்று 26 நாடுகளில்117 குழுக்களில் கிட்டத்தட்ட 700 துறவிகளை கொண்டு இயங்கி  வருகிறது. குழும வாழ்வு, மரியன்னை பக்தி மற்றும் பணி வாழ்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு மரியன்னையின் ஆன்மீகத்தில் இணைந்தவர்கள் இன்று மரியின் ஊழியர் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள் என்னும் பெருமையை அடைகின்றனர். மாறி வரும் உலகில் மரியின் ஊழியர்கள் நம்பிக்கையின் ஊழியர்களாக வலம் வந்து பல  பணிகளை ஆற்றுகின்றனர். இவர்களின் பணி சிறக்க செபிப்போம். அழைத்தலின் மேன்மை,அன்னை மரியிடம் நமக்குள்ள பக்தி, குழுவாழ்வு, செப வாழ்வின் தேவை, பணி வாழ்வே அழைத்தலின் சிறப்பு,  தபத்தின் தேவை, இறுதிப்பரிசு என்பன போன்ற எழு புனிதர்களின்  அர்ப்பண உணர்வையும் தப வாழ்வையும் நமதாக்கிக் கொள்வோம். அனைவருக்கும் ஏழு புனிதர் திருவிழா நல்வாழ்த்துக்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2023, 12:23