தேடுதல்

சிறைக்கைதிகளை விடுவிக்க போராடும் நிக்கராகுவா மக்கள் சிறைக்கைதிகளை விடுவிக்க போராடும் நிக்கராகுவா மக்கள்  (AFP or licensors)

நிக்கராகுவாவில் உயிர்ப்புப் பெருவிழா ஊர்வலங்களுக்குத் தடை

நிக்கராகுவாவில் தவக்காலத்திலும், புனித வெள்ளியிலும் இடம்பெறும் சடங்குகள், பொது இடங்களில் அல்லாமல் ஆலயங்களுக்குள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நிக்கராகுவா அரசுத்தலைவர் டேனியல் ஒர்தேகாவின் அரசு, தவக்காலத்தில் சிறப்பிக்கப்படும் புனித வெள்ளி சிலுவைப்பாதை ஊர்வலங்களுக்குத் தடைவிதித்ததுடன், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கத்தோலிக்க ஆயர்களின் குற்றங்கள் பயங்கரமானவை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

நிக்கராகுவாவில் கத்தோலிக்க தலத்திருஅவை மற்றும் அரசு எதிர்ப்பாளர்களுக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கையில், அரசுத்தலைவர் டேனியல் ஒர்தேகாவின் அரசு, நாட்டின் அனைத்து தலத்திருஅவைகளிலும் பாரம்பரிய சிலுவைப்பாதையின் பொது ஊர்வலங்களை தடை செய்துள்ளதாகவும் தவக்காலத்திலும், புனித வெள்ளியிலும் இடம்பெறும் சடங்குகள், பொது இடங்களில் அல்லாமல் ஆலயங்களுக்குள் நடக்க உள்ளதாகவும், கூறப்படுகின்றது.

நிக்கராகுவா தலத்திருஅவைக்கு எதிராக அரசுத்தலைவர் ஒர்தேகாவின் தீவிரமான ஒடுக்குமுறையின் பின்னணியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது என்றும், சமீபத்தில் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மதகல்பாவின் ஆயர் ஆல்வாரெஸ், மற்றும் 222 பேரை அமெரிக்காவிற்கு நாடுகடத்தியது பற்றி பரவலான குழப்பம் நாட்டில் நிலவி வருகின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிக்கராகுவா தலத்திருஅவையுடன் உலகளாவிய ஒற்றுமை

பிப்ரவரி 12 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிக்கராகுவாவில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டவர்களுக்காகவும், நிக்கராகுவா நாட்டில் துன்பப்படுபவர்களுக்காகவும், ஆயர் ஆல்வாரேஸ் அவர்களுக்காகவும், செபிப்பதாக கூறியதைத் தொடர்ந்து பலரும் தங்களது செபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நிக்கராகுவா செனித் என்னும் மனித உரிமைகளுக்கான மையம் ஆயர் ஆல்வாரேஸ் அநியாயமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்ட ஆயர் பற்றி எந்த செய்தியும் இல்லை, குடும்பத்தார் வருகை அனுமதிக்கப்படவில்லை என்று கண்டனம் செய்து, ஆயரின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளது.

நிக்கராகுவாவிற்கு அமெரிக்க ஆயர்களின் ஆதரவு

திருத்தந்தையின் வேண்டுகோளைத் தொடர்ந்து, அமெரிக்க ஆயர்களும் நிக்கராகுவா தலத்திருஅவையுடன் தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (USCCB) தலைவர் பேராயர் திமோதி பி. ப்ரோக்லியோ அவர்கள், நிக்கராகுவாவில் நாடுகடத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க சமூகத்திற்கு தன் நன்றியினையும்  தெரிவித்துள்ளார்.

"இந்த இருண்ட நேரத்தில், தைரியமான நம்பிக்கை, தொண்டு, ஒற்றுமை ஆகியவை உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களிடையே நிக்கராகுவா மக்களின் நம்பிக்கையின் நீடித்த உயிர்ச்சக்திக்கு சாட்சியமளிக்கின்றன" என்றும், ஆயர் ஆல்வாரேஸின் விடுதலை மற்றும் நிக்கராகுவாவில் மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 2018 மற்றும் அக்டோபர் 2022க்கு இடையில், நிக்கராகுவா ஆட்சியானது  நாட்டின்  கத்தோலிக்க தலத்திருஅவைக்கு எதிராக 396 தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் ஆலயங்களின் மீது ஏற்பட்ட தாக்குதல்கள், ஆலய ஓவியங்கள், உடல்ரீதியான தாக்குதல்கள், நாடுகடத்தப்பட்டவர்கள், சிறைத்தண்டனை பெற்றவர்கள் என அனைவரும் இதில் அடங்குவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2023, 14:31