தேடுதல்

Tigray மோதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் Tigray மோதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

எத்தியோப்பியாவின் மோதல் பகுதிகளில் சலேசிய பணிகள்

1975ஆம் ஆண்டு முதல் எத்தியோப்பியாவில் பணியாற்றிவரும் சலேசிய சபையினர், ஏழைமக்களின் கல்வி, நல ஆதரவு, மேய்ப்புப்பணி போன்றவைகளில் சேவையாற்றி வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இரண்டு ஆண்டுகளாக மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் எத்தியோப்பியாவின் Tigray பகுதிக்குத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கிவருவதாக அறிவித்தார் அந்நாட்டின் சலேசிய சபை உயர் அதிகாரி, அருள்பணி Abba Hailemariam Medhin.

மக்கள் இன்னும் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய உதவிகளுக்கு  மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் கல்வி மையங்களை மீண்டும் திறப்பதுடன் அவர்களின் நல ஆதரவு நடவடிக்கைகளையும் தொடர்வதாக தெரிவித்தார் எத்தியோப்பிய மாநில அதிபர் அருள்பணி Medhin.

அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, பல்வேறு சேவைகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளபோதிலும் ஏறக்குறைய 70 இலட்சம் Tigray பகுதி மக்களுக்கு இன்னும் உதவிகள் தேவைப்படுவதாக உரைக்கும் சலேசிய சபை, Tigray பகுதியின் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இளையோரிடையே பல்வேறு நிலைகளில் 25 பேர் பணியாற்றிவருவதாகவும் அறிவித்துள்ளது.

உலக உணவு திட்ட நிறுவனம் வழியாக ஒரு கப்பல் நிறைய உதவிப்பொருட்கள் Mekele நகர் சலேசிய இல்லத்திற்கு வந்து அது தற்போது ஏழை மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் எத்தியோப்பிய சலேசிய சபை அறிவித்துள்ளது.

1975ஆம் ஆண்டு முதல் எத்தியோப்பியாவில் பணியாற்றிவரும் சலேசிய சபையினர், தற்போது 14 இல்லங்களை அங்கு கொண்டு, ஏழைமக்களின் கல்வி, நல ஆதரவு, மேய்ப்புப்பணி போன்ற துறைகளில் சிறப்புப் பணியாற்றி வருகின்றனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2023, 14:36