தேடுதல்

கிறிஸ்மஸ் நாளின் போது இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் ஆலயம் கிறிஸ்மஸ் நாளின் போது இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் ஆலயம்   (AFP or licensors)

டிசம்பர் 25அன்று கிறிஸ்மஸ் கொண்டாட கிரேக்க வழிபாட்டுமுறை முடிவு

ஜூலியன் நாள்காட்டியைப் பயன்படுத்தி கிறிஸ்மஸ் பெருவிழாவை சனவரி 6 ஆம் நாளும் திருக்காட்சிப் பெருவிழாவை சனவரி 19 ஆம் நாளும் கொண்டாடி வந்த உக்ரேனிய கிரேக்க வழிபாட்டு முறையானது தற்போது கிரகோரியன் நாள்காட்டியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உக்ரேனிய கிரேக்கக் கத்தோலிக்க வழிபாட்டு முறையானது ஜூலியன் நாள்காட்டியிலிருந்து விலகி உரோமன் கத்தோலிக்கத் திருஅவையைப் போலவே, கிரகோரியன் நாள்காட்டியின் படி, டிசம்பர் 25ஆம் நாள் கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பேராயர் Sviatoslav Shevchuk.

அண்மையில் நடைபெற்ற UGCC என்னும் உக்ரேனிய கிரேக்க வழிபாட்டுமுறை ஆயர் பேரவையினரால் முடிவு செய்யப்பட்டுள்ள இந்த மாற்றமானது இவ்வாண்டு (2023) முதல் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவ்வழிபாட்டுமுறை பேராயர் Sviatoslav Shevchuk.

ஜூலியன் நாள்காட்டியைப் பயன்படுத்தி கிறிஸ்மஸ் பெருவிழாவை சனவரி 6 ஆம் தேதியும் திருக்காட்சிப் பெருவிழாவை சனவரி மாதம் 19 ஆம் தேதியும் கொண்டாடி வந்த இவ்வழிபாட்டு முறையானது, தற்போது கிரகோரியன் நாள்காட்டியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், இருப்பினும் இவ்வாண்டு உயிர்ப்புப்பெருவிழா பழைய நாள்காட்டியின்படியேக் கொண்டாடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பேராயர் Sviatoslav Shevchuk.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் தொடங்கிய உக்ரைன்-இரஷ்யா போரினால் 90 விழுக்காடு உக்ரேனிய மக்கள் ஜூலியன் நாள்காட்டியில் இருந்து மாற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவை மற்றும் பிற கிழக்குப்பகுதி வழிபாட்டுமுறை தலத்திருஅவைகள் இரஷ்ய அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிப்ரவரி 1-2 ஆகிய நாள்களில் Lviv-Bryukhovychi என்னும் இடத்தில் நடந்த UGCC கூட்டத்தில் தற்போதைய ஆளும் குழு, செப்டம்பர் 1 முதல் இம்மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று முடிவு செய்தது. ஆனால், அந்தந்த ஆயர்களின் அனுமதியுடன் படிப்படியாக மாற அனுமதித்தது.

கி.பி. 325 இல்கொண்டு வரப்பட்ட நிசேயா பொதுச்சங்கத்தின் 1700வது ஆண்டு விழாவின் போது, அதாவது, 2025ஆம் ஆண்டுக்குள் உயிர்ப்புப்பெருவிழா கொண்டாடப்படுவதற்கான நாளையும் உறுதிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2023, 12:21