பெண்கள், ஊனமுற்ற சிறாருக்கு உதவும் தமிழ்நாட்டின் தலத்திருஅவை
மெரினா ராஜ் – வத்திக்கான்
மாண்பும், பொருளாதாரத்தோடு கூடிய தன்னம்பிக்கையும் பெண்களுக்கு மிகவும் முதன்மையானவை என்றும், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சிறார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மிகச்சிறப்பான பணியினைப் பெண்கள் ஆற்றுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் தேவசகாயராஜ்.
தமிழ்நாட்டின் கோணாங்குப்பத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அன்னை திருத்தலத்தில், கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களின் பணி, பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சிறாருக்கு சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்கும் அருள்சகோதரிகளின் பணி ஆகியவைபற்றி விளக்கியபோது இவ்வாறு கூறியுள்ளார் அப்பணித்தளத்தின் அருள்பணியாளர் தேவசகாயராஜ்.
இத்தாலிய மறைப்பணியாளரான கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் கோணாங்குப்பத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அன்னை திருத்தலம் தன் மேய்ப்புப்பணி மையத்தின் நோக்கமாக பெண்களின் முன்னேற்றம், ஊனமுற்ற சிறாரைப் பராமரித்தல் போன்றவற்றைக் கொண்டு செயல்படுகின்றது.
சமூகத்தின் விளிம்பில் இருக்கும் கைம்பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட அன்னையர்களைக் கொண்ட குழுவை திருத்தலத்தின் வெளிப்புறப்பணிகளான கத்தோலிக்க பொருட்களை விற்பனை செய்தல், சுத்தம் செய்தல், சமையல், சுகாதரப்பணி போன்றவற்றில் ஈடுபடுத்துவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சாரந்தவர்கள் என்றும், தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் தேவசகாயராஜ்.
மாண்பும், பொருளாதாரத்தோடு கூடிய தன்னம்பிக்கையும் பெண்களுக்கு மிகவும் முதன்மையானவை என்றும், திருத்தலத்தில் பணிபுரியும் பெண்கள் அவர்கள் பெறும் சிறிய ஊதியத்தினால் தங்கள் குடும்பத்தை ஆதரிக்கின்றார்கள் என்றும் கூறியுள்ள அருள்பணியாளர் தேவசகாயராஜ் அவர்கள், திருத்தலத்திற்கு வரும் நல்லெண்ணம் உள்ளவர்களும் அவ்வப்போது இப்பெண்களுக்கு உதவி செய்கிறார்கள் என்றும், அவர்களில் பள்ளிப்படிப்பை முடித்த பெண் ஒருவர் கல்லூரிப் படிப்பைத் தொடர சென்னையைச் சார்ந்த இயேசுசபை அருள்பணியாளர்கள் உதவுதாகவும் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளர்களுக்கான பணி.
மாற்றுத்திறனாளி ஒருவர் திருத்தலத்தின் பகல்நேர பாதுகாப்பாளராக பணியாற்றுகிறார் என்பதை எடுத்துரைத்துள்ள அருள்பணியாளர் தேவசகாயராஜ் அவர்கள், கோணங்குப்பத்தில் அமைந்துள்ள மார்னிங் ஸ்டார் பெரியநாயகி பள்ளி, 7 முதல் 17 வயதுக்குட்பட்ட 98 பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக இயங்குவதாகவும் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் உள்ள தூய திருஇருதயஅன்னை சபையைச் சார்ந்த அருள்சகோதரிகளால் நடத்தப்படும் இப்பள்ளி, பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சிறார் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மிகச்சிறப்பான பணியினை ஆற்றிவருவதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணியாளர் தேவசகாயராஜ்
முற்றிலும் இலவசமாக நன்கொடையால் மட்டுமே இயங்கும் இப்பள்ளியில் சிறாருக்கு இசை, நடனம் மற்றும் பிற செயல்பாடுகள் வழியாக வலுவான சுயமரியாதை உணர்வை வளர்க்க உதவுகிறார்கள் என்றும், இவ்வகையான பிரச்சனை உள்ள சிறார் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் வாய்ப்புகள் இல்லாததால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணி தேவசகாயராஜ்
பள்ளி ஊழியர்கள் அனைவரும் ஏறக்குறைய பெண்களே என்றும், இத்தகைய சிறாரை நிர்வகிக்கும் சவாலான பணியினை அருள்சகோதரிகள் திறமையாக செய்து வருகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் அருள்பணியாளர் தேவசகாயராஜ் (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்