தேடுதல்

ஆலயத்தில் இறைவேண்டல் செய்யும் நம்பிக்கையாளர் ஆலயத்தில் இறைவேண்டல் செய்யும் நம்பிக்கையாளர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-9 நல்லார் வழியா? பொல்லார் வழியா?

நான் பொல்லார் வழியில் பயணிக்கும் கீழ்த்தரமான மனிதரா அல்லது நல்லார் வழியில் பயணிக்கும் நேரிய மனிதரா என்பது குறித்து சிந்திப்போம்.
திருப்பாடல் 37-9

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார விவிலியத் தேடலில், ‘தீமை விலக்கி நன்மை செய்வோம்!' என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 27 முதல் 29 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 30 முதல் 33 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது, அவ்வார்த்தைகளை இறையொளியில் வாசிக்கக் கேட்போம். நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும். கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்; அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர். ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்; நீதி விசாரணையின்போது அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார் (வசனம் 30-33).

முதல் வகை மனிதர்கள்

நாம் சிந்தனைக்கு எடுத்துக்கொண்ட இந்த நான்கு இறைவசனங்களில் தாவீது அரசர் தொடர்ந்து நல்லார்-பொல்லார் இயல்புகளை எடுத்துரைப்பதைக் காண்கின்றோம். 31 மற்றும் 32 ஆகிய இரண்டு இறைவசனங்களிலும், ஞானம் செறிந்த பேச்சு, நீதிநெறிகள், திருச்சட்டத்தைப் பின்பற்றுவது, சறுக்காத அவர்களின் கால்கள் என நல்லாரின் நான்கு நற்குணங்களைப் பட்டியலிடுகின்றார் தாவீது அரசர். பொதுவாக, மனிதர்களில் கீழ்த்தரமானவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும் இருவகையினர் உண்டு. கீழ்த்தரமானவர்கள் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி மிகவும் கீழத்தரமாகப் பேசிக்கொண்டிருப்பர். அவர்களுக்குக் கெடுதல்களை விளைவிக்க திட்டமிட்டு செயல்படுவர். அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் காத்திருப்பர். மனிதத்தன்மையற்ற அதாவது, ஈவு இரக்கமற்ற முறையில் செயல்படுவர். நன்றியோடு கூடிய மனப்பான்மையை அவர்களிடத்தில் நாம் காணவும் முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது. அரட்டுவது, உருட்டுவது, அநியாயமான அட்டூழியச் செயல்களில் இறங்குவது போன்ற குணங்கள் இவர்களிடத்தில் மிகுதியாய் இருக்கும். இன்னும் குறிப்பாக, மொட்டைக் கடுதாசி எழுதுபவர்கள், சம்மந்தப்பட்ட நபர் இல்லாதபோது அவரைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசுபவர்கள் ஆகியோர் இத்தகையோரே. அதனால்தான், பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்; அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர் என்று 33-வது இறைவசனத்தில் சற்று கடுமையாகவே சாடுகின்றார் தாவீது அரசர். மேலும், காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரைதேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள் (திபா 22:12-13) என்றும், ஆண்டவரே! தீயோரிடமிருந்து என்னை விடுவியும்; வன்செயல் செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும். அவர்கள் தம் மனத்தில் தீயனவற்றை திட்டமிடுகின்றனர்; நாள்தோறும் சச்சரவுகளைக் கிளப்பி விடுகின்றனர். அவர்கள் பாம்பெனத் தம் நாவைக் கூர்மையாக்கிக்கொள்கின்றனர்; அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே! (திபா 140: 1-3) என்றும், தன் எதிரிகளின் கொடுஞ்செயல்கள் குறித்து கடவுளிடம் முறையிடுவதையும் பார்க்கின்றோம். மேலும், “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே, அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்” என்றனர். ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும் (எரே 18:18-19) என்று, இறைவாக்கினர் எரேமியாவும் தனது எதிரிகளின் கொடிய எண்ணங்கள் குறித்து கடவுளிடம் முறையிடுவதைப் பார்க்கின்றோம். ஆக, நாம் காணும் இன்றைய உலகிலும் பொல்லாரின் செயல்களால் போர்களும், வன்முறைகளும், ஆயுதமோதல்களும், தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயல்களும் பரவி வருகின்றன. உரையாடல் வழியிலும், அமைதியின் வழியிலும் தீர்க்கப்படவேண்டிய எத்தனையோ பிரச்சனைகளை ஊதி ஊதிப் பெரிதாக்கி பொல்லார் பலர் நாடுகளை நெருக்கடியின் பிடியில் வைத்திருப்பதைப் பார்க்கின்றோம். இரஷ்யா இதற்கொரு மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

இரண்டாம் வகை மனிதர்கள்

இரண்டாம் வகை மனிதர்கள் உயர்ந்த உள்ளமும் தியாக மனமும் கொண்டவர்கள். இவர்களிடத்தில் ஞானமும், உயர்த்த சிந்தனையும், எதனையும் சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணமும் இருக்கும். இவர்கள் வன்முறையின் வழிகளை விடுத்து அமைதியின் வழிகளைக் கடைபிடிப்பார்கள். குறிப்பாக, பிறர் நலனையும் சமுதாய நலனையும் தங்களின் உயிர்மூச்சாகவும் இலட்சியமாகவும் கொண்டிருப்பார்கள். சிறப்பாக அனைவருடனும் ஒன்றிணைந்து செயல்பட விரும்புவார்கள். உயர்ந்த உன்னதமான தலைமைத்துவம் இவர்களிடத்தில் காணப்படும். இந்த வகையினரைத்தான் நீதிமான்களாகவும், நேர்மையாளர்களாகவும் வர்ணிக்கின்றார் தாவீது அரசர். இதன் காரணமாகவே, "ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன" (திபா 34:15) என்று எடுத்துரைக்கின்றார் தாவீது.  மேலும், நேர்மையையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார் (நீமொ 21:21) என்று நீதிமொழிகள் நூலும் கூறுகின்றது.

ஆசிரியர் ஒருவரிடத்தில் பல மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அவர்கள் அனைவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர். ஆனால், அவர்களில் ஒரு மாணவன் மட்டும் மற்றவர்களைவிட தன்னை மிகப்பெரும் புத்திசாலியாகக் காட்டிக்கொள்ள விரும்பினான். அதனால், அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்கத் தொடங்கினான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்விகள் கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விடயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அம்மாணவனை அழித்து விடும் என்பதை உணர்ந்த ஆசிரியர், அவனது தவற்றை அவனுக்கு உணர்த்தி அவனை மாற்ற விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அது அவன் கண்ணை மறைக்கும் என்றும், அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும் என்றும் யோசித்த அவர், வேறொரு வழியைத் தேர்வு செய்தார். மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தத்துவ இயலைக்  கரைத்துக் குடித்தவர். இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை சிறந்த அறிஞருக்கான அரசு விருதினைப் பெற்றவர். வெளிநாடுகளில் கூட இவருக்கு மாணவர்கள் உண்டு. ஆகவே, நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சரிடம் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப்படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும்" என்றார். கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு மிகவும் உற்சாகமாய் அமைந்தன. எனவே, ஆர்வம் மேலிட்டவனாய், ''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு தச்சர் வீட்டுக்கு விரைந்தான்.

தச்சர் வீட்டிற்குச் சென்ற அம்மாணவன் அவரிடம் செய்தியைச் சொல்லி இன்று மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்று கூறினான். அப்போது அவர், இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே, அவர் தத்துவ இயலைக் கரைத்துக் குடித்தவர், இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர், பத்து முறை சிறந்த அறிஞருக்கான அரசு விருதினைப் பெற்றவர், வெளிநாடுகளிலும் கூட இவருக்கு மாணவர்கள் உண்டு என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தச்சர் கோபம் மேலிட, "ஏன்டா! செத்த பிணத்தோட விவரம் கேட்டா, நீ அத சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார். இந்தக் கேள்வி அவனை ஆத்திரமூட்டியது. உடனே அவன் தச்சரைப் பார்த்து, "அவரைப் பற்றி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள்" என்றான். அதற்கு அந்தத் தச்சர், "அடேய் அறிவு கெட்டவனே! அவரு என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அவரு ஒரு பிணந்தான். எனக்கு வேண்டியது அவரோட உயரமும், அகலமுந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக்கிட்டு வா" என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு "மனித அறிவு இவ்வளவுதானா? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன்?" என்று யோசிக்கத் தொடங்கியவன், கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான். "என்னப்பா! சவப்பெட்டி அடிச்சாச்சா" என்று ஆசிரியர் சிரித்துக் கொண்டே அவனிடம் கேட்டார், "அடிச்சாச்சு ஐயா... என்னோட தலைக் கனத்துக்கு என்றான் அம்மாணவன். அப்போது ஆசிரியர், "என் செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற உடல். இதை உணர்ந்து மனத்தாழ்மையுடன் நடப்பதே உண்மையான ஞானம்” என்றார். “இதனைத்தான், 'இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்' (நீமொ 11:2) என்று நீதிமொழிகள் நூலும் கூறுகிறது” என்றார்.

நான் பொல்லார் வழியில் பயணிக்கும் கீழ்த்தரமான மனிதரா அல்லது நல்லார் வழியில் பயணிக்கும் நேரிய மனிதரா என்பது குறித்துச் சிந்திப்போம். நல்லார் வழியில் நாளும் பயணிக்க இறையருள் வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2023, 12:26