தேடுதல்

இயேசுவின் உருமாற்றம் இயேசுவின் உருமாற்றம் 

தவக் காலம் 2-ஆம் ஞாயிறு : உள்ளன்புடன் உருமாற்றம் பெறுவோம்!

பிறருக்கான தியாகப் பலியில் நம்மையே இழப்பதற்கு நாம் பெற்றுள்ள உருமாற்ற அனுபவங்கள் நமக்கு உதவட்டும்.
ஞாயிறு சிந்தனை 050323

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. தொநூ 12: 1-4a    II.  2 திமோ 1: 8b-10      III.  மத்  17: 1-9)                  

ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய்ப் பிறந்து, இலட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியவர் டாக்டர் உமா பிரேமன். இரண்டு இலட்சம் கூழ்மப்பிரிப்புகள் (dialysis), இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்குப் பள்ளிக்கூடங்கள், நாட்டிலேயே குறைந்த விலையில் வீடுகள் எனப் பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன். இவரது வாழ்க்கை போராட்டக்கள் நிறைந்த ஒன்று. இவர் தனது வாழ்வில் அனுபவித்த துன்ப துயரங்கள் சொல்லிமாளாது. உமா பிரேமனின் அத்தனை துயரங்களுக்கும் முழுமுதற் காரணம் அவரின் தாயார்தான் என்று அவர் கடந்து வந்த பாதை பதிவு செய்கிறது. இவரதுத் துயரங்களின் அனுபவமே இவரை ஒரு சிறந்த சமூகச் சேவகியாகச் செதுக்கி இருக்கிறது.

தன் தாயின் கட்டாயத்தால், ஏற்கெனவே இரண்டு திருமணங்களான வயது முதிர்ந்தவருக்கு, 19 வயதில் மூன்றாவது மனைவியானார். இன்பமென ஒன்றில்லாத துயர் படிந்த திருமண வாழ்க்கை அது. கணவர் நோயில் படுத்திருக்கும்போது, மருத்துவமனையில் அவருக்குப் பணிவிடைகள் செய்தார். கணவர் இறந்த பிறகு, அவர் உமாவுக்கு கொடுத்த சொத்துகளை, மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்துவிட்டார். பள்ளிக் காலத்திலேயே, தன் வாழ்வை சமூகச் சேவைக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர் உமா. அந்த இலட்சியத்தை வாழ்வாக்கும் பொருட்டு அன்னை  தெரசாவுக்கு கடிதம் எழுதினார். அவரின் அழைப்பின்பேரில் கொல்கத்தாவுக்குச் சென்ற உமா, தன் வாழ்நாளெல்லாம் அன்னை தெரேசாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்கு அன்னை தெரசா, “உன்னைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கானோர்,  உன் கருணைப் பார்வைக்காகக் காத்திருக்கின்றனர். ஆகையால், நீ இருக்கும் இடத்திலேயே உன்னால் பிறரன்பு பணிகள் ஆற்ற முடியும் அதற்கு, நீ முதலில் முறையான கல்வி பயில வேண்டும்” என்று கூறி உமாவை திருப்பி அனுப்பிவிட்டார். பிளஸ் 2 மட்டுமே முடித்திருந்த உமா,  தனது 25-வது வயதில் மருத்துவ சேவை செய்ய, புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினார். ஓராண்டுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பயணித்து, மருத்துவத் தொழில்நுட்பங்கள், வசதிகள், நோய்களுக்குரிய சிகிச்சை முறைகளைக் குறிப்பெடுத்துக் கொண்ட பின்னர், ‘SANTHI MEDICAL INFORMATION CENTER’ என்ற பெயரில் ஒரு மையத்தைத் தொடங்கி, மருத்துவச் சேவையாற்றி வருகிறார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, தன்னுடைய ஒரு சிறுநீரகத்தைத் தானமாகக்  கொடுத்துள்ளார். இதுவரை, உமா பிரேமனின் மருத்துவச் சேவை வழியாக ஏறத்தாழ 680 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும், 20,500-க்கும் மேற்பட்ட இதய அறுவைசிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. தன் வாழ்வில் முன் பாதி வேதனைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருந்தாலும், பின் பாதியை சமூகத்துக்காக அர்ப்பணித்து, தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டவர்தான் உமா பிரேமன். இன்று புதுமைப் பெண்ணாக வரலாறு படைத்து வருகிறார்.

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் உருமாற்றம் நிகழவேண்டும். ஒவ்வொரு மனிதரும் கொடிய துன்ப துயரங்களை அனுபவிக்கும் வேளையில், துவண்டுபோய்விடாமல் இவற்றிலிருந்து மீண்டெழுந்து, ஏதாவது ஒன்றை இந்தச் சமூகத்திற்குச் செய்ய வேண்டும் என்று வேட்கை கொள்ளும் நேரம்தான் உருமாற்ற நிகழ்வு என்று நாம் கூற முடியும். மேற்கண்ட உமா பிரேமனின் வாழ்வு இதனைத்தான் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமிற்கு நிகழ்வது உருமாற்ற அனுவம்தான். இப்போது அப்பகுதியை வாசிப்போம். ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். (காண்க தொநூ 2: 1-4a)

கடவுள் தனக்கு முன்வைத்த சவாலை ஆபிரகாம் ஏற்றுக்கொண்டார். அதாவது, தனது ஊரிலிருந்து புறப்பட்டு வாக்களிப்பட்ட கானான் நாட்டை அடையும் வழியில் அவர் பல்வேறு சவால்களையும் இடர்பாடுகளையும் சந்தித்தார். இன்னும் சொல்லப்போனால் ஆபிரகாமுக்கு அதுவே பாடுகளின் பாதையாகவும் அமைந்தது. முதுபெரும் தந்தை ஆபிரகாமின் வாழ்வை இயேசுவின் பணிவாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம், ஆபிரகாம் இறைத்தந்தையின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவர்மீது முழுநம்பிக்கை கொண்டு, அவரை மட்டுமே தனது வாழ்வின் வழித்துணையாகக் கொண்டு தனது பயணத்தைத் தொடங்கினார். இறுதியில் வெற்றியும் கண்டார். அவ்வாறே, இயேசுவும் இறைத்தந்தையை மட்டுமே நம்பி, அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து கல்வாரி பயணத்தில் வெற்றி கண்டார். இயேசுவின் கல்வாரி நோக்கிய பயணத்தில் இன்று நிகழும் உருமாற்றம் என்பது மிகவும் முக்கியமானது. இயேசுவின் திருமுழுக்கின்போது தூய ஆவியாருடன் வெளிப்பட்டு, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (காண்க மத் 3:17) என்று கூறிய இறைத்தந்தை, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” (காண்க மத் 17:5) என்று இன்று மீண்டும் குரலெழுப்புகின்றார். திருமுழுக்கு யோவானின் கரங்களால் திருமுழுக்குப் பெற்று, இயேசு தனது திருப்பணியைத் தொடங்கியபோது, இவ்வுலகிற்குத் தனது திருமகனை அறிமுகம் செய்துவைத்த இறைத்தந்தை, இந்நாளில் மீண்டும் குரலெழுப்பி இயேசு பெறப்போகும் புனித மரணத்திற்குச் சான்று பகர்கின்றார். இயேசுவின் அனைத்துவிதமான துயரங்களிலும் தான் உடனிருக்கப் போவதை உறுதிப்படுத்துகின்றார் இறைத்தந்தை. ஆக, இவ்வுலகை மீட்கும் திட்டத்தில் மூவொரு இறைவனின் ஒன்றுபட்ட மனநிலையைக் காண்கின்றோம்.

இரண்டாவதாக, இந்த உருமாற்ற நிகழ்வில், மோசேயும் எலியாவும் தோன்றி இயேசுவுடன் உரையாடிக்கொண்டிருந்ததாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்திருக்கின்றார். இந்நிகழ்வில், மோசே திருச்சட்டங்களின் அடையாளமாகவும், எலியா இறைவாக்கினர்களின் அடையாளமாகவும் போற்றப்பெறுகின்றனர். இயேசு ஆண்டவர் திருச்சட்டம் மற்றும் இறைவாக்கினர்களின் ஒட்டுமொத்த அடையாளமாகப் போற்றப் பெறுகின்றார். ஆக, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு, மோசே, இறைவாக்கினர்கள் எனத் தொடங்கிய மீட்பின் பயணம், இயேசுவில் நிறைவு பெறுகின்றது. மேலும் துணையாளராம் தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் இயேசுவின் நீட்சியாக திருத்தூதர்களின் வழியாகத் தொடர்ந்த இந்தப் மீட்பின் பயணம் இன்று நம்மிடம் வந்தடைந்திருக்கின்றது. இது மேலும் தொடரப்பட வேண்டும். இதன் காரணமாகவே, “தந்தையாம் கடவுள், நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்” (காண்க 2 திமோ 1: 8b-10) என்கின்றார் புனித பவுலடியார்.

சிலரின் வாழ்க்கையில் ஏற்படும் வலிகள்தாம், துயருறும் தன்னைப்போன்ற மக்களுக்கு உதவும் வழிகளாக அமைகிறது என்பது திண்ணம். திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன் அவர்கள், உமா பிரேமன் அவர்களின் நூல்வெளியிட்டு விழாவில் உரையாற்றியபோது ஒரு அனுபவத்தை அங்கிருந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். “நான் அகமதாபாத் சென்றபோது, ஒரு மதக் கலவரத்தில் ஐந்து நபர்களால் வன்கொடுமைக்கு உள்ளான சுல்தானா என்ற பெண்ணைச் சந்தித்தேன். வன்கொடுமை செய்த ஐவரும் சுல்தானா வசிக்கும் அடுத்த தெருவிலும், பக்கத்து ஊரிலும் வசிப்பவர்களே. இவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தந்துவிட்டார் சுல்தானா. தண்டனைக் காலம் முடிந்து, அவர்கள்  வெளியே வந்து விட்டனர். அப்போது, ‘சுல்தானா, நீங்கள் தினம் தினம் இவர்களின் முகங்களைப் பார்க்க நேரிடும். எப்படி இவர்களைக் கடந்து போகிறீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர், மதக் கலவரத்தால் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கான அறக்கட்டளை ஒன்றை நான் நடத்துகிறேன். மேலும், வன்புணர்வுகளால் பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்களின் 144 வழக்குகளையும் நான் எடுத்து நடத்தி வருகிறேன். ‘இதுவே, அந்த ஐவருக்கும் நான் கொடுக்கும் பதிலடி. வன்கொடுமைக்கு ஆளாகும் எத்தனையோ பெண்கள் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்., எங்கேயோ ஒடி ஒளிந்துகொள்கின்றனர். ஆனால்,  அதிலிருந்து ஒரு பெண் எழுந்து நீதியைக்  கேட்கும் போது,  அவர்களால் சமூக மாற்றத்தை உண்டாக்க முடிகிறது. தனக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து பெண்கள் மீண்டு எழுந்துவர வேண்டும். ‘அன்பு உன் வீட்டில் இருந்து தொடங்குகிறது’ என்று அன்னை தெரசா கூறியது போல, நம் வீட்டில் உள்ளவர்களிடம் அன்பு செலுத்துவது மட்டுமின்றி, பக்கத்து வீட்டுக்காரரிடம் அன்பு செலுத்தி, இந்த மானுடம் முழுவதும் அன்பு பரவ வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று சுல்தானா நெகிழ்ச்சியுடன் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.

இறைவாக்கினர்கள் மற்றும் திருத்தூதர்கள் வாழ்விலும் உருமாற்றம் நிகழ்ந்ததைப் பார்க்கின்றோம். முதலாவதாக, இறைவாக்கினர் எரேமியா, அவரது எதிரிகளால் சந்திக்கும் துயரங்களால் துவண்டுபோகாமல், இறைத்தந்தையின்மீது நம்பிக்கை கொள்வதைக் காண்கின்றோம். இதுவே அவருக்கு உருமாற்ற நிகழ்வாக அமைகிறது. ‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; ‘பழிசுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த்துக்  கொள்ளலாம்’ என்கிறார்கள். ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே, என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச்  சிந்தனைகளையும் அறிபவரும் நீரே (காண்க எரே 20:10-12). 

இரண்டாவதாக, திருத்தூதரான புனித பவுல், தானும், தன்னுடன் இணைந்து பணியாற்றும் திருத்தூதர்களும் பெறும் துன்ப துயரங்களைப் பதிவு செய்வதுடன், உயிர்த்த ஆண்டவர் மீது தங்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையால் அவைகளைத் தாங்கிக்கொண்டு தங்களின் பணிகளைத் தொடர்வதாக எடுத்துரைக்கின்றார். "நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம் (காண்க 2 கொரி 4:8-10. இத்துயரங்கள் ஏற்படுத்திய வலிகளும், அதனால் விளைந்த இறைநம்பிக்கையுமே திருத்தூதர்களின் உருமாற்ற அனுபவமாக அமைந்தது

உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால், அந்த விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும் என்கின்றான் ஒரு கவிஞன். தியாகங்களை நிகழ்த்த வேண்டுமெனில் மனதில் தில் இருக்கவேண்டும், இலட்சிய சாவை ஏற்கவேண்டுமெனில் நெஞ்சில் துணிவு இருக்க வேண்டும். நமதாண்டவர் இயேசுவுக்கு இலட்சிய சாவை ஏற்கும் ஒரு களமாக இந்த உருமாற்ற நிகழ்வு அமைகிறது. இந்த நிகழ்விற்குப் பிறகு இயேசு சிலுவையில் தன்னைத் தியாகப் பலியாக ஒப்புக்கொடுக்கத் தயார்படுத்திக்கொள்கின்றார். ஆகவே, நமது வாழ்வில் நமக்கு நிகழ்ந்த உருமாற்ற அனுவங்களை இத்தருணத்தில் நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். பிறருக்கான தியாகப் பலியில் நம்மையே இழப்பதற்கு அவ்வுருமாற்ற அனுபவங்கள் நமக்கு உதவட்டும். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2023, 13:20