தேடுதல்

குருத்து ஞாயிறு பவனி தமிழ்நாடு குருத்து ஞாயிறு பவனி தமிழ்நாடு  (AFP or licensors)

நேர்காணல் – வெற்றிப்பவனியாம் குருத்து ஞாயிறு

குருத்து ஞாயிறன்று நாம் கடந்து செல்லும் பாதைகளும் தெருக்களும் நம்மால் புனிதம் அடைகின்றன. நமது பயணத்தால் நாம் புனிதமடைகின்றோம். நமது பயணம் வெற்றியை நோக்கிய பயணம். புனித வாரம் முழுவதும் நம்மை புனிதப்படுத்துவதற்கான வெற்றியின் பயணம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் புனித வாரத்தில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும்  நாம் அவரன்பின் சுவையை உணர்ந்து வாழ அன்புடன் அழைக்கப்படுகின்றோம். குருத்து ஞாயிறன்று நாம் இயேசுவின் எருசலேம் பவனி தொடங்கி, இரவல் கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டது வரை அனைத்தையும் நற்செய்தி வாசகத்தில் காணலாம். நம்முடைய பயணங்களும் பாதைகளும் ஓர் இலக்கை நிர்ணயித்தே நடந்தேறுகின்றன. பயணத்தைத் தொடங்கும் போதே எங்கு செல்கிறோம்? எப்படி செல்கிறோம் எதற்காக செல்கிறோம் என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலினை தயார் செய்தே நாம் பயணத்தைத் தொடங்குகிறோம். இன்றைய நாளில் பலவிதமான பயணங்களை மேற்கொள்பவர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கொண்டிருக்கின்றோம். ஆகாய மார்க்கமாகவும், கடல்வழி மற்றும், தரைவழியாகவும் பயணம் செய்து தேர்தல் வாக்குகளை சேகரிக்கும் மனிதர்கள் பலரை நாம் பார்க்கின்றோம். இவர்களது பயணம் " வெற்றி என்ற ஓர் இலக்கைக் கொண்டது. யாரும் தோல்வி அடைய வேண்டும் என்னும் எண்ணத்துடன் பவனி வருவது கிடையாது. அமோக வெற்றி பெற வேண்டும், எல்லாரும் பாராட்டும் வண்ணம் பதவியைப் பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் இங்கு பவனிகளும் பயணங்களும் நடைபெறுகின்றன.

இயேசுவின் பவனியோ மிகவும் வித்தியாசமானது அவர் ஆடம்பரமான வாகனத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒலிபெருக்கிகளின் சப்தத்தில் வரவில்லை மாறாக வித்தியாசமாக வருகின்றார். ஏழைகளின் சொத்தாம் கழுதை வாகனமாகின்றது. மக்கள் வெள்ளம் அவருக்கு வெளிச்சமாகின்றது. ஓசான்னா கீதமே ஒலிப்பெருக்கியாகிறது. ஒலிவ இலைகளின் அசைவு ஓராயிரம் மகிழ்வு செய்தியை ஏற்படுத்துகின்றது. இப்படி மகிழ்ந்து பவனி சென்றவர் இறுதியில் கொடூரமாக இறந்து போகின்றார். வெற்றிப் பவனி வந்தவர் தோல்வியை தழுவி விட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு சாவை அடைகின்றார். இயேசு பெயரளவில் வெற்றி பெற விரும்பவில்லை. மாறாக நிலையான வெற்றியை விரும்புகின்றார். அதை வெளிப்படையாக பார்ப்பவர்க்கு இவர் என்ன இப்படி அநியாயமாக இறந்துவிட்டாரே என்று எண்ணத்தோன்றும். அதை முழுமையாக உணர்ந்து கொள்பவர் மட்டுமே இது இவரின் வீழ்ச்சி அல்ல அது அவரின் எழுச்சி என்று அறிந்து கொள்வர். வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான். கடமையைச் செய்தால் வெற்றி. கடமைக்குச் செய்தால் தோல்வி. இங்கு பலர் கடமைக்கு பல செயல்களை செய்து விட்டு வெற்றி கண்டு விடுகின்றனர். ஆனால் இத்தகைய வெற்றி ஒரு போதும் நிலைப்பதில்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயேசுவோ கடமையைச் செய்தார் நிலையான வெற்றியைப் பெற்றார்.

இன்றைய நாளில் வெற்றிப்பவனியாம் குருத்து ஞாயிறு என்ற தலைப்பில் நம்முடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி குழந்தை இயேசு பாபு சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள இராசசிங்கமங்கலம் பங்கின் இணைப்பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

அருள்பணி . குழந்தை இயேசு பாபு. சிவகங்கை மறைமாவட்டம்

குருத்து ஞாயிறினை சிறப்பிக்கும் நமக்கு இயேசு விடுக்கும் அழைப்பு இதுதான் நீடித்த நிலையான வெற்றியை உனதாக்கிக் கொள். இயேசு தனது துயரமான நேரங்களில் கூட செபத்தினை தகுந்த ஆயுதமாகக் கொண்டிருந்தார். தான் செபித்ததோடு மட்டுமல்லாமல் பிறரையும் விழித்திருந்து செபிக்க அழைக்கின்றார். நாமும் செபிப்போம் செபத்தின் வல்லமையால் வெற்றி பெறுவோம். மீண்டும் இருள் அதிகாரம் செலுத்தும் தருணங்களிலும் துணிவோடு இருக்க அழைக்கின்றார். தோல்வி என்பது உறுதி அல்ல வெற்றி என்பது இறுதியும் அல்ல இதை உணர்ந்தாலே நம் வாழ்வு சிறப்புறும். குருத்து ஞாயிறன்று நாம் கைகளிலேந்தி ஓசன்னா கீதம் பாடி ஆர்ப்பரித்து மகிழும் (ஒலிவ கிளைகள்) தென்னங்குறுத்தோலைகள், புதிதாக தோன்றும் போது வெற்றி பெற்றதாக நினைத்திருக்கலாம். ஆனால் இன்று மரத்திலிருந்து வெட்டப்பட்டு நம் கைகளில் மகிழ்வின் பொருளாக இடம் பிடித்திருக்கின்றது. வெளிப்புறமாக பார்க்கும் போது, மரத்திலிருந்து தளைத்து பலன் தருவதை விடுத்து இன்று நம் கைகளில் வந்து வாழ்வினை தொலைத்து விட்டதே என்று கவலைப்படலாம். ஆனால் உண்மையில் இன்று இந்த குருத்தோலைகள் நம் வீட்டின் மற்றொரு சிலுவைச்சின்னமாக மாறி நமக்கு வலிமையைத் தரும் ஒரு மீட்பாக மாறி இருக்கின்றது. என்பதே உண்மை.

குருத்து ஞாயிறன்று நாம் கடந்து செல்லும் பாதைகளும் தெருக்களும் நம்மால் புனிதம் அடைகின்றன. நமது பயணத்தால் நாம் புனிதமடைகின்றோம். நமது பயணம் வெற்றியை நோக்கிய பயணம். இந்த புனித வாரம் முழுவதும் நம்மை புனிதப்படுத்துவதற்கான வெற்றியின் பயணம். எனவே அன்பு உள்ளங்களே நம் ஆண்டவர் இயேசுவின் இந்த புனித பயணத்தில் வெற்றியின் பயணத்தில் பங்கேற்கும் நாம் அனைவரும் வெற்றியின் மக்களாக வாழ அருள் வேண்டுவோம். விழிப்பதற்கே உறக்கம், வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி, வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழ்வோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2023, 17:44