திருத்தந்தையர் வரலாறு – 12ஆம் கிளமென்ட், 14ஆம் பெனடிக்ட்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நேயர்களே! இன்றைய ஒலிபரப்பில் நாம் முதலில் நோக்க உள்ள திருத்தந்தை, 1730ஆம் ஆண்டு திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற 78 வயதான 12ஆம் கிளமென்ட். இவர் 1652ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி இத்தாலியின் பிளாரன்ஸில் பிறந்தார். திருஅவை தலைமைப்பீடத்தில் பல்வேறு பொறுப்புக்களை வகித்த இவர், உரோமுக்கு அருகேயுள்ள Frascati நகரின் கர்தினால் ஆயராகவும் செயலாற்றினார். திருஅவையில் நிதி நெருக்கடி இடம் பெற்ற ஒரு காலக்கட்டத்தில், அதுவும் திருத்தந்தை 13ஆம் பெனடிக்ட் இறந்து நான்கு மாதங்களுக்குப் பின்னரே, இந்த கர்தினால் Lorenzo Corsiniயை கர்தினால்கள் தேர்ந்தெடுத்தனர். இவரின் குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் புனித Andrew Corsini. 12ஆம் கிளமென்ட் என்ற பெயரை எடுத்துக்கொண்ட இத்திருத்தந்தை, தேர்ந்தெடுக்கப்பட்டபோதே கண்பார்வை மங்கியவராகத்தான் இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில காலத்திலேயே பாப்பிறை 12ஆம் கிளமென்ட் உடல் சுகவீனமுற்றார், சீக்கிரமே கண்பார்வையையும் இழந்தார். இருப்பினும் அதிக அக்கறையுடன் திருஅவையை வழிநடத்திச் சென்றார். ஏற்கனவே திருஅவையை சூறையாடி, நேப்பிள்ஸ் நகரில் அடைக்கலம் தேடியிருந்த கர்தினால் Niccolo Coscia என்பவரை உரோம் நகருக்கு விலங்கிட்டுக் கொணர்ந்தார்.
உரோம் நகருக்குக் கொண்டுவரப்பட்ட கர்தினாலை, முறைப்படி நீதிமன்றத்தில் நிறுத்திய பாப்பிறை, அவரின் ஆயர் பதவியை நீக்கி, அனைத்துச் சொத்துக்களையும் திருஅவைக்கு திரும்பப்பெற்று, அவரை சிறையிலடைத்தார். அதேவேளை, காலியாக இருந்த திருப்பீட கருவூலத்தை, தன் சொந்த சொத்துக்களை விற்று நிரப்பினார் திருத்தந்தை 12ம் கிளமென்ட். ஏற்கனவே தன் பதவியேற்பின்போது, தன் சொந்த சொத்துக்களின் ஒரு பகுதியை ஏழைகளுக்கென வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலத்தில் மறைபோதகர்களுக்கு பெரும் ஊக்கம் வழங்கப்பட்டதுடன், தன் சொந்த பணத்தையும் அனுப்பி உதவினார். ஆனால் இஸ்பெயின் திருஅவையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளில் தலையிட்டு இவரால் தீர்வுகான முடியவில்லை. இஸ்பெயின் மன்னர் 5ஆம் பிலிப்புவின் மனைவி எலிசபெத் தலத்திருஅவை விவகாரங்களில் தலையிட்டு தன் விருப்பம் போல் ஆயர்களை நியமித்தபோது, திருத்தந்தையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கண்பார்வையற்ற நிலையிலும் உடல் பெரிதும் சுகவீனமுற்ற நிலையிலும் திருஅவை விவகாரங்களைப் படுக்கையிலிருந்தே கவனித்து திறம்பட நடத்திய இத்திருத்தந்தைதான், சிலுவைப்பாதை ஜெபிப்பதை திருஅவையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். இது ஏற்கனவே 14ஆம் நூற்றாண்டிலேயே பிரான்சிஸ்கன் சபையினரால் பின்பற்றப்பட்டு வந்தாலும், திருஅவை அங்கீகாரம் பெற்றது இவர் காலத்தில்தான். உரோம் நகரின் புனித இலாத்ரன் பெருங்கோவிலின் முன்பகுதியைக் கட்டியவர் இவரே. இவர்தான் உரோம் நகரின் புகழ்வாய்ந்த த்ரேவி (Trevi) நீரூற்றை கட்டத் துவங்கியவர். இந்த நல்ல திருத்தந்தை 1740ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி தன் 88ஆம் வயதில் காலமானார். இவரின் உடல் 1742ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உரோம் நகரின் குரினாலேயிலிருந்து புனித இலாத்ரன் பெருங்கோவிலுக்கு மாற்றப்பட்டது.
திருத்தந்தை 12ம் கிளமென்ட் இறந்தபின் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடிய கர்தினால்களிடையே ஓர் உடன்பாட்டைக் காணமுடியவில்லை. எவரைத் தேர்ந்தெடுப்பது என ஒருவருக்கொருவர் முரண்பட்டு 6 மாதங்களாக 54 கர்தினால்கள் குழம்பிக் கொண்டிருந்தபோது அவர்களிடையே எழுந்து நின்ற இத்தாலியின் Bologna பேராயர் கர்தினால் Prospero Lorenzo Lambertini அவர்கள், ‘உங்களுக்கு யார் வேண்டும்? ஒரு புனிதரா, நிர்வாகியா அல்லது சாதாரண ஒரு பணியாளரா? புனிதர் என்றால் கர்தினால் Gottiயையும், நிர்வாகி என்றால் கர்தினால் Aldobrandiniயையும், எளிமையான மனிதர் என்றால் என்னையும் தேர்ந்தெடுங்கள்’ என்றார். கர்தினால்கள் தேர்வு அவையின் இறுக்கத்தைக் குறைப்பதற்காக சொன்ன வார்த்தைகள், கர்தினால்கள் மனதில் புகுந்து, அவரையே, அதாவது, கர்தினால் லம்பெர்த்தினியையே தேர்ந்தெடுக்க வைத்தது. அவரும் திருத்தந்தை 14ஆம் பெனடிக்ட் என்ற பெயரை எடுத்துக் கொண்டார். Bologna வில் பிறந்து Anconaவின் ஆயராக நியமிக்கப்பட்டு, பின் தன் சொந்த நகரிலேயே பேராயராகவும், பின்னர் கர்தினாலாகவும் நியமிக்கப்பட்ட இவர் எளிமையானவர் மட்டுமல்ல, திருஅவை அதுவரை கண்டிராத சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார்.
கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, பிரிந்த சபை கிறிஸ்தவர்களும் இவரை அன்பு கூர்ந்தனர். இதுவரை திருஅவையின் எதிரிகளாக இருந்தவர்கள் இவரின் அணுகுமுறைகளால் கவரப்பட்டு, திருத்தந்தைக்கு நெருக்கமாக வந்தனர். இஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லுடன் அமைதியை உருவாக்கினார். கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் மீது இலத்தீன் வழிபாட்டுமுறை சடங்குகள் புகுத்தப்படுவதை இவர் எதிர்த்தார். திருத்தந்தைக்குரிய நிர்வாகப்பணிப்பளு அதிகமாக இருந்த போதிலும், எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த இத்திருத்தந்தை, இறையியல் மற்றும் வரலாறு குறித்த நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். உடல்நலமின்றி இருந்ததால் இவரின் இறுதிக்காலம் மிகவும் துன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் தன் வேதனைகளை எவ்விதத்திலும் வெளிப்படுத்தாமல், அமைதியாக நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர் திருத்தந்தை 14ஆம் பெனடிக்ட். 1758ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி, தன் 83ஆம் வயதில் காலமானார் இத்திருத்தந்தை. இவரைப் பற்றி அப்போது எழுதிய ஒரு பிரெஞ்ச் தினத்தாள், “என்ன ஓர் அதிசயம், இத்திருத்தந்தையைக் குறித்து தப்பாகப் பேச ஓர் ஆள் கூட உலகில் இல்லை” என்றுரைத்தது. அதுதான் அப்புனித தந்தையின் பெருமை.
அன்பு நெஞ்சங்களே! வரும் வாரம் திருத்தந்தை 13ஆம் கிளமென்ட் குறித்து நாம் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்