தவக் காலம் 5-ஆம் ஞாயிறு : மரணத்தை வென்று மறுவாழ்வு பெறுவோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசே 37: 12-14 II. உரோ 8: 8-11 III. யோவா 11: 1-45)
மோகனா சென்னை வில்லிவாக்கத்தில் வீட்டு வேலை செய்துவரும் பெண். அவர் தனது வாழ்வைக் குறித்து ஒரு வார இதழுக்கு நேர்காணல் வழங்கியபோது இவ்வாறு கூறுகிறார். ''எங்கம்மா 20 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்றாங்க. வேலை அதிகம் இருந்ததால அம்மா அடிக்கடி சோர்ந்துபோயிடுவாங்க. எனக்கும் பெருசா படிப்பு வரலை. அம்மாவுக்கு உதவியா இருக்கலாம்னு நானும் வீட்டு வேலைக்கு வந்துட்டேன். காலையில 4 மணிக்கு எழுந்திடுவேன். பக்கெட்டைத் தூக்கிட்டு பால் பூத் போயிடுவேன். பளபளன்னு விடியறுத்துக்குள்ள எல்லா வீட்லயும் பால் பாக்கெட் போட்டுட்டு, நான் வாடிக்கையா வேலைபார்க்கிற வீடுகள்ல பாத்திரம் தேய்க்கிறது, வீட கூட்டிப் பெருக்குறது, துடைக்கிறதுன்னு வேலை செய்ய ஆரம்பிச்சிடுவேன். பத்து, பதினோரு மணி வரைக்கும் இந்த வேலையே டைட்டா இருக்கும். பல நாள் காலை டிபன் சாப்பிடறதுக்குக்கூட நேரமிருக்காது. இதுக்கப்புறம் ஆஃபீஸ்ல வேலைபார்க்காம வீட்ல இருக்கிறவங்க வீடுங்களுக்குப் போவேன். அங்கெல்லாம் வேலை முடிஞ்சு என் வீட்டுக்குப் போறதுக்கு மூணு, மூணரை மணி ஆயிடும். மதியம் சாப்பாட்டை முடிச்சிட்டு மறுபடியும் 4 மணிக்கு பக்கெட்டைத் தூக்கிகிட்டு பால் வாங்கக் கிளம்பிடுவேன். என் வாழ்க்கை இப்படித்தான் போய்கிட்டு இருக்கு” என்கிறார் மோகனா. ஆனாலும் அவரது முகத்தில் நம்பிக்கை தெரிகிறது. மோகனாவைப் போல இன்னும் ஆயிரக்கணக்கான பெண்கள் வாழ்க்கையை இப்படித்தான் நம்பிக்கையோடு நகர்த்திக்கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்ட நம்பிக்கை நிறைந்த மனிதர்களை இயக்கிக்கொண்டு இருப்பது அவர்களுக்குள் இருக்கும் உயிராற்றல் தரும் ஆவிதான்.
இன்று நாம் தவக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் கல்லறைக்குப் பிறகும் காவியம் சொல்லும் புதுவாழ்வு என்னும் நிறைவாழ்வு இருக்கின்றது என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றன. இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது மறையுரைச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இவ்வதிகாரத்தின் தொடக்கத்தில், உலர்ந்த எலும்புகளுக்கு உயிர்மூச்சுக் கொடுத்து அவைகளை மாபெரும் படைத்திரளாக எழுந்து நிற்கச் செய்கின்றார் இறைவன். மேலும் மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ “எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்” எனச் சொல்கிறார்கள் என்று கூறி அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக ஆண்டவராகிய இறைவன் மேற்கண்ட இறைவார்த்தைகளை வழங்குகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, இறந்த இலாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. கல்லறைக்கு முன்பாகச் சென்ற இயேசு, ‘கல்லை அகற்றி விடுங்கள்’ என்று கூறியபோது மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார். இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கூறியவுடன் கல்லறைத் திறக்கப்படுகிறது, இலாசரை உயிர்பெற்றெழச் செய்கிறார் இயேசு. 'என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்' என்று கூறி உலர்த்த எலும்புகளுக்கு உயிர்கொடுத்த இறைத்தந்தையைப் போன்றே, இயேசுவும் தன் ஆவியைக் கொடுத்து இலாசரை உயிர்பெறச் செய்கின்றார் என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல என்றும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார் என்றும் எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார். ஆக, இறந்தவர்களை உயிர்பெறச் செய்வதில் ஆவியின் செயல் அழுத்தம் பெறுவதை இன்றைய மூன்று வாசகங்களும் பதிவு செய்கின்றன.
மேலும், ஊனியல்பு மற்றும் ஆவியின் இயல்புகள் குறித்து இன்னும் சற்று ஆழமாகப் பேசுகிறார் புனித பவுலடியார். இன்றைய இரண்டாம் வாசகத்தினை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது அதனை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. “சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்” (காண்க உரோ 8:12-13) என்கிறார். இங்கே ஊனியல்பு (உடல் சார்ந்த) என்பது தீய ஆவிக்குரிய செயல்களைக் குறிக்கின்றது. இதன் அடிப்படையிலே தீய ஆவிக்குரிய இயல்புகளாக 16 காரியங்களை கலாதியாருக்கு எழுதிய திருமுகத்தில் எடுத்துக்காட்டுகின்றார் பவுலடியார். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். என்று கூறும் பவுலடியார், இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன் என்றும் எச்சரிக்கும் அதேவேளையில், தூய ஆவிக்குரிய இயல்புகளாக 9 காரியங்களையும் எடுத்துக்காட்டுகிறார். தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும் (காண்க கலா 5:19-22). இந்த இரண்டு இயல்புகளையும் எடுத்துக்காட்டும் பவுலடியார், தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள் என்றும், அப்போதுதான் ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள் என்றும் நம்மை அறிவுறுத்துகின்றார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், ஊனியல்பான தீய ஆவிக்குரிய செயல்கள் முடிவில்லாத் தண்டனை தரும் நரக வாழ்வைப் பெறவும், தூய ஆவிக்குரிய இயல்புகள் என்றும் அழியாத நிலைவாழ்வைப் பெறவும் நமக்கு வழிகாட்டுகின்றன. மேலும் இலாசரை உயிர்ப்பிக்கும் இயேசு, "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்கிறார். இந்தக் கட்டுகள் என்பது ஊனியல்புக்குரிய கட்டுகள் என்பதையும் நாம் உணர்ந்துகொள்வோம். ஆக, அலகை காட்டும் மரணம் என்னும் மாய வலையில் வீழ்ந்துவிடாமல் இருக்க, தூய ஆவியின் தூய வாழ்வுக்கான கனிகளை அணிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
அது ஒரு அழகான நாடு. அந்நாட்டிற்கென்று ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமானாலும் அந்த நாட்டிற்கு மன்னராக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னரை அந்நாட்டின் எல்லையோரம் பாய்ந்தோடும் ஆற்றின் மறுபுறமுள்ள அடர்ந்த காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. கொடிய விலங்குகள் மட்டுமே வாழ்ந்தன! மன்னர் காட்டிற்குள் நுழைந்ததுமே அவ்விலங்குகள் அவரைக் கொன்று தின்றுவிடும். இந்தச் சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவர் மட்டுமே ஆட்சி அரியணையில் அமர முடியும். ஆக, மன்னராக முடிசூட்டிக் கொண்டவரின் தலையெழுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம் என்பதுதான். இந்தக் கடுமையான சட்டத்துக்குப் பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னராகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் அந்தப் பயங்கர காட்டிற்குப் போகும் வழியிலே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு. இப்படி ஒரு மன்னருக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவரை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னர் வந்தார், அவருடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றார் அம்மன்னர். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறவருக்கு இவ்வளவு அலங்காரமா!'' என்று கேலியும் கிண்டலும் செய்தனர். தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினம் கொண்ட அவர், ''மன்னர் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!'' என்றார். கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக்கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது. இதில் மிகவும் அதிர்ச்சியடைந்தவர் படகோட்டியே! காரணம், இதுவரை அவர் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னரும் அங்கே மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பிக்கொண்டுதான் செல்வார்கள். எனவே, இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத படகோட்டி, ''மன்னா! நீங்கள் எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?'' என்று கேட்டார். ''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!'' என்றார் மன்னர். ''அங்கே சென்றவர்கள் திரும்பவும் இந்த நாட்டிற்கு வந்ததில்லை தெரியுமா?'' என்றார் படகோட்டி. ''தெரியும். நானும் திரும்ப இந்த நாட்டிற்கு வரப் போவதில்லை!'' என்றார் மன்னர். ''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?'' என்று கேட்டார் படகோட்டி. ''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களை அந்தக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை எல்லாம் வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்! இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டை செப்பனிட்டு உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள் அங்கு விளைகின்றன. மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, சாலைகள் எல்லாம் தயார்! நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்வதால் அவர்கள் ஒரு சிறிய நாட்டையே உருவாக்கிவிட்டார்கள். இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய புதிய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னராக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே என் நாட்டில் வேலைக்குச் சேர்ந்து விடு!'' என்றார் மன்னர். அவர் சொன்னதைக் கேட்டு அப்படியே வியப்பில் ஆழ்ந்துபோனார் அந்தப் படகோட்டி. ஆம், மரணத்தை வென்று மறுவாழ்வு பெற விரும்புபவர்களுக்கு எல்லாமே சாத்தியம் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது.
சாவை வெல்வதற்குத் தூய ஆவிக்குரிய இயல்புகள் நமக்கு அவசியம் தேவைப்படுகின்றன. ஆகவே, தூய ஆவிக்குரிய வழியில், சவால்களையும், சங்கடங்களையும், துயரங்களையும் சந்திக்கத் தயாராக இருந்தால், நாம் மரணத்தை வென்று மறுவாழ்வு பெற முடியும் என்பதை உணர்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக ஆண்டவர் இயேசுவிடம் இறையருள்வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்