தேடுதல்

கெத்சமனித் தோட்டத்திலுள்ள வழிபாட்டுத் தளம் கெத்சமனித் தோட்டத்திலுள்ள வழிபாட்டுத் தளம்  

புனித பூமியைப் பாதுகாப்பதில் உங்களுடன் இணைந்திருக்கின்றோம்!

எருசலேமிலுள்ள புனிதத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து உலகத் திருச்சபைகள் அமைப்பு மிகவும் அக்கறை கொண்டுள்ளது : பாஸ்டர் முனைவர் Jerry Pillay,

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித பூமியைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கும் எருசலேம் முதுபெரும் தந்தையர் மற்றும் அனைவருடனும் நாங்கள் ஒன்றித்திருக்கின்றோம் என்று கூறியுள்ளார் உலகத் திருச்சபைகள் (WCC) அமைப்பின் தலைவர் போதகர் முனைவர் Jerry Pillay,

மார்ச் 19, இத்திங்களன்று, கிழக்கு எருசலேமின் கெத்சமனித் தோட்டத்திலுள்ள வழிபாட்டுத் தளத்தின்மீதான தாக்குதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ள Pillay, கிறிஸ்தவ விடுமுறை மற்றும், அனைத்து நம்பிக்கைச் சமூகங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து நாள்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

எருசலேமிலுள்ள புனிதத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து உலகத் திருச்சபைகள் அமைப்பு மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்று கூறியுள்ள Pillay அவர்கள், மதத் தலைவர்கள், மத நிறுவனங்கள் மற்றும் புனித இடங்கள் மீதான இத்தகைய திடீர் தாக்குதல்களைத் தடுப்பது குறித்து விவாதிக்க முக்கிய மதத் தலைவர்களின் கூட்டத்தை விரைவில் நடத்துவது அவசியம் என்று அது கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே மதத் தலைவர்கள்மீது குறிவைக்கப்பட்டாதாகத் தோன்றும் இந்தப் பயங்கரமான தாக்குதல், அனைத்துலக சட்டத்தினை மீறிய மிக மோசமான செயல் என்று சுட்டிக்காட்டியுள்ள Pillay அவர்கள், இந்தத் தாக்குதல் புனித பூமியிலுள்ள கிறிஸ்தவர்கள், வழிபாட்டுத் தலங்கள், மற்றும் கல்லறைகள் மீதான அண்மையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறிக்கின்றது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2023, 13:51