தேடுதல்

மன்னாவை சேகரிக்கும் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை சேகரிக்கும் இஸ்ரயேல் மக்கள்  

தடம் தந்த தகைமை : ‘ஓய்வு நாளில் ஓய்ந்திருந்த இஸ்ரயேல் மக்கள்!’

ஏழாம் நாளில் இஸ்ரயேல் மக்களில் எவரும் வெளியில் செல்லவில்லை. அவர்களின் கூடாரங்களில் அவர்கள் ஓய்ந்திருந்தனர் .

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மோசே இஸ்ரயேல் கூட்டமைப்பினரைப்  பார்த்து, “நீங்கள் சேகரித்த மன்னாவில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது” என்றார். ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார். மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஆனால், ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது, தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர். கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர். அப்போது அவர் அவர்களை நோக்கி, “கடவுள் அறிவித்தபடி, நாளைய தினம் ஓய்வு நாள்; ஆண்டவரின் புனிதமான ‘சாபத்து’. எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்; எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம் வீசவும் இல்லை; புழு வைக்கவும் இல்லை. மோசே அவர்களிடம், “இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்; இன்று ஆண்டவரின் ஓய்வுநாள். எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது. ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்; ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது” என்று அறிவித்தார். ஆகவே, ஏழாம் நாளில் இஸ்ரயேல் மக்களில் எவரும் வெளியில் செல்லவில்லை. அவர்களின் கூடாரங்களில் அவர்கள் ஓய்ந்திருந்தனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2023, 13:31