தேடுதல்

இந்நாட்களில் பழைய யெருசலேம் நகரில் செபிக்கும் யூதர் இந்நாட்களில் பழைய யெருசலேம் நகரில் செபிக்கும் யூதர்  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - எபேரின் மனைவியால் கொல்லப்பட்ட சீசரா

ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். சீசரா தன் தேரிலிருந்து இறங்கித் தப்பி ஓடினான். சீசரா கேனியரான எபேரின் மனைவி யாவேலின் கூடாரத்திற்கு ஓடினான். ஏனெனில் ,ஆட்சோர் மன்னன் யாபினுக்கும் கேனியரான எபேரின் வீட்டுக்கும் இடையே நல்லிணக்கம் நிலவி இருந்தது. யாவேல் சீசராவைச் சந்திக்க வெளியே வந்து “இங்கே திரும்பும், என் தலைவரே! என்னிடம் திரும்பும்; அஞ்ச வேண்டாம்” என்றார். அவன் அவரோடு கூடாரத்திற்குச் சென்றான். அவர் அவனை ஒரு போர்வையால் மூடினார். அவன் அவரிடம், “எனக்குச் சிறிது தண்ணீர் கொடு. நான் தாகமாயிருக்கிறேன்” என்றான். பால் வைக்கும் தோற்பையைத் திறந்து அவர் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தார். பின் அவனை மூடினார். அவன் அவரிடம், “கூடாரத்தின் வாயிலில் நின்று கொள், எவனாவது வந்து, ‘இங்கு ஓர் ஆள் இருக்கின்றானா?’ என்று உன்னைக் கேட்டால் நீ ‘இல்லை’ என்று சொல்” என்றான். அவன் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது, எபேரின் மனைவி யாவேல் கூடார முளை ஒன்றையும் கத்தியல் ஒன்றையும் தம் கையில் எடுத்துக் கொண்டு ஓசைப்படாமல் அவனிடம் வந்து அவன் நெற்றிப் பொட்டில் முளைதரையில் இறங்கும்வரை அடிக்க, அவன் மடிந்தான். இதோ! பாராக்கு சீசராவைத் துரத்திக் கொண்டு வந்தார். யாவேல் அவரைச் சந்திக்க வெளியே வந்தார். யாவேல் அவரிடம், “வாரும்! நீர் தேடும் ஆளை நான் உமக்குக் காட்டுகிறேன்” என்றார். அவரும் அவருடன் உள்ளே செல்ல, இதோ! சீசரா இறந்து கிடந்தான். கூடார முளை அவன் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு, அந்நாளில் கடவுள் கானானிய மன்னன் யாபினை இஸ்ரயேல் மக்களின் முன் ஒடுக்கினார். இஸ்ரயேல் மக்களின் கை மேன்மேலும் வலுவடைந்து, கானானிய மன்னன் யாபினை நசுக்கி அழித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2023, 15:04