தேடுதல்

சீனாய் மலை சீனாய் மலை 

தடம் தந்த தகைமை – சீனாய் மலையில் இஸ்ரயேல் மக்களுடன் உடன்படிக்கை

மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆண்டவர் மோசேயிடம், “ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோருடனும், இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களுடனும் ஆண்டவரிடமாய் ஏறிவாருங்கள்; தொலையில் நின்று தொழுதுகொள்ளுங்கள். மோசே மட்டும் ஆண்டவர் அருகில் வரலாம்; ஏனையோர் அருகில் வரலாகாது; மக்கள் அவரோடு மலை மேலேறி வரக்கூடாது” என்று கூறினார். எனவே, மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக; “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று விடையளித்தனர். அதிகாலையில் மோசே எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர். அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார். பின்னர் மோசே, ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோரும் இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களும் மேலேறிச் சென்று, இஸ்ரயேலின் கடவுளைக் கண்டார்கள். அவர் பாதங்களின் கீழுள்ள தளம் நீல மணிக்கல் இழைத்த வேலைப்பாடு போன்றும், தெள்ளிய வான்வெளி போன்றும் இருந்தது. இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் மேல் அவர் கைவைக்கவில்லை. அவர்கள் கடவுளைக் கண்டனர்; உண்டு குடித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2023, 12:14