தடம் தந்த தகைமை - யோசுவா எமோரியரைத் தோற்கடித்தல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான். அவன் மிகவும் அச்சமுற்றான். ஏனெனில், பெருநகரான கிபயோன் அரச நகர்களில் ஒன்றாகவும் ஆயியைவிடப் பெரிய நகராகவும் அதன் மக்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தும் அது சமாதானம் செய்து கொண்டது. ஆகவே, அதன் மீது போர் தொடுக்க, எமோரிய இனத்தைச் சார்ந்த எருசலேம், ஏபிரோன், யார்முத்து, இலாக்கீசு, எக்லோன் ஆகியவற்றின் ஐந்து மன்னர்களும் ஒன்றுகூடி அவர்கள் படைகளுடன் சென்றார்கள்; கிபயோனுக்கு எதிரில் பாளையம் இறங்கி அதன்மீது போர்தொடுத்தார்கள்.
கிபயோன் மக்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவுக்கு உதவிக் கேட்டு சொல்லி அனுப்பினார்கள். எனவே, கில்காலிலிருந்து, யோசுவா தம் போர்வீரர்கள் அனைவருடனும் வலிமைமிக்க வீரர்களுடனும் புறப்பட்டுச் சென்றார். ஆண்டவர் யோசுவாவிடம், “அவர்கள் முன் அஞ்சாதே; ஏனெனில், அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்” என்றார். யோசுவா கில்காலிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து, அவர்களை நோக்கித் திடீரென வந்தார். ஆண்டவர் இஸ்ரயேல்முன் எமோரியரைத் துன்புறுத்தினார்; கிபயோனில் அவர்களை வன்மையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தார். அவர்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெத்கோரோனுக்குத் தப்பி ஓடுகையில் ஆண்டவர் அவர்கள்மீது அசேக்காவரை பெரும் கற்களை வானத்திலிருந்து பொழிந்தார். இஸ்ரயேலரின் வாளால் கொல்லப்பட்டவர்களைவிடக் கல்மழையால் இறந்தவர்கள் அதிகம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்