தேடுதல்

கொழும்புவில் உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்கள்(2023) கொழும்புவில் உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்கள்(2023)  (ANSA)

ஐ.நா.வின் தலைமையில் அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு

குற்றம் இழைத்தவர்களை மன்னிக்க இலங்கை கத்தோலிக்கர் தயாராக இருக்கின்றனர், ஆனால் யாரை மன்னிப்பது என்பதை அறிய விரும்புகிறார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குறித்த நியாயம் கிட்டவேண்டும் என தலத்திருஅவை இன்னும் போராடி வருவதாக அறிவித்தார் அருள்பணி ஜூலியன் பேட்ரிக் பெரைரா.

வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எவ்வித உண்மையும் வெளிவராத நிலையில், ஐ.நா.வின் தலைமையில் அனைத்துலக விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்பதற்கு தலத்திருஅவை முயன்றுவருவதாக கூறினார் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் சட்டக்குழுவின் செயலர் அருள்பணி பேட்ரிக் பெரைரா.

இக்குண்டுவெடிப்புத் தொடர்பாக உண்மைகளை வெளிக்கொணர்வதும், நீதியை நிலைநாட்டுவதும் தேசத்திற்கு செய்யும் கடமையாகும் என்ற அருள்பணி, பெரைரா, இரண்டு கத்தோலிக்க கோவில்கள், ஒரு எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கோவில், மூன்று சொகுசு தங்கும் விடுதிகள் போன்றவை குண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு 261பேர் கொல்லப்பட்டது குறித்த உண்மைகள் இன்னும் மூடி மறைக்கப்பட்டு வருவதாகத் தோன்றுகின்றன என எடுத்துரைத்தார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும் இக்குண்டுவெடிப்புகள் குறித்த அரசின் விசாரணைகளை கேள்வியெழுப்பியதுடன், அனைத்துலக விசாரணைக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்புடையவைகளை மூடிமறைக்க முயல்வது, முக்கிய விசாரணை அதிகாரிகளை மாற்றியுள்ளது, பெருமெண்ணிகையில், அதாவது 23,000 குற்றச்சாட்டுகளை புகுத்தி அவைகளை விசாரிக்க என காலம் கடத்துவது போன்ற யுக்திகள் கையாளப்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டினார் அருள்பணி பெரைரா.

ஒரு பயங்கரவாதக் கும்பலின் 25 பேர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதும் ஒருவித கண்துடைப்பு முயற்சியே எனவும் அறிவித்தார் அருள்பணி பெரைரா.

குற்றம் இழைத்தவர்களை மன்னிக்க கத்தோலிக்கர் தயாராக இருக்கின்றனர், ஆனால் யாரை மன்னிப்பது என்பதை அறிய விரும்புகிறார்கள் என மேலும் கூறிய அருள்பணி பெரைரா அவர்கள், அண்மையில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 52வது கூட்டத்தொடரில், அனைத்துலக விசாரணைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2023, 15:22