தேடுதல்

எம்மாவு சீடர்களுடன் உடன் பயணிக்கும் உயிர்த்த ஆண்டவர் எம்மாவு சீடர்களுடன் உடன் பயணிக்கும் உயிர்த்த ஆண்டவர்  

பாஸ்கா காலத்தின் 3-ஆம் ஞாயிறு : ‘வாழ்வை மாற்றிய சந்திப்பு!’

உயிர்த்த ஆண்டவரின் துணைகொண்டு நமது வாழ்வை முன்னோக்கி நகர்த்துவோம். அவரது உயிர்ப்பின் சக்தி நம் வாழ்வை மாற்றிப்போட நம்மையே நாம் அனுமதிப்போம்.
ஞாயிறு சிந்தனை 22042023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I.  திப 2: 14, 22-33         II.  1 பேது 1: 17-21       III.  யோவா 24: 13-35)          

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்திலிருந்து வந்திருந்த ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். காலை 8.30 மணிக்குத் தொடங்கவிருக்கும் பி.எஸ்.சி வேளாண்மை உயர் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், விவசாயக் கூலியான படிக்காத அந்தத் தாய்க்கும், சிறுமிக்கும், அந்தப் படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது கூட தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர். பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வின்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார். அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் பதிவாளரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. விமானப்  பயணச் செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். காலை 10.05-க்குக் கோயம்பத்தூர் புறப்பட்ட விமானம் சரியாக 11.40 மணிக்குக் கோயம்புத்தூரில் தரையிறங்கியிருக்கிறது. அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் அங்கே தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்குக்  கலந்தாய்வு  நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்குள்ள பதிவாளர் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கலந்தாய்வில் கலந்துகொண்ட அந்தப் பெண்ணுக்குக் கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் Biotechnology படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது. மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது இவ்வுலகம்... இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம்!!! என முடிகிறது அந்த whatsapp செய்தி. எங்கோ போகவேண்டிய நாம் இங்கு வந்து விட்டுமே... எல்லாமே போய்விட்டதே... இனி என் வாழ்க்கை அவ்வளவுதான்! என்று தோல்வியின் விளிம்பில் இருந்த அந்த மாணவிக்கு சிலர் நம்பிக்கை ஒளியேற்ற முன்வந்ததன் விளைவாக இன்று அப்பெண் புதுவாழ்வு பெற்றுருக்கிறாள். சாதிக்கவேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறி இருக்கின்றது. நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் அவர்களுடன் மேற்கொண்ட எதிர்பாராத சந்திப்பின் விளைவாகவே இந்த மற்றம் நிகழ்ந்திருக்கின்றது. பல நேரங்களில் நாம் பெறும் எதிர்பாராத சந்திப்புகள்தாம் நம் வாழ்வின் திசையையே மாற்றுகின்றன.

இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள், தோல்வியின் விளிம்பில் இருக்கும் மனிதருக்கு நம்பிக்கை தருவதாக அமைகின்றன. ‘நாம் கண்ட கனவெல்லாம் வீணாகிவிட்டதே! நமக்கு மீட்பளிக்க வந்த உண்மை மெசியாவிற்கு சமாதி கட்டிவிட்டனரே யூதர்கள்!’ என்று விரக்தியிலும், தோல்வியின் பயத்திலும் தங்களின் சொந்த ஊரான எம்மாவு சென்றுகொண்டிருந்த சீடர்களுடன் உடன் பயணித்து அவர்களுக்கு நம்பிக்கை தருகின்றார் உயிர்த்த ஆண்டவர். லூக்கா நற்செய்தியின் இறுதியில் இடம்பெறும் இந்த எம்மாவு பயணம் நமது தனிப்பட்ட வாழ்விற்கு நாம் பெறவேண்டிய அடையாளமாகத் திகழ்கின்றது. நமது வாழ்க்கையின் நம்பிக்கை பாதையில் நமது கனவுகள், உள்ளத்தின் ஆழமான நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகளை அடைய பலவீனங்கள் மற்றும் துன்பங்களிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. நமது வாழ்க்கைப் பயணத்தில்,  தோல்விகளினாலும் கடந்தகால அனுபவங்களினாலும் பல நேரங்களில் சிறைக்குள் அடைபட்டு இருப்பது போல நாம் முடங்கிப் போகின்றோம். இப்படிப்பட்டத் தருணங்களில் நாம் தனியாக இல்லை, மாறாக, உயிர்த்த இயேசு நம்முடன் பயணிக்கின்றார் என்பதை எம்மாவு சீடர்களின் பயணம் நமக்கு வெளிப்படுத்துகின்றது. இயேசு நம்முடன் பயணித்து கண்களைத் திறக்கச் செய்து, உள்ளத்தைப் பற்றி எரியச்செய்து, நம்மோடும் பிறரோடும் அவரோடும் திருஅவையோடும் ஒப்புரவாகச் செய்கின்றார் என்ற உன்னதமான எண்ணங்களை அவர்களின் பயண அனுபவங்கள் நமக்குத் தருகின்றன.

எம்மாவு சீடர்களின் மனநிலை

இயேசுவின் சீடர் குழுவை அடையாளப்படுத்தும் எம்மாவு சீடர்கள் இருவரும் இயேசுவின் மேல் தாங்கள் வைத்த நம்பிக்கை நிறைவேறாமல் போனது பற்றி குறைகூறிக் கொண்டு செல்கின்றனர். அச்சீடர்கள் இருவரும் நிகழ்வு நடந்த இடத்தை விட்டு அகன்று, அடைக்கலம் தேடி எம்மாவு நோக்கித் தப்பிச் செல்ல நினைத்தனர். துன்பம் வரும்போது அதை விட்டுத் தப்பி ஓட நினைப்பது மிக மோசமானது.  மாறாக, துன்பத்தை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவின் இறப்புக்குப் பின் துன்பத்தினால் துவண்டவர்களாய்த் தங்களின் எதிர்பார்ப்பு அனைத்தையும் இயேசுவின் மேல் வைத்து, அவரது கொடூர இறப்பிற்கு பின்  ஏமாற்றமடைந்தவர்களாய், இயல்பு வாழ்க்கையை வாழ எம்மாவு நோக்கி திரும்புகின்றனர் அவர்கள். இதைத்தான் பேதுருவும் ஏனைய சீடர்களும் செய்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று போய்ப் படகில் ஏறினார்கள் (காண்க. யோவா 21:3) என்று யோவான் நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மெசியாவின் பாடுகள் வழியாக அவர்கள் பெற்ற துன்ப அனுபவங்களை மனதில் சுமந்து  குற்றவாளிகள் போல கவலையுடன் பயணம் செய்யும் எம்மாவு சீடர்களின் முகங்கள் வருத்தமாய் சோகமாய் இருக்கின்றன. சோகமாய் என்று கூறும்போது, சீடர்களின் மகிழ்வான எதிர்பார்ப்புகள் வீணாகிவிட்டன, உறுதியான நம்பிக்கைகள் சிதைந்து விட்டன, கனவுகள் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டன என்று அர்த்தம் பெறுகின்றது. தீயோனிடமிருந்து வரும் சோதனைகள், துன்பங்கள் ஆகியவை, நமது ஆன்மிகப் பயணத்தைப் பாதித்து, இத்துன்பங்களிலிருந்து  ஒருபோதும் மீண்டு வரமுடியாது, எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையற்ற தன்மையை நம்மில் வளர்க்கின்றன. இயேசு கைதுசெய்யப்பட்டபோது சீடர்கள் அனைவரும் இத்தகைய மனநிலையில்தான் இருந்தனர் என்பதையும் இப்போது நம் மனதிற்குக் கொண்டு வருவோம்.

உயிர்த்த இயேசு தரும் நம்பிக்கை

நமது ஏமாற்றம், துயரம், தீயோனின் தூண்டுதலால் செய்யும் பாவம், போன்றவற்றால் நம்முடைய அருள்வாழ்வின் நீர் வற்றிப்போய், எதுவும் செய்ய முடியாது எனும் நிலையிலும் உயிர்த்த இயேசு நம்மோடு உடன் நடக்கின்றார். எவ்வாறு தடம்புரண்டு வருத்தமுற்று, தெளிவற்ற பாதையை நோக்கி பயணம் மேற்கொண்ட எம்மாவு சீடர்களின் பயணத்தில் உயிர்த்த இயேசு துணை நடந்தாரோ அதுபோல, நமது பாதையிலும் அவர் உடன் நடக்கின்றார். உற்சாகமூட்டும் வார்த்தைகளை, எளிமையான ஆறுதல் வார்த்தைகளை அவர் தரவில்லை, மாறாக, தனது இறப்பின் மறையுண்மையை உயிர்ப்பின் ஆற்றலை, மறை நூல் வழியாக வெளிப்படுத்தி, அவர்கள் பெற்ற அனுபவத்திற்கும் நிகழ்விற்கும் புதிய ஒளி கொடுக்கின்றார். அனைத்தையும் புதிதாகக் காண, வாழ்விற்கும் கண்களுக்கும்  ஒளி கொடுக்கின்றார். இறுதியாக அப்பம் பிடுவதன் வழியாக, கடவுளின் அன்பிற்கிணங்க  நண்பர்களுக்காக  உயிரை அர்ப்பணித்த தன்னை யாரென்று வெளிப்படுத்தி தோல்வியிலிருந்து நம்பிக்கை நோக்கிய மகிழ்வின் பயணத்தை தொடங்க, நம் ஒவ்வொருவருக்கும் திருஅவைக்கும் உதவுகின்றார்.

உயிர்த்த இயேசு நமக்குத் தரும் பாடங்கள்

அப்படியென்றால், நமது கண்கள் திறக்கப்பட, உள்ளம் மறைநூலினால் பற்றி எரியப்பட நாம் என்ன செய்ய வேண்டும்? ஆன்மிக மற்றும் பொருள் சார்ந்த சவால்களை  சகிப்புதன்மையோடு எதிர்கொள்ள, நேர்மையோடு கூடிய சகோதரத்துவப் பாதையை தேட, நமது ஏமாற்றங்கள் துயரங்களிலிருந்து நாம் மீண்டு வர கடந்த கால காயங்களிலிருந்து குணமாக, கடவுளோடும் பிறரோடும் ஒப்புரவாக வேண்டும். இயேசு நம்மோடு பயணிப்பதை நம்பி, அவரை எதிர்கொண்டு சந்திக்கவும், அவரது வார்த்தைகள் நமது வாழ்வை ஊடுறுவவும், அவர் நம் காயங்களை குணப்படுத்த  தனிப்பட்ட விதத்தில் நம்மை அனுமதிக்கவும் வேண்டும். இந்த நம்பிக்கையில் நாம் பெற இருக்கும் கிறிஸ்துவின் திருஉடல்தான் நம்மை ஒரே மேசையில் அமர்ந்து உண்ணும் கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகின்றது. மேலும் இயேசுவின் வார்த்தை நமது வாழ்வின் மையமாகும்போது நம்முடைய குழப்பமான நம்பிக்கையற்ற சூழலில்  கடவுளின் அன்பும் நன்மைத்தனமும் நமக்குத் தெளிவாக விளங்கும்.

குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மைச் சோதிப்பது ஏன்? சோதனைகளையும் துயரங்களையும் சந்திக்காமல் கடவுளின் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டார். “நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்” என்று கூறினார் குரு. மறுநாள் குரு சொல்லப்போகும் விடையை அறிய மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வந்தனர். அப்போது, மண்ணால் செய்யப்பட்ட இரண்டு குடுவைகளை அவர்களுக்கு முன்னால் வைத்தார் குரு. பார்ப்பதற்கு அவையிரண்டும் ஒரே மாதிரி இருந்தன. “இங்கிருக்கும் இந்த இரண்டு குடுவைகளுக்கும் இடையே ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்தக் குரு. மாணவர்கள் ஒரு கணம் கழித்து, “இரண்டு குடுவைகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான்” என்றார்கள். “இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” என்று மீண்டும் கேட்டார் குரு. உடனே மாணவர்கள் ஒருமித்தக் குரலில், “தெரியவில்லை குருவே!” என்று பதிலளித்தனர். “ஆனால் இவை இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது” என்று கூறிய குரு, முதல் குடுவையைக் கீழேத் தள்ளிக் கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு குடுவையைக் கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது. அப்போது குரு, “குடுவையை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்குத் தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக் கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதைக் கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதைக் காட்டிவிட்டது. இறைவன் நமக்குத் தரும் சவால்களும் இப்படித்தான். நாம் சவால்களைச் சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் அவைகளைச் சந்திக்கும் போதுதான், நமக்குள்ளே இருக்கும் உண்மையான குணங்களும், எண்ணங்களும், மனப்பான்மையும் வெளிப்படுகின்றன. மேலும், “நமது வாழ்வின் பாதையில் வரும் சவால்களும், வேதனைகளும், சோதனைகளும், துயரங்களும், தோல்விகளும் நம்மை நாமே அறிந்துகொள்ளவதற்கே. இதனை நன்கு உணர்ந்துகொண்டால்தான் நம்மையே திருத்திக்கொண்டு நமது வாழ்வின் பாதையை மாற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும்!” என்று கூற மாணவர்களுக்குத் தெளிவு பிறந்தது.

சோதனைகள், இழப்புகள் மற்றும் தோல்விகளின் பிடியில் நாம் சிக்கித்தவிக்கும் வேளை, அவற்றிலிருந்து தப்பி ஓட நினைப்பதைவிட, அவற்றை மனவுறுதியுடன் எதிர்த்து நின்று போராடி வெற்றிபெறக் கற்றுக்கொள்வோம். வாழ்வில் நாம் சந்திக்கும் தோல்விகளை நன்கு உற்றுப்பார்த்தால் அதில் துணிச்சல் ஒளிந்திருப்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அந்தத் துணிச்சலை நாம் ஆடையாக அணியும்போது அது வெற்றி என்னும் கிரீடத்தால் நம்மை அலங்கரிக்கும். இதனை உணர்ந்தவர்களாக உயிர்த்த ஆண்டவரின் துணைகொண்டு நமது வாழ்வை முன்னோக்கி நகர்த்துவோம். ஒவ்வொரு நாளும் நாம் மேற்கொள்ளும் உயிர்த்த இயேசுவினுடனான சந்திப்பு நம் வாழ்வை மாற்றிப்போட நம்மையே நாம் அனுமதிப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் உயிர்த்த ஆண்டவரிடம் மன்றாடுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2023, 12:02