வாரம் ஓர் அலசல் – வெற்றியின் அன்னையாம் வியாகுல மரியா
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறைமகன் இயேசு ஆண்டவரின் திருவுளத்தை ஏற்று நம் பாவங்களுக்காக பாடுகள் பல பல பட்டு சிலுவைச்சாவை ஏற்று உயிர்விட, எருசலேம் நகருக்கு பவனியாக வந்த நாளினை குருத்து ஞாயிறன்று சிறப்பித்தோம். இதன் வழியாக இறைமகன் யேசுவின் திருப்பாடுகளை நம் மனக்கண் முன் நிறுத்தி, நமது பாவங்களுக்காக வருந்தவும், மனந்திருந்தி வாழவும் மீட்பைப் பெறவும் அழைக்கும் தவக்காலத்தின் புனித வாரத்திற்குள் நாம் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். இப்புனித வாரத்தில் இயேசு அனுபவித்த துன்பங்கள் எத்தனையோ அதே அளவு அன்னை மரியாளும் துன்பங்கள் பலவற்றை அனுபவித்தார். அன்னை மரியாள் அனுபவித்த வியாகுலங்களைப் பற்றி இன்றைய வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் காணலாம்.
தனயனின் கனவை நனவாக்க, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, தன்னையே அர்ப்பணித்த தாய் தான் தூய வியாகுல அன்னை. இறைக்கே இணையாகி, வானிற்கு நிகராகி, பேரன்பிற்கு இலக்கணமாக திகழும் தாயாம் மரியா இயேசுவோடு இணைந்து துன்புற்று வீரத்தின் அன்னையாக வெற்றியின் அன்னையாக நமக்குக் காட்சி தருகின்றார். தாயின் அன்பை விவரிக்காத கவிஞர்களும் இல்லை. கவிதைகளும் இல்லை. தாய் நம்மை விழிகளால் பார்த்து, இதழ்களால் சிரித்து, ஈடில்லா வெற்றியை நமக்குத் தருபவர். நாம் வெற்றியில் களித்திட, உதிரத்தைத் தந்தவர். இப்படி நம் இன்பத்தைப்பெருக்கி, இன்னலைத் தீர்ப்பவர். வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு கருணை, வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபி- தாய். தன்னையே வெறுமையாக்கி ஊழியரின் வேடமேற்ற கிறிஸ்துவை பின்பற்றி, தன்னையே இறையடியாராக இனம் காட்டிய நம் தாய் மரியாளை பார்த்து பழக நாம் அழைக்கப்படுகிறோம். எல்லாத் துன்பங்களும் வியாகுலங்கள் அல்ல. நமது தவறுகளால் வரும் துன்பங்களும், குறையுள்ள மனிதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் பழகும்போது ஏற்படும் மன வேதனைகளும் வியாகுலங்கள் ஆகாது. மாறாக தன்னல தளைகளிலிருந்து விடுபடும்போது, பிறர் நல்வாழ்வு பெற உழைக்கும் போது, இறைவன் தனக்கு கொடுத்த அழைப்பு, பணி இதுதான் என ஒன்றை உய்த்துணர்ந்து பற்றுறுதியுடன் வாழ்ந்து செயல்படும் போது ஏற்படும் துன்ப துயரங்களே, வியாகுலங்கள் ஆகும். அவ்வகையில் நம் தாய் மரியாள் பெற்ற வியாகுலங்களைக் கொண்டாட மூன்று காரணங்கள் உண்டு.
1. மீட்கும் திருவுளத்திற்கு தன்னைக் கையளித்தது.
2. மீட்பராகிய இயேசுவுடன் அவர் கொண்டிருந்த இணைபிரியா உறவு.
3. மக்களாகிய நம் மேல் கொண்டிருந்த தாய்மை உணர்வு.
அன்னை மரியாளின் அடிச்சுவட்டை பின்பற்றும் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போல இறைத்திருவுளத்திற்கு நம்மை கையளிக்கக் கூடியவர்களாய் வாழவும், இயேசுவின் மீது இணைபிரியா அன்பு கொண்டிருக்கவும், நமது செயல்களில் அன்னையின் தாய்மை பண்பு மிளிரவும் அருள் வேண்டுவோம்.
இன்றைய நாளின் அன்னையின் வியாகுலங்கள் பற்றிய சிந்தனைகளை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி ஜெபமணி. சிறந்த ஆசிரியரும் எழுத்தாளாருமான அருள்சகோதரி ஜெபமணி அவர்கள் 1) வழிகாட்டும் அன்னை.2) வசந்தம் நமை வாழ்த்தட்டும். 3) முத்தெடுக்க வாரீகளா. 4)அன்னை எனும் அழகோவியம்., என்னும் நான்கு புத்தகங்களைப் படைத்தளித்தவர். கத்தோலிக்க இதழ்களில் தொடர் கட்டுரைகளை எழுதி எழுத்தாற்றலால் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருப்பவர்.
அன்னை மரியாள் பட்ட துன்பங்கள், வியாகுலங்கள் ஏழு என்று கூறப்பட்டாலும், அன்னை உண்மையில் பட்ட துன்பங்கள் ஏராளம். தான் சந்தித்த ஒவ்வொரு வியாகுலத்திலும் தன்னை ஒரு நிலையில் நிறுத்தி அந்நிலையை நமக்கும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் என்பதில் எதிர்காலத்தைப் பற்றிய அபய நிலை, இரவிலேயே எகிப்துக்கு புறப்பட்டு போ என்பதில் புலம்பெயர்ந்தோர் நிலை, குழந்தையைக் காணாது தேடுதலில் தனையனை இழந்த தாயின் நிலை, சிலுவைப்பாதையில் மகனை சந்தித்தலில் கண்ணீரால் துணிவூட்டும் மக்கபேயர் தாயின் நிலை, சிலுவையடியில் நிற்கையில் துன்பத்திலும் துணிவோடு நிற்கும் தாயின் நிலை.
மரித்த மகனை மடியில் சுமக்கையில் வாழ்வே இருண்ட நிலை, கல்லறையில் அடக்கம் செய்கையில் தனிமையில் தவிக்கும் கையறுநிலை. இப்படியாக ஏழு வியாகுலங்களிலும் தன் நிலையில் தான் நின்று அந்த துன்பங்களை எல்லாம் நமக்கு மீட்பாக மாற்றிக் கொடுக்கிறார். அவர் உள்ளத்தைத் தைத்தது துன்பம் தரும் அம்புகள், வாள்கள் அல்ல. மாறாக மண்ணை ஊடுறுவிச்சென்று அவற்றை வளப்படுத்தும் உரங்கள் என்று நமக்கு வெளிப்படுத்துகிறார்.
எப்போதும் கொடுப்பவரின் நிலையில் இருப்போம் நம் தாய் மரியாளைப் போல, பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் கொடுப்போம். எலிசபெத் அம்மாளுக்கு உதவினார் எதையும் எதிர்பார்க்காமல். கானாவூரிலே கல்யாணத்தில் உதவினார் கடுகளவும் பயன் எதிர்பாராமல். இப்படி வாழ்நாள் முழுவதும் உதவி செய்து பலனை எதிர்பாராது கொடுப்பவர் நிலையில் இருந்து உயர்ந்தார். நாமும் அந்நிலைக்கு மாற முயற்சிப்போம். நமது அன்பை, சேவையை, உதவியை இரக்கத்தை என அனைத்தையும் சிறிது என்று எண்ணாமல் நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து வாழ்வோம். இலவசமாகப் பெற்றுக் கொண்டீர்கள் இலவசமாகக் கொடுங்கள் என்பதற்கேற்ப அனைத்தையும் கொடுப்பவர்களாவோம். இதனால் சொல்லால் விளக்க முடியாத விவரிக்க முடியாத அன்பின் சாரமாக விளங்குபவர் இறைவன் ஒருவரே என்பதை நமது வாழ்வாலும் சொல்லாலும் உணர்வோம். இறைவனின் அன்பை இப்புனித வாரம் முழுதும் உணர்வோம். இயேசுவின் பாடுகளில் முழுமையாகப் பங்கேற்று உயிர்ப்பின் மகிழ்வைப் பெறுவோம். அனைவருக்கும் புனித வாரத்தை புத்துணர்வுடன் அனுசரிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்