வாரம் ஓர் அலசல் - 57 ஆவது உலக தகவல் சமூகத்தொடர்பு நாள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
தகவல் தொடர்பு இல்லாமல் தரணியில் மாற்றம் இல்லை. காற்றென பரவுகின்ற செய்தி அறியாமல் பாமரர்கள் வாழ்வில் ஏற்றம் காண வழியில்லை. கல்வி, பணி, குடும்பம், வாழ்வு, பண்பாடு, அரசியல், அறிவொளி என எல்லாவற்றிலும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்துள்ளன சமூகத்தொடர்புகளும் அதன் சாதனங்களும். வெளியில் செல்லும் போது பையும் பணமும் எடுத்துச்சென்ற காலம் மறைந்து மறக்காமல் அலைபேசியை மட்டும் எடுத்துச் செல்லவேண்டும் என்று நினைவுபடுத்தும் காலத்திற்கு நம்மைக் கொண்டு வந்துள்ளன இச்சமூகத்தொடர்பு சாதனங்கள்.
நன்மை தீமை என இரண்டையும் நாணயத்தின் பக்கங்கள் போல் கொண்டுள்ள இச்சமூகத்தொடர்பு நாளானது உலகளவில் மே மாதம் 17ஆம் நாளும் வத்திக்கான் மற்றும் உலகத்தில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களில் பெந்தேகோஸ்து நாளுக்கு முந்தைய வாரத்திலும் கொண்டாடப்படுகின்றது. அவ்வகையில் இவ்வாண்டு (2023) மே 21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 57ஆவது உலக சமூகத்தொடர்பு நாளானது கொண்டாடப்பட்டது.
உலகளவில் சமூகத்தொடர்பு நாள்:
2005-ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானம் வழியாக மே 17ஆம் நாள் உலக சமூகத்தொடர்பு நாள் கொண்டாட வலியுறுத்தப்பட்டது. இதற்கு முன்பாக 1865ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தைக் கொண்டாடும் விதமாக சிறப்பிக்கப்பட்ட உலக தகவல் சமூகத்தொடர்பு நாள் 1973ஆம் ஆண்டு மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் இணையத்தால் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வந்தது.
நவம்பர் 2005-இல் நடந்த தகவல் சமூகத் தொடர்பிற்கான உலக மாநாட்டைத் தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல் உலக தகவல்தொடர்பு சமூக நாள் 2006ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் கொண்டாடப்பட்டது.
கத்தோலிக்க திருஅவையில் பெந்தகோஸ்தே ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு அதாவது இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று சிறப்பிக்கப்படும் உலக தகவல் சமூகத்தொடர்பு நாளானது ஒவ்வவொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. சமூகத்தொடர்பாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் விழாவான சனவரி 24 ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் 57ஆவது உலக தகவல் சமூகத்தொடர்பு நாளுக்கான கருப்பொருளையும் செய்தியையும் வழங்கியுள்ளார்.
இதயத்தோடு பேசுதல் : பிறரன்பில் உண்மையை செயலாக்குதல், என்ற மையக்கருத்துடன், இவ்வாண்டின் தகவல் சமூகத்தொடர்புக்கான செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த இதயத்தோடும் விரித்த கைகளோடும் உரையாடுவோம், மற்றவர்களுக்கு தூய இதயத்துடன் செவிமடுப்பதன் வழியாகவே, அன்பில் உண்மையைப் பின்பற்றி நம்மால் பேசமுடியும் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சென்று பார்த்து செவிமடுத்தல் என்ற கருப்பொருளானது 2022ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக இருந்த நிலையில் இவ்வாண்டு மற்றவர்களுக்கு தூய இதயத்துடன் செவிமடுப்பதன் வழியாகவே, அன்பில் உண்மையைப் பின்பற்றி நம்மால் பேசமுடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திறந்த இதயத்தோடும் விரித்த கைகளோடும் தகவல் தொடர்பில் ஈடுபடுவதற்கான அர்ப்பணம் ஒவ்வொருவருக்கும் உரியது என்றும் கூறியுள்ளார்.
திருஅவையின் மறைவல்லுனர்களுள் ஒருவராகிய புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் அவர்கள் உயிரிழந்த 400 ஆண்டுகளுக்குப்பின் சிறப்பிக்கப்படும் சமூகத்தொடர்பு நாளானது திருத்தந்தை 11ஆம் பயஸால் புனித சேல்ஸ், கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டையும் சிறப்பிக்கின்றது.
1567ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி Savoy யின் சேல்ஸ் அரண்மனையில் பிறந்து, லியோனில் 1622ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இறைபதம் சேர்ந்தவர் பிரெஞ்சு புனிதரான பிரான்சிஸ் டி சேல்ச்ஸ். தன் வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் மாபெரும் அன்பை எங்கே காணலாம் என்று தன்னையே கேட்டுக்கொண்டவர். புனித பிரான்சிஸ் சலேசியார் காலத்தின் அடையாளங்களை மிகத் துல்லியமாக கணித்தவர் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ். நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இறைபதம் சேர்ந்த புனித சேல்ஸ் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 28 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்தும் அன்பைச் சார்ந்ததே” (Totum amoris est) என்ற தலைப்பில், திருத்தூது மடல், ஒன்றினை வெளியிட்டார். செய்தியாளர்கள் மற்றும், சமூகத்தொடர்பாளர்களின் பாதுகாவலரும், "நாடுகடத்தப்பட்டிருந்த" ஜெனீவா ஆயருமான புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்கள் மிகப்பெரும் சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில், பிறரன்பு, மகிழ்வு, மற்றும், சுதந்திரம் ஆகியவற்றில் கடவுளைத் தேடுவதில் மக்களுக்கு உதவினார்
தன் காலத்தில் வாழ்ந்த மக்களுக்குக் கடவுள் மீதுள்ள தாகத்திற்குப் ஒரு புதிய வழியில் விளக்கம் தந்தவர். மக்கள், தங்கள் இதயங்களில் ஆண்டவரைத் தேடுவதற்கும், பிறரன்பில் அவரைக் கண்டுணரவும் ஆன்மாக்களின் மிகச்சிறந்த இயக்குனராக, அவர்களுக்கு உதவும் திறனைக் கொண்டிருந்தவர். இறையன்பு குறித்த கருத்தாழமிக்க முக்கியமான ஆய்வுக்கட்டுரையை எழுதியதற்காக மட்டுமல்லாமல், அன்புக்கு மிகச்சிறந்த சான்றாக இருக்கிறவர் என்பதற்காக திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், புனித சேல்ஸ் அவர்களை இறையன்பின் மருத்துவர் என்று அழைத்திருக்கிறார். மேலும் மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் இப்புனிதரை மாறிவரும் காலத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியவர் என்றும், திருத்தூதர், மறையுரையாளர், எழுத்தாளர், செபம் மற்றும், செயல் மனிதர் என்றும் பாராட்டியுள்ளார். நம் காலத்திற்கு புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் அவர்கள் விட்டுச்சென்றுள்ள மரபுரிமைகள், தொலைநோக்குப் பார்வை, தூண்டுதலாகவும், ஒளியூட்டுவதாகவும் இருக்கின்றன. கால்வினிஸ்ட் கிறிஸ்தவ சபையுடன் மிகப்பெரும் முரண்பாடுகளை கத்தோலிக்க திருஅவை கண்டுவந்த காலத்தில், ஜெனிவாவின் ஆயராக இருந்த தே சேல்ஸ், பொறுமையான பேச்சுவார்த்தைகள், தாழ்ச்சி, மனிதாபிமானம் ஆகியவற்றின் வழியாக கடவுளின் இரக்கம்நிறை அன்பின் சான்றாக விளங்கினார்.
57ஆவது உலக சமூகத்தொடர்பு நாளுக்கான திருத்தந்தையின் செய்தி
ஒருவர் மற்றவருக்கு செவிமடுப்பதே மற்றவர்களுக்கு நாம் கொடுக்கவல்ல மிகச்சிறந்த பரிசு. முன்சார்பு எண்ணங்களின்றி, கவனமுடன், திறந்த மனதுடன் ஒருவருக்கு செவிமடுப்பதன் வழியாகவே கனிவுடனும், கருணையுடனும், நெருக்கத்துடனும் நாம் மற்றவர்களுடன் உரையாடமுடியும். செவிமடுப்பதில் தாழ்ச்சியையும், உரையாடுவதில் கனிவையும் அடிப்படையாகக் கொண்ட சமூகத்தொடர்பு முறை என்பது, உண்மை மற்றும் பிறரன்பிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் அமைதிக் கலாச்சாரத்துடனும், பேச்சுவார்த்தைகளுக்குரிய மனப்பான்மையுடனும், ஒப்புரவுடனும் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை நாம் உணரவேண்டும். சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவோம். இதயத்திலிருந்து எப்போதும் பேசுவோம்.
செல்லவும், பார்க்கவும், கேட்கவும் நம்மைத் தூண்டுவது இதயம் மற்றும் திறந்த இதயத்துடன் வரவேற்கவும் தொடர்பு கொள்ளவும் நம்மைத் தூண்டுவது இதயம் என்றும், பொறுமையுடன் காத்திருத்தல் நமது பார்வையை உறுதிப்படுத்தும், செவிமடுத்தலைப் பயிற்சிக்கும், உரையாடல் மற்றும் பகிர்கின் இயக்கவியலில் நுழைய, அன்புடன் தொடர்புகொள்ள உதவும்.
“கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால், முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்“ என்று இயேசு லூக்கா நற்செய்தியில் எச்சரிக்கிறார் (லூக்கா 6:44) இதன்படி சமூகத்தொடர்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் இதயத்தை தூய்மைப்படுத்துவது அவசியம். தூய்மையான இதயத்துடன் செவிமடுப்பதன் வழியாகவும், பேசுவதன் வழியாகவும் மட்டுமே, உண்மை என்னவென்று கண்டறிய முடியும். எம்மாவுக்குச் செல்லும் வழியில் சீடர்களுடன் உரையாடும் வழிப்போக்கராக செயல்பட்ட இயேசுவில் இத்தகைய செயலைக் காணலாம். உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களின் இதயத்தோடு பேசுகிறார், மனதில் துன்பத்தோடு பயணித்த அவர்களோடு உடன் செல்கிறார், தன்னை முன்னிறுத்தாமலும் தன் கருத்துக்களைப் புகுத்தாமலும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதன் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அவர்களின் மனதை அன்புடன் திறக்கிறார்.
நாம் அனைவரும் உண்மையைத் தேடவும் சொல்லவும் பணியாற்றவும் அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக கிறிஸ்தவர்களாகிய நாம், நாவை தீமையிலிருந்து காத்துக்கொள்ளும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறோம் கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள் (எபே. 4:29) என திருவிவிலியம் நமக்கு வலியுறுத்துகின்றது.
வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் மிக இன்றியமையாத பங்கு வகிக்கும் கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை. கிராமங்களில் கூட மிக சாதாரணமாக அதீத வளர்ச்சியடைந்து வரும் இணையக் கலாச்சாரம் நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் பல குற்றங்களும் பெருகி வருகின்றன. சமுக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்த வேண்டும். விவேகத்துடனும், விழிப்புணர்வுடனும் பயன்படுத்துவது எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.
அனைவருக்கும் 57ஆவது உலக தகவல் சமூகத்தொடர்பு நாள் நல்வாழ்த்துக்கள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்