தேடுதல்

தாவீதின் பாவத்தை உணர்த்தும் இறைவாக்கினர் நாத்தான் தாவீதின் பாவத்தை உணர்த்தும் இறைவாக்கினர் நாத்தான்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 38-4- பாவ அறிக்கை செய்வோம்

நாம் எந்த நிலையில் இருந்தாலும் பாவத்தில் வீழும்போது தாழ்மையான மனதுடன் ஆண்டவரிடத்தில் மன்னிப்பு வேண்ட முன்வருவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 38-4- பாவ அறிக்கை செய்வோம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘செவிசாய்க்கும் இறைவன்' என்ற தலைப்பில் 38-வது திருப்பாடலில் 11 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 16 முதல் 18 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துச் சிந்திப்போம். இப்போது ஒளியாம் இறைவனின் பிரசன்னத்தில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க விடாதேயும்; என் கால் தடுமாறினால் அவர்கள் பெருமை கொள்வர்’ என்று சொன்னேன். நான் தடுமாறிவிழும் நிலையில் இருக்கின்றேன்; நான் எப்போதும் வேதனையில் உள்ளேன். என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்; என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன்” (வசனம் 16-18). மேற்காணும் இந்த இறைவார்த்தைகளில், எதிரிகளின் நகைப்புக்கும் எள்ளிநகையாடலுக்கும், ஏளனப் பேச்சுக்களுக்கும் ஆளாகிவிடாமல் தன்னைப் பாதுகாக்குமாறு இறைவனிடத்தில் வேண்டுகிறார் தாவீது அரசர். மேலும் தான் செய்த பாவங்கள் தனது வாழ்வையே முற்றிலும் அழித்துவிடும் என்று அஞ்சி அவற்றை ஆண்டவரிடத்தில் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவதையும் நம்மால் காண முடிகிறது.

பாவம், கொல்லும் நஞ்சு போன்றது

ஒரு நாள் காலையில் துறவி ஒருவர் பாவத்தின் பயங்கரம் குறித்து மக்கள் கூட்டத்திற்கு உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது அவர், பாவம் ஏற்படுத்தும் கடுமையான விளைவைக் குறித்தும், அதனால் அவர்கள் எம்மாதிரியான பாவச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் அவர்களிடம் வலியுறுதிப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அம்மக்களில் சிலர் துறவியின் அருளுரை முடிந்த பிறகு அவரிடம் சென்று, "குருவே, நீங்கள் இவ்வளவு காரசாரமாகவும், வெளிப்படையாகவும் பாவத்தைக் குறித்துப் பகிரங்கமாய்ப் பேசியிருக்க வேண்டியதில்லை. காரணம், இளம்பருவத்தில் இருக்கும் எங்கள் பிள்ளைகள் பாவங்களைக் குறித்து வெளிப்படையாய் அறிந்துகொண்டால் அவர்கள் வெகு எளிதில் பாவிகளாகிவிடுவார்கள். வேண்டுமானால் பாவத்தைப் பாவம் என்று சொல்லாது, அதனை ஒரு குற்றம் என்று சொன்னால் பரவாயில்லாமல் இருக்கும். ஆனால் பாவத்தைக் குறித்து இவ்வளவு பகிரங்கமாய்ப் பச்சையாகப் பேசவேண்டாம்" என்று வலியுறுத்திக் கூறினர்.

உடனே அத்துறவி, தன்னுடைய மருந்துப் பெட்டியில் நஞ்சு என்று எழுதப்பட்டிருந்த ஒரு மருந்துக் குப்பியை எடுத்து அவர்களிடம் காட்டி, "நான் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிய விரும்புகின்றேன். ‘நஞ்சு’ என்று எழுதப்பட்ட சீட்டை இந்த மருந்துப் குப்பியிலிருந்து எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ‘தேன்’ என்ற இனிய பெயரை, அதே நஞ்சுக் குப்பியின்மேல் எழுதச் சொல்லுகிறீர்கள். அப்படித்தானே...? நான் அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய ஆபத்தில் முடியும். நஞ்சு எப்போதும் நஞ்சுதானே. நஞ்சு என்பதை நஞ்சு என்று வெளிப்படையாகவும், தெளிவாகவும், வெகு திட்டவட்டமாகவும் கூறாவிட்டால் பெரும் ஆபத்தை விளைவிக்க நேரிடும். எனவே, உள்ளதை உள்ளவாறு சொல்லவேண்டும். இல்லாததை இல்லையென்றுதான் சொல்லவேண்டும். அதுபோல கொடிய நஞ்சைவிட ஆபத்தை விளைவிக்கும் பாவத்தைப் பாவம் என்று சொல்லிப் பகிரங்கமாய்க் கண்டித்துணர்த்த வேண்டும். அப்படியில்லையென்றால், பாவத்தைக் குறித்து ஏனோதானோவென்று அசட்டையாயிருக்கிறவர்கள் அழிந்துபோவது திண்ணம்" என்றார்

நாம் வாழும் இன்றையச் சூழலில், பாவத்தின் பயங்கரத்தையும் ஆபத்தையும் நாம் சரியாய் உணர்ந்து புரிந்துகொள்வதில்லை. பாவம் மனிதனைக் கொல்லும் நஞ்சு போன்றது. இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று வெளிப்படையாய்க் கூற மறுத்து, அதனை எளிதானதாகக் கருதி, அப்பாவத்தோடு விளையாடி, அதனை இயற்கையான குற்றமென்றும், மனித பலவீனமென்றும், ஏதோ தவறுதல் என்றும் கூறி அப்பாவம் ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர் பலர். ஆனால், ஒருவர் தனது தார்மீகக் கடமையிலிருந்து தவறி பாவம் இழைக்கும் போது, அவர் செய்த பாவத்தை எடுத்துரைத்து அவரைக் கண்டித்துத் திருத்தவேண்டும். தாவீது பத்சேபாவுடன் பாவம் புரிந்து அதன் விளைவாக அவளது கணவர் உரியாவையும் கொன்றொழித்த நிலையில், அவரின் இந்தப் பெரும் பாவத்தை இறைவாக்கினர் நாத்தான் வழியாகக் கடவுள் கண்டிப்பதைக் காண்கின்றோம். அப்பகுதியை இப்போது தியானச் சிந்தனையுடன் உள்வாங்குவோம். ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: “ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஒரு ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர்குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது. வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.” உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம்கொண்டு “ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்” என்று நாத்தானிடம் கூறினார். அப்போது நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன்" (காண்க 2 சாமு 12:1-7) என்றார்.

தாவீதின் பாவ அறிக்கை

நாம் தியானித்துக்கொண்டிருக்கும் இன்றைய இறைவார்த்தைகளின் இரண்டாம் பகுதியாக அமைவது தாவீதின் பாவ அறிக்கை. “என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்; என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன்” என்ற வார்த்தைகளில் அவரது பாவ அறிக்கை வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். இறைவாக்கினர் நாத்தான் அவரது குற்றங்களை எடுத்துரைத்ததும், “நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்” (காண்க 2 சாமு 12:13) என்று தாழ்மையான மனதுடன் அதனை ஏற்றுக்கொள்கின்றார். மேலும், “கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும் என்றும், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது” (காண்க திபா 51:1,3) என்றும் ஆண்டவரிடத்தில் பாவ அறிக்கை செய்கின்றார் தாவீது அரசர்.

புதிய ஏற்பாட்டில் பாவ அறிக்கை

நமதாண்டவர் இயேசுவின் பணிவாழ்வின்போது, பலர் அவரிடத்தில் பாவ அறிக்கை செய்வதைப் பார்க்கின்றோம். எடுத்துக்காட்டாக, இயேசு, சக்கேயு என்னும் வரிதண்டுபவரைக் கண்டு அவருடன் சென்று அவருடைய வீட்டில் விருந்துண்ணுகிறார். இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர். இந்த முணுமுணுப்பைக் கேட்டதும் சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” (காண்க லூக் 19:1-10). அவ்வாறே, இயேசு கூறும் காணாமல் போன மகன் உவமையில், பாவநிலையில் வாழ்ந்துவிட்டு திரும்பி வரும் இளைய மகன் தன் தந்தையிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ (லூக் 15:21) என்று தந்தையிடம் தனது பாவத்தை அறிகையிடுவதாக அவ்வுவமையில் எடுத்துக்காட்டுகிறார். மேலும் பரிசேயரும் வரிதண்டுவோரும் என்ற இன்னொரு உவமையில். ஆன்மிகத் திமிருடன் இறைவேண்டல் செய்யும் பரிசேயரையும், தாழ்மையான உள்ளத்துடன் தனது பாவங்களை அறிக்கையிடும் வரிதண்டுபவரையும் எடுத்துக்காட்டுகிறார் இயேசு. வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’  என்று கடவுளை நோக்கிக் குரல் எழுப்புவதாகக் கூறும் இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” (காண்க லூக் 18:9-14) என்று கூறுவதிலிருந்து உடைந்த உள்ளமுடன் பாவ அறிக்கை செய்யும் ஒரு பாவியான மனிதரே கடவுளுக்கு ஏற்புடையவராகிறார் என்றும் திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றார் இயேசு. இதன் விளைவாகவே அன்னையாம் திருஅவையும் இந்த ஒப்புரவு என்னும் பாவ அறிக்கை செய்தலை ஒரு முக்கியத் திருச்சடங்காக நிகழ்த்துகிறது.

பாவத்தின் காரணிகள்

பொதுவாக, ஆணவம், கோபம், பொறாமை, காமம், பெருந்தீனி, சோம்பல், பேராசை, ஆகியவை பாவத்தின் காரணிகளாக எடுத்துக்காட்டப்படுகின்றன. இவற்றில் எதாவது ஒன்றில் சிக்கினாலே போதும், அது நம்மை பாவத்திற்குள் இழுத்துச் சென்றுவிடும் என்பது உறுதி. கடவுளுக்கு ஏற்புடையவராக வாழும் ஒரு நல்ல மனிதர் அனைவராலும் போற்றப்படுபவராக இருப்பார். அதேவேளையில் அவருடைய இப்படிப்பட்ட நற்குணத்திற்காக ஒருசில எதிரிகளையும் பெற்றிருப்பார். ஆனால் அதே மனிதர் வேண்டுமென்றோ அல்லது சந்தர்ப்பச் சூழ்நிலையாலோ பாவத்தில் விழ நேரிடும்போது அவர் அனைவராலும், அதிலும் குறிப்பாக, தனது எதிரிகளால் எள்ளிநகையாடப்பட்டு, கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவார் என்பது உறுதி. இந்நிலைதான் தாவீதுக்கும் நிகழ்கிறது. ஆனாலும், தாவீது அரசர் மனம் தளர்ந்துவிடாமல், தனது பாவத்தை ஆண்டவரிடத்தில் எடுத்துரைத்து பாவ அறிக்கை செய்து, தன்னை மன்னித்து ஏற்குமாறு அவரிடத்தில் சரணடைகின்றார். ஆகவே, நாம் எந்த நிலையில் இருந்தாலும் பாவத்தில் வீழும்போது தாழ்மையான மனதுடன் ஆண்டவரிடத்தில் மன்னிப்பு வேண்ட முன்வருவோம். பாவம் நீக்கி புது வாழ்வு பெறுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2023, 17:23