தடம் தந்த தகைமை - யூதா நாட்டிற்குப் பயணமாகும் பெண்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாபு நாட்டிற்கு சென்றார். அவர் பெயர் எலிமலேக்கு; அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர். அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார். அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டனர். ஒருவர் பெயர் ஓர்பா; மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின. பிறகு, மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார். நகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார். பிறகு, அவரும், அவருடைய மருமக்கள் இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு யூதா நாட்டுக்குப் பயணமானார்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்