உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் இந்திய மதத்தலைவர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
எந்த மதமும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை, ஒவ்வொரு மதமும் மற்றவர்களுக்கு சமத்துவத்தையும் மரியாதையையும் கற்பிக்கின்றது என்றும், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களுக்கான சட்டம் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூறி இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பாராட்டியுள்ளனர் இந்திய சிறுபான்மை மதத்தலைவர்கள்
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை வெளியிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வானது, இது நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை பாதிக்கும் கடுமையான குற்றம் என்றும் கூறியுள்ளது.
கடந்த காலங்களில், உச்ச நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவுகளை வழங்கிய போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அச்சட்டத்தை செயல்படத் தவறிவிட்டனர் என்று உகான் செய்திகளுக்குக் கூறியுள்ளார், டெல்லி உயர்மறைமாவட்டத்தின் கத்தோலிக்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.சி.மைக்கேல்
டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான மைக்கேல் அவர்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்களை வெளியிடும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், இச்சட்டத்தை முழுமனதுடன் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை வரவேற்ற, இந்து மதத் தலைவர் கோஸ்வாமி சுஷில் மகராஜ் அவர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் கூட மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவத்திற்கு ஆபத்தான வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
"எந்த மதமும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல, ஒவ்வொரு மதமும் மற்றவர்களுக்கு சமத்துவத்தையும் மரியாதையையும் கற்பிப்பதால், எந்த மதத்தையும் தவறாகப் பேச யாருக்கும் உரிமை இல்லை" என்று கூறியுள்ளார் இந்திய மதங்களின் நாடாளுமன்றத்தின் தேசியத் தலைவர் மகராஜ்.
அனைத்து மாநிலங்களும் நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இந்த உத்தரவை செயல்படுத்தும் என்றும், சில கட்சிகள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெறுவதற்காக வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துகின்றன என்றும், கூறியுள்ளார் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான மையத்தின் தலைவர் முஹம்மது ஆரிஃப்,
2022 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றம் மூன்று மாநிலங்களுக்கு வெறுப்பூட்டும் பேச்சுக்களை வெளியிடுபவர்களை ஒடுக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. (ucan)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்