சீனாய் மலை சீனாய் மலை  

இஸ்ரயேல் மக்களுக்காக ஆண்டவரிடம் வேண்டும் மோசே

இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத்தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன் என்றார் ஆண்டவர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும்பாவம் செய்துவிட்டீர்கள்; இப்போது நான் மலைமேலேறி ஆண்டவரிடம் செல்லப்போகிறேன். அங்கே ஒரு வேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்யஇயலும்” என்றார். அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, “ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள். இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்” என்றார். ஆண்டவரோ மோசேயிடம், “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கிவிடுவேன். நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத்தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்” என்றார்.

மோசே ஆண்டவரிடம், “‘இம்மக்களை நடத்திச்செல்’ என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. ‘பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்’ என்றும் ‘நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய்’ என்றும் கூறியுள்ளீர். இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும். உம்மை இதனால் அறிந்துகொள்வேன். உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன். மேலும், இந்த இனம் உம்மக்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும்” என்றார். அதற்கு ஆண்டவர், “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” என்று கூற, மோசே அவரிடம், “உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர் என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2023, 13:54