ஆண்டவரின் விண்ணேற்றம் : இயேவின் சாட்சிகளாய்... நீட்சிகளாய்..!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. திப 1: 1-11 II. எபே 1: 17-23 III. மத் 28: 16-20)
ஆறாம் வகுப்பு ஆசிரியர் மரங்களை பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், "ஐயா மனிதர்கள் எல்லாம் எண்பது, தொண்ணூறு வயதானதும் இறந்து போய்டுறாங்க. ஆனா இந்த மரங்கள் மட்டும் எவ்வளவு வயசானாலும் இறப்பதே இல்லை. அது மாதிரி மனிதர்களும் சாகாமலே வாழ முடியாதா..?’" என்று கேட்டான். அப்போது ஆசிரியர், "மனிதனா பிறந்தா இறந்து தான் போகனும் என்பது நியதி. ஆனா வாழுற காலத்துல நல்ல முறையா வாழ்ந்தோம்னா, இறந்த பின்னாடியும் வாழலாம்" என்றார். “அதெப்படி நடக்கும் ஐயா” என்று இன்னொரு மாணவன் கேட்டான். உடனே ஆசிரியர், ''அன்னை தெரசா இறந்து ரொம்ப வருசமாச்சு. ஆனாலும் இன்னைக்கு வர நாம யாருமே அவங்கள மறக்கல. அவங்கள பத்தி பாடத்துல படிக்கிறோம். அவங்களோட உருவத்தையும் புகைப்படைத்தையும் வச்சிருக்கோம். அன்னை தெரசா பேரைச் சொன்னதுமே எல்லாரும் எவ்வளவு மகிழ்ச்சி அடையுறோம். அதுமட்டுமல்ல, கத்தோலிக்கத் திருஅவை அவங்களுக்குப் புனிதர் பட்டம் கொடுத்திருக்கு. அவங்க உயிரோட வாழ்ந்த காலத்துல ஏழை எளியோருக்கும் நோயாளிக்கும் சுயநலமில்லாமல் செய்த பணிகள்தாம் இதற்குக் காரணம். இதுல இன்னொரு முக்கியமான காரியத்தையும் நீங்க அவசியம் தெரிஞ்சுக்கணும். அதாவது, அன்னை தெரசா இறந்த பிறகு அவங்க செஞ்ச எல்லா பணிகளையும், அவங்க ஏற்படுத்தின சபையிலே உள்ள சகோதரிகள் எல்லாம் தொடர்ந்து செய்யுறாங்க. அதேமாதிரி நாம இறந்தாலும் நாம செய்த நல்ல காரியங்கள மத்தவங்களும் தொடர்ந்து செய்யுறமாதிரி நாம சான்று வாழ்க்கை வாழணும். மரங்களும் அப்படிதான். அதாவது, ஒரு மரத்தின் விதை எங்கு ஊன்றப்பட்டாலும், தாயைப்போல அதுவும் உயர்ந்து வளர்ந்து செழித்து நல்ல பலன் கொடுக்கும். ஆனால், கடவுளின் உயர்ந்த படைப்பான மனிதர்கள் எல்லாரும் அப்படி வாழுறது இல்ல. கொஞ்ச பேருதான் பேரு சொல்ற மாதிரி நல்ல வாழ்க்கை வாழ்றாங்க. நீங்களும் இறந்த பின்னாடி உங்க பேரு சொல்றமாதிரி வாழுற காலத்துலேயே நல்ல மனிதரா வாழுங்க. நீங்க வாழுற வாழ்க்கையைப் பொறுத்துதான் மத்தவங்களும் உங்கள் வாழ்க்கைக்கு சாட்சியா இருப்பாங்க" என்றார் ஆசிரியர்.
இன்று நாம் ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவைக் கொடாடுகின்றோம். நாம் அனைவரும் உயிர்த்த ஆண்டவரின் சாட்சிகளாகவும் நீட்சிகளாகவும் வாழவேண்டும் என்பதை இன்றையப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய நாளில் மத்தேயு நற்செய்தி ஆண்டவரின் விண்ணேற்றத்தை நமக்கு விவரிக்கிறது. இப்போது அந்நற்செய்தியை வாசித்து நமது சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார் இயேசு.
முதலும் முடிவுமான கலிலேய மலை
உயிர்த்த ஆண்டவர் இயேசு, தான் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பு தனது சீடர்கள் அனைவரையும் கலிலேயாவிலுள்ள மலை ஒன்றில் கூடுமாறு பணித்ததையொட்டி அவர்கள் அங்கே வருகின்றனர். ஏன் கலிலேய மலைக்கு அவர்களை வரச்சொல்கிறார் என்ற பின்புலத்தை பார்ப்போம். கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த அன்னை மரியாவுக்கு இயேசுவின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்படுகிறது (காண்க. லூக் 1:26) அப்படியென்றால் கலிலேயாவில் கருவாகின்றார் இயேசு. அவருடைய பிறப்பு பெத்லேகேமில் நிகழ்கின்றது. மீண்டும் இயேசு தனது பெற்றோரால் கலிலேயாவிற்குக் கொண்டுவரப்படுகிறார். இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்கும் விதமாக, யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். அதன் பிறகு, யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார் (காண்க. மத் 3:13; 4:12-13). அங்குத் தனது இறையாட்சிப் பணிகளைத் தொடங்குகின்றார். ஆக, இயேசு பிற இனத்தவரோடு யூதர்களும் வாழ்ந்த காலிலேயப் பகுதிகளைத் தேர்வு செய்ததன் வழியாக மீட்பின் செய்தி எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். அதனைத் தொடர்ந்து இயேசுவின் 80 விழுக்காடு பணிகள் எருசலேமை மையப்படுத்தியே அமைகின்றன. இறுதியாக, இயேசு எருசலேம் நகருக்கு வெளியே ‘மண்டையோட்டு இடம்’ என்று பொருள்படும் ‘கொல்கொதா எனப்படும் இடத்தில் சிலுவையில் அறைந்து படுகொலை செய்யப்படுகிறார் (காண்க மாற் 15:22-24). மேலும், "இதனால்தான், இயேசுவும், தம் சொந்த இரத்தத்தால் மக்களைத் தூயவராக்க நகரவாயிலுக்கு வெளியே துன்புற்றார்" (காண்க எபி 13:12) என்று கூறுகின்றார் புனித பவுலடியார். தான் உயிர்த்தெழுந்த பிறகு கலிலேயாவிலுள்ள ஒரு மலையில் விண்ணேற்றமடையும் இயேசு, தான் கொண்டுவந்த மீட்பின் நற்செய்தி தனது நீட்சிகளான சீடர்கள் வழியாக இங்கிருந்தே உலகம் முழுவதிலுமுள்ள அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகின்றார். ஆக, இயேசுவின் தொடக்கமும் முடிவுமாக கலிலேயா அமைகின்றது இயேசு, தான் விண்ணைற்றம் அடைவதற்கு முன்பு, தனது சீடர்களுக்கு 5 காரியங்கள் குறித்து பேசுகின்றார்
01. அனைத்து அதிகாரங்களையும் கொண்ட இயேசு
முதலாவதாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது என்ற வார்த்தைகள் வழியாக கடவுள் மட்டுமே அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர் என்பதை மீண்டும் ஒருமுறை தனது சீடர்களுக்கு தெளிவுபடுத்துகின்றார் இயேசு. அதாவது, இறைத்தந்தை தனக்குக் கொடுத்த இந்த அதிகாரங்கள் அவர்களின் பணிக்கு அங்கீகாரமாய் இருக்கும் என்றுரைக்கின்றார். தனது பணிவாழ்வின்போது 72 சீடர்களைப் பணிக்கு அனுப்பியபோது, "பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது (காண்க. லூக் 10:19) என்று கூறி தந்தை தனக்குக் கொடுத்த அதிகாரத்தைத் தனது சீடர்களுக்கும் அளிக்கின்றார். ‘எந்த அதிரகாரத்தால் இப்படிச் செய்கிறீர்’, ‘என்ன இது அதிகாரம் கொண்ட போதனையாக இருக்கின்றதே’ என்று கேள்வி எழுப்பி, அனைவரும் வியந்து பேசும் அளவிற்கு இயேசுவின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. மேலும், “என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?” என்று இறைத்தந்தையின் அதிகாரத்திற்கே சவால்விட்ட பிலாத்துவிடம், “மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது (காண்க யோவா 19:10,11) என்று இயேசு மறுமொழி கூறியதையும் பார்க்கின்றோம்.
02. எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்
இரண்டாவதாக, ‘எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்’ என்கின்றார் இயேசு. தான் யூத இன மக்களை அதாவது, இஸ்ரயேல் மக்களை மட்டுமல்ல, எல்லா மக்களினத்தாரையும் மீட்கவே வந்துள்ளேன் என்பதை தனது பணிவாழ்வின் போது பல நிகழ்வுகள் வழியாக வெளிப்படுத்திய இயேசு, தான் விண்ணேற்றம் அடைவதறகு முன்பாக மீண்டும் அதனை சீடர்களுக்கு நினைவுபடுத்துகின்றார். "இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்" (காண்க.லூக் 13:29) என்கின்றார். மேலும், திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை, இரு புதல்வர்கள் உவமை, கொடிய குத்தகைக்காரர் உவமை, திருமண விருந்து உவமை, மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு, காணாமல் போன திராக்மா, காணாமல்போன ஆடு, காணாமல் போன மகன் ஆகிய உவமைகள் வழியாக, தான் அனைவருக்கும் மீட்பளிக்க வந்தவர் என்பதை தெளிவுபடுத்துகின்றார். ஆகவே, தனது சீடர்களும் தன்னைப்போலவே எல்லா மக்களினத்தாரையும் ஒரே இறையாட்சிக்குள் கொணர்ந்து ஒரே மக்களினமாய் உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், ‘எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்’ என்கின்றார் இயேசு.
03. தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்
மூன்றாவதாக, ‘தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்’ என்றுரைக்கின்றார். இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்குப் பெற்றபோது மூவொரு இறைவனின் பிரசன்னத்தைப் பார்க்கின்றோம். இவ்வுலகை மீட்கும் செயலில் மூவொரு இறைவனின் பங்களிப்பை இது எடுத்துக்காட்டுகின்றது. இதன் காரணமாகவே, திருமுழுக்கு வழங்கும்போது, 'தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்' என்று அருள்பணியாளர் கூறுகின்றார். திருமுழுக்கு என்பது கிறிஸ்தவ வாழ்வின் நுழைவாயிலாக அதாவது, புதுவாழ்விற்கான அடையாளமாக அமைகின்றது, இருளிலிருந்து ஒளிக்கும், தீமையிலிருந்து நன்மைக்கும், சாவிலிருந்து வாழ்வுக்கும், தன்னலத்திலிருந்து பிறர்நலத்திற்கும் கடந்து செல்வதைத் திருமுழுக்கு அருளடையாளம் குறித்துக் காட்டுகிறது. சிறப்பாக, திருமுழுக்கு என்பது பிறரது நலன்களுக்காகவும், இச்சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்வை முழுவதுமாகக் கையளிக்க முன்வருவதைக் எடுத்துக் காட்டுகிறது. யோர்தான் நதியில் இயேசு பெற்ற திருமுழுக்கு இதனைத்தான் உணர்த்துகின்றது. இதன் காரணமாகவே, ‘தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்’ என்று அறிவுறுத்துகின்றார் இயேசு.
04. கட்டளைகளைக் கடைபிடிக்க கற்பியுங்கள்
நான்காவதாக, "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்" என்கின்றார் இயேசு. அப்படியென்றால், அவர் கொடுத்த கட்டளை எது? திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேள்வி எழுப்பியபோது, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை (காண்க. மத் 22:35-39) என்று இணைச்சட்டம் மற்றும் லேவியர் நூல்களிலிருந்து எடுத்துக்காட்டும் இயேசு, சீடர்களின் பாதங்களைக் கழுவியபின்பு, "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (காண்க. யோவா 13:34) என்கின்றார். ஆக, இயேசுவின் அன்பு, தூயது, எல்லாருக்கும் உரியது, பணிவும் துணிவும் கொண்டது, மன்னித்து ஏற்கக் கூடியது, தியாகமிக்கது, பிறருக்காகத் தன் வாழ்வைத் தற்கையளிப்பு செய்யக்கூடியது. இப்படிப்பட்ட அன்பின் கட்டளையை எல்லாருக்கும் கற்பிக்கும்படி அறிவுறுத்துகின்றார் இயேசு.
05. உலகம் முடிவு வரை உடனிருக்கும் இயேசு
ஐந்தாவதாக, 'இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்' என்கின்றார். இயேசு கடல்மீது நடந்து தனது சீடர்களை நோக்கி வந்தபோது, “துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்” (காண்க. மத் 14:27) என்று தனது உடனிருப்பை வெளிப்படுத்தினார். மேலும், "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்" என்றும், "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்" (காண்க. யோவா 14:1,18) என்றும், “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார் (வச.16) என்று, தனது பணிவாழ்வின்போது நம்பிக்கையளித்த இயேசு, இப்போது, இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்றுரைக்கின்றார். ஆகவே, எல்லாரையும் உள்ளடக்கிய இறையாட்சியைக் கட்டியெழுப்பும் நமது அன்றாடப் பணிகளில் நாம் தனித்து விடப்படுவதில்லை. மாறாக, உயிர்த்த ஆண்டவர் நம்முடன் என்றுமிருக்கின்றார் என்பதை அவரின் இந்த வார்த்தைகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.
சாட்சிகளாய்.... நீட்சிகளாய்...
ஆகவே, இயேசுவின் மேற்கண்ட அறிவுறுத்தல்களை ஒன்றுபட்ட மனநிலையில் கடைபிடித்து அவற்றை வாழ்வாக்கும்போது நாம் உயிர்த்த ஆண்டவரின் சாட்சிகளாகவும் நீட்சிகளாகவும் வாழ்கின்றோம் என்பதை உணர்வோம். ஒருகணம் நமது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் கடந்து வந்த பாதைகள் எல்லாம் தடைகளும் சவால்களும் நிறைந்திருந்தன என்பதை அறியமுடிகிறது. இனி நாம் தொடரப் போகும் பயணமும் துன்பங்களும், துயரங்களும், சவால்களும் நிறைந்தவையாகத்தான் இருக்கப் போகின்றது. அதேவேளையில், உயிர்த்த ஆண்டவர்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை அவைகளைத் தகர்த்தெறிந்து நமக்கு வெற்றியைக் கொணரும் என்பதை உணர்வோம். ஆகவே, இயேசுவின் படிப்பினைகளும் பாதைகளும் நமது வாழ்விற்குச் சாட்சியாகவும் நீட்சியாகவும் இருப்பதுபோல, நமது படிப்பினைகளும் பாதைகளும் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வுக்கு சாட்சியாகவும் நீட்சியாகவும் அமையட்டும். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்