உலகளவில் துயருறும் கிறிஸ்தவம் குறித்த ஆய்வறிக்கை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகெங்கிலும் மதச் சுதந்திரத்தின் நிலைமை மோசமடைந்து வருவதாக அமெரிக்க தன்னாட்சி கண்காணிப்பு ஆணையம் (independent monitoring commission) புதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அனைத்துலக மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஐக்கிய ஆணையத்தின் படி (USCIRF), உலகின் பல நாடுகள் 2022-ஆம் ஆண்டு முழுவதும் மதச்சுதந்திர நிலைமைகளில் குறிப்பிடத்தக்கப் பின்னடைவைக் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட அதன் 2023-ஆம் ஆண்டு அறிக்கையில், அனைத்துலக மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஐக்கிய ஆணையம் (USCIRF), ஆப்கானிஸ்தான், சீனா, கியூபா, ஈரான், நிக்கராகுவா மற்றும் இரஷ்யா போன்ற நாடுகளிலும் இந்தப் பின்னடைவு உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், இருகட்சி கூட்டாட்சி அமைப்பின் அறிக்கை, வெளியுறவுக் கொள்கை வழியாக மதத் துன்புறுத்தலைத் தடுக்கவும், வெளிநாடுகளில் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தை மேம்படுத்தவும் அமெரிக்க நிர்வாகம் மற்றும் காங்கிரசுக்குப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அனைத்துலக மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஐக்கிய ஆணையம், 2023-ஆம் ஆண்டில் இந்த விடயத்தில் மிகவும் அக்கறைகாட்டப்படவேண்டிய 17 நாடுகளைப் பரிந்துரைத்துள்ளது. இதில் 2022-ஆம் ஆண்டு குறித்துக்காட்டப்பட்ட, மியான்மர், சீனா, கியூபா, எரித்திரியா, ஈரான், நிக்கராகுவா, வட கொரியா, பாகிஸ்தான், இரஷ்யா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய 12 நாடுகளும் அடங்கும் என்றும், ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா, சிரியா, வியட்நாம் ஆகிய ஐந்து நாடுகளும் இந்தப் பட்டியலில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டு அறிக்கையானது, வெளியுறவுத்துறையின் சிறப்பு கண்காணிப்பு பட்டியலில் (SWL) இடம் பெறுவதற்கான மேலும் 11 நாடுகளைப் பரிந்துரைத்துள்ளது. இவற்றில், அல்ஜீரியா மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (CAR) ஆகியவை கடந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அஜர்பைஜான், எகிப்து, இந்தோனேஷியா, ஈராக், கஜகஸ்தான், மலேசியா, துருக்கி, உஸ்பெகிஸ்தான் ஆகியவை மற்ற 8 நாடுகள் ஆகும். இதில் 2022-ஆம் ஆண்டிலிருந்து மோசமடைந்து வரும் மதச் சுதந்திர நிலைமைகள் காரணமாக முதல் முறையாக இலங்கையும் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது.
மேலும் நிக்கராகுவாவில் அரசுத் தலைவர் டேனியல் ஒர்டேகாவின் ஆட்சியில் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள் துன்புறுத்தப்பட்டது அல்லது உக்ரைன் மீதான இரஷ்யாவின் படையெடுப்பிற்கு மத்தியில் நிகழும் மனித உரிமை மீறல்கள் போன்றவை உட்பட, இந்த 28 நாடுகளிலும் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கு நிலவும் கடினமான சூழ்நிலைகளைக் குறித்தும் இந்த அறிக்கை விவரிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்