தடம் தந்த தகைமை – அரசியாக மகுடம் சூட்டப்பட்ட எஸ்தர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் சூசான் தலைநகரில் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்தார் மன்னர் அகஸ்வேர். அவர் சூசான் தலைநகரில் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிந்தார். பேரழகியான அரசி வஸ்தியின் எழிலை மக்களும் தலைவர்களும் காணுமாறு அவளை அரச மகுடம் சூட்டப்பட்டவளாகத் தம்முன் அழைத்து வரும்படி ஒரு நாள் மன்னர் கட்டளையிட்டார். ஆனால் அரசி வஸ்தி அண்ணகர்களின் வழியாக வந்த மன்னரின் சொல்லுக்கு இணங்க மறுத்துவிட்டாள். எனவே மன்னர் கடுஞ்சினமுற்றார். பெரும் கோபக்கனல் அவர் மனத்தில் பற்றி எரிந்தது.
தனக்கேற்ற வேறு பெண் தேடினார். சூசான் அரண்மனையில் மொர்த்க்காய் என்னும் பெயர்கொண்ட யூதர் ஒருவர் இருந்தார். மொர்தக்காய் ‘அதசா’ என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார். மன்னரின் மனைவியாகும்படி அரண்மனைக்கு அழைத்துவரப்பட்ட பெண்கள் அனைவரிலும் எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார். எனவே அவர் அவரது தலைமீது அரசியின் மகுடம் வைத்து, வஸ்திக்குப் பதிலாக எஸ்தரை அரசி ஆக்கினார். மொர்தக்காய் கட்டளையிட்டவாறு, எஸ்தர் தம் வழிமரபையோ இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார்.
மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெரேசு, என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வேரைத் தாக்க வகை தேடினர். இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார். உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப்பின் மன்னர் அகஸ்வேர் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானை உயர்த்தி, அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார். மன்னரின் ஆணைப்படி, அரசவாயிலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களும் தலை வணங்கி ஆமானைப் பணிந்தனர். ஆனால் மொர்தக்காய் மட்டும் அவன்முன் மண்டியிட்டு வணங்கவில்லை. அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், '‘நீ ஏன் மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை?'’ என வினவினர். தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க, விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர். மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது. மொர்தக்காயை மட்டும் அழிக்க அவன் விரும்பவில்லை. அவர்தம் இனத்தார் யார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், அகஸ்வேரின் அரசெங்கும் இருந்த அவர்தம் இனத்தாராகிய யூதர் அனைவரையும் அழிக்க ஆமான் வழிதேடினான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்