தடம் தந்த தகைமை - கைம்பெண்ணின் மறுமணம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறை உறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, “இங்கே வந்து சற்று உட்காரும்” என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார். பிறகு போவாசு ஊர்ப்பெரியோருள் பத்துப் பேரை வரவழைத்து, “இங்கே சற்று உட்காருங்கள்” என்றார். அவர்கள் உட்கார்ந்தவுடன் போவாசு அந்த உறவினரை நோக்கி, “நம் நெருங்கிய உறவினரான எலிமலேக்கிற்குச் சொந்தமான துண்டு நிலம் ஒன்று இருப்பது உமக்கு தெரியும் அல்லவா? மோவாபு நாட்டிலிருந்து திரும்பி வந்திருக்கும் நகோமி இப்போது அதை விற்கப் போகிறார். இதை உம் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இங்கு அமர்ந்திருப்பவர் முன்னிலையிலும் என் உறவின்முறைப் பெரியோர் முன்னிலையிலும் அந்த நிலத்தை நீர் வாங்கிக் கொள்ளும்; விருப்பமில்லையெனில் சொல்லிவிடும்.
ஏனெனில், அதை மீட்கும் உரிமை முதலில் உமக்கும் உமக்குப் பின் எனக்கும் உண்டு; வேறெவர்க்கும் இல்லை” என்றார். அதற்கு அவர், “சரி வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன்” என்றார். போவாசு அவரிடம், “ஆனால், நகோமியிடமிருந்து இந்த நிலத்தை நீர் வாங்கும் நாளில், இறந்தவனின் மனைவியான மோவாபியப் பெண் ரூத்தை உம் மனைவியாக ஏற்றுக்கொள்கின்றீர் என்பதைத் தெரிந்து கொள்ளும். இறந்துபோனவருக்கு வழிமரபு தோன்றுவதற்காகவும் அவரது குடும்பச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருப்பதற்காகவும் நீர் இதைச் செய்ய வேண்டும்” என்றார். அவரோ, “என்னால் அந்த நிலத்தை வாங்க இயலாது. ஏனெனில், இதனால் என் குடும்பத்திற்குரிய உரிமைச் சொத்து குறைந்து போகும். நீரே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளும். என்னால் நிலத்தை வாங்கவே இயலாது” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்