தேடுதல்

சிம்சோனின் தலைமுடியை வெட்டும் தெலீலா சிம்சோனின் தலைமுடியை வெட்டும் தெலீலா 

தடம் தந்த தகைமை - சிம்சோனும் தெலீலாவும்

தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள் தெலீலா. எனவே, எதையும் மறைக்காமல் சிம்சோன் அவளிடம் தன் பலம் பற்றிக் கூறினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார் சிம்சோன். அவள் பெயர் தெலீலா. பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம், சென்று, “நீ அவனை மயக்கி, எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது; எப்படி நாங்கள் அவனை வென்று கட்டி வதைத்து அடக்கமுடியும் என்று கண்டுபிடி. நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக் காசு தருவோம்” என்றனர். தெலீலா சிம்சோனிடம், “எதில் உமது பெரும் வலிமை உள்ளது என்றும், எப்படி உம்மைக் கட்டி அடக்கமுடியும் என்றும் என்னிடம் சொல்லும்” என்றாள். சிம்சோன் அவளிடம், “ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார். பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம் ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளைக் கொண்டு வந்தனர். அதைக் கொண்டு அவள் அவரைக் கட்டினாள். ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருக்க, அவள் அவரிடம், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். நெருப்புப்பட்டதும் சணல்கயிறு அறுவது போன்று அவர் நரம்புக் கயிறுகளை அறுத்தெறிந்தார். அவரது ஆற்றலின் இரகசியம் புலப்படவில்லை.

தெலீலா சிம்சோனிடம், “இதோ! நீர் என்னை அற்பமாக நினைத்து என்னிடம் பொய்கள் சொல்லிவீட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று இப்பொழுது தயவு செய்து எனக்குச் சொல்லும்” என்றாள். அவர் அவளிடம், “இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதர்ரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார். தெலீலா புதிய கயிறுகளை எடுத்து அவற்றால் அவரைக் கட்டிய பின், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருந்தனர். நூல்கயிற்றைப்போல் அவர் தம் கைகளிலிருந்து அவற்றை அறுத்தெறிந்தார்.

தெலீலா சிம்சோனிடம், “இதோ நீர் என்னை அற்பமாக நினைத்து, என்னிடம் பொய்கள் சொல்லிவிட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று எனக்குச் சொல்லும்” என்றாள். அவர், “என்னுடைய ஏழு மயிர்க் கற்றைகளையும் பாவுநூலால் பின்னினால் போதும்” என்றார். ஆகவே, அவர் தூங்கும்பொழுது தெலீலா அப்படியே செய்து, முளை அடித்து மாட்டி, “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து எழுந்து, முளையோடு பாவுநூலைப் பிடுங்கி எறிந்தார்.

அவள் அவரிடம், “மனம் திறந்து பேசாமல் நீர் எம்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை” என்றாள். அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார். எனவே, எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது: “சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில், பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்” என்றார்.

அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள். எனவே, அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு, “உடனே வாருங்கள்; அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார்” என்று ஆளனுப்பினாள். பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர். அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள். ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான். அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது. எனவே, அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள். அவள், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்!” என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து “முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன்” என்று சொன்னார். ஏனெனில், ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார் என்பதை அவர் உணரவில்லை. பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள். அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர். சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்தினர். மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2023, 12:52