உக்ரைனில் குடி நீருக்கு உறுதி வழங்கும் கிறிஸ்தவ உதவி அமைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உக்ரைன் மீது இரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைனின் Nova Kakhovka அணை சேதமாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்களுக்கு சுத்தக் குடிநீர் கிடைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது Christian Aid அமைப்பு.
உலக அளவில் வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்துச் செயல்படுத்திவரும் கிறிஸ்தவ அமைப்பான Christian Aid, கடந்த செவ்வாய்க் கிழமையன்று, Nova Kakhovka அணை போரில் சேதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அணையிலிருந்து வெளியேறிய நீர் இறந்த மிருகங்களின் உடல்களைச் சுமப்பதாலும், கழிவு நீருடன் கலப்பதாலும் பெரும் நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
சேதமாக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறிய தண்ணீர் 80 சிறு நகர்கள் மற்றும் ஊர்களுக்குள் புகுந்து 17 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேரைப் பாதித்துள்ளதாக ஐ.நா. நிறுவனமும் தன் கவலையை வெளியிட்டுள்ளது.
அணை நீர் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கொடிய நோய் பரவலுக்கும் உள்ளாகும் ஆபத்து இருப்பதால் அம்மக்களைக் காக்கும் பொருட்டு பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து உணவும் சுத்தக் குடிநீரும் வழங்கிவருவதாக Christian Aid அமைப்புத் தெரிவிக்கிறது.
அணை நீரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற உதவி வரும் Christian Aid அமைப்பு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளையும் ஆற்றிவருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்