தேடுதல்

மொசாம்பிக்கின், Maputo நகரிலுள்ள புனித அமலோற்பவ அன்னை பேராலயம் மொசாம்பிக்கின், Maputo நகரிலுள்ள புனித அமலோற்பவ அன்னை பேராலயம்  (ANSA)

மொசாம்பிக்கில் மதங்களுக்கு இடையேயான அமைதி முயற்சி!

வன்முறைக் குறித்து கத்தோலிக்கத் திருஅவை கவலை கொள்வது மட்டுமல்ல, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தீவிரமான ஈடுபாட்டையும் கொண்டுள்ளது : அருள்பணியாளர் Eduardo Roca

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வடக்கு மொசாம்பிக்கில் ஆயுதமேந்திய வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் அமைதி முயற்சியைத் தொடங்க உள்ளதாக அதன் தலத்திருஅவை கூறியுள்ளது.

Cabo Delgado பகுதியில் 2017-இல் தொடங்கிய போர்குணமிக்க கிளர்ச்சியால் ஏற்பட்ட பதட்டங்களைத் தணிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தப் புரட்சியின் காரணமாக 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன் 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்நாட்டின் தலத்திருஅவை தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அருள்பணியாளர் Eduardo Roca அவர்கள், வன்முறைக் குறித்துக் கத்தோலிக்கத் திருஅவை கவலை கொள்வது மட்டுமல்ல, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தீவிரமான ஈடுபாட்டையும் கொண்டுள்ளது என்றும் ACN எனப்படும் தேவையில் இருக்கும் தலத்திருஅவைகளுக்கு உதவும் பிறரன்பு அமைப்பிடம்  கூறியுள்ளார்.

வரவிருக்கும் மாதங்களில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில், "உலக அமைதி மற்றும் ஒன்றித்து வாழ்வதற்கான மனித உடன்பிறந்த உறவு குறித்த ஆவணத்தை ஆய்வு செய்து மேம்படுத்துவதற்காக, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் 50 தலைவர்களுடன் கூடிய சந்திப்புகளும் அடங்கும் என்றும் உரைத்துள்ள அருள்பணியாளர் Roca அவர்கள்,  இது அபுதாபியில் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அல்-அஸ்ஹரின் பெரிய இமாம் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பங்குத்தள அருள்தந்தையர்கள் அனைவரையும் மதங்களுக்கு இடையேயான குழுக்களை உருவாக்க நாங்கள் ஊக்குவித்து வருவதுடன், அனைத்து வட மாவட்டங்களிலும் மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிக்கவும், மக்கள் ஒருவரையொருவர் பாதுகாப்பாகச் சந்திக்கவும் பேசவும் உறவு பாலங்களை உருவாக்கவும் நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணியாளர் Roca.

உள்ளூர் பங்குத்தளத்தின் அருள்பணியாளரும் ACN எனப்படும் தேவையில் இருக்கும் தலத்திருஅவைகளுக்கு உதவும் பிறரன்பு அமைப்பின்  திட்டப் பங்காளருமான அருள்பணியாளர் Eduardo Roca, பெம்பா மறைமாவட்டத்தில், 2017 ஆம் ஆண்டில், இந்த முயற்சியை மேற்பார்வையிடும் அமைதிக்கான அனைத்துலக மத மையத்தை நிறுவினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2023, 13:57