தேடுதல்

மணிப்பூரில் இராணுவத்தார்  மணிப்பூரில் இராணுவத்தார்   (AFP or licensors)

பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு உதவும் கிளரீசிய மறைப்பணியாளர்

மெய்டி இந்து மதத்தினர் மற்றும் குக்கி கிறிஸ்தவ மதத்தினருக்கு இடையிலான இவ்வன்முறையில் பெரும்பாலும் குக்கி இனமக்களே பாதிப்படைந்துள்ள நிலையில் எண்ணற்ற குக்கி மக்கள் வீடிழந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மணிப்பூரில் நடைபெற்றுவரும் பழங்குடியின மக்களுக்கிடையேயான வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் நலவாழ்வுப் பொருட்களுக்கான நிதிஉதவியைப் பெற்று வடகிழக்கு இந்திய கிளரீசியன் சபை அருள்பணியாளர்கள் உதவி வருவதாகத் தெரிவித்துள்ளார் அருள்பணி Joseph Mappilaparambil.

கடந்த மேமாதம் முதல் மணிப்பூரில் நடந்துவரும் மெய்டி மற்றும் குக்கி பழங்குடியின மக்களிடையேயான மோதலில் ஏறக்குறைய 100பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் நிவாரண உதவி பற்றி இவ்வாறு தெரிவித்துள்ளார் கிளரீசிய அருள்பணியாளரும் நவ்ஜான் என்னும் அமைப்பின் இயக்குனருமான அருள்பணி Joseph Mappilaparambil.

மெய்டி இந்து மதத்தினர் மற்றும் குக்கி கிறிஸ்தவ மதத்தினருக்கு இடையிலான இவ்வன்முறையில் பெரும்பாலும் குக்கி இனமக்களே பாதிப்படைந்துள்ள நிலையில், எண்ணற்ற குக்கி மக்கள் வீடிழந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் Mappilaparambil

நிவாரணப் பணிகளுக்காக, இந்தியாவின் அனைத்து கிளரீசிய சபை அருள்பணியாளர்கள், கிளரீசியன் முன்னாள் மாணவ அமைப்பினர், பிறசபை  கிறிஸ்தவர்களுடன், இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் மாப்பில்லாபரம்பில்.

கவுகாத்தியில் உள்ள மூன்று முகாம்களில் வசிக்கும் 300 பேருக்கு மருத்துவம், நலவாழ்வு,  உடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து காகோபி மாவட்டத்தில் உள்ள சைகுல் முகாம்களில் 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கும் தன்னார்வலர்களின் துணையுடன் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான குக்கி மக்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்றும், அரசு மற்றும் பிற இயக்கங்களிலிருந்து இதுவரை எந்த ஒரு உதவியும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அருள்பணி மாப்பில்லாபரம்பில், ஜூன் மாதத் துவக்கத்தில் குவஹாத்தியில் உள்ள போர்ஜர் புனித கிளாரட் ஆலயம் மற்றும் பள்ளி மைதானத்தில், கிளாரீசியன் மறைப்பணியாளர்கள் இணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்தனர் என்றும் இதில் பல்சமயத்தினர் கலந்துகொண்ட மெழுகுதிரி ஏந்திய பவனி நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.

அடிப்படைத் தேவைப் பொருட்கள், கொசுவலைகள், குழந்தைகளுக்கான உணவு மற்றும் துணிகளை பொதுமக்களிடமிருந்து சேகரிப்பதாகவும், நோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களையும் மருத்துவ மையங்களையும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மாப்பில்லாபரம்பில்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2023, 13:04